Namvazhvu
கந்தமால் மாவட்டம் அரசின் புறக்கணிப்புக்கு மத்தியில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை
Friday, 26 Aug 2022 06:04 am
Namvazhvu

Namvazhvu

இந்தியாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கொடூர வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகள் நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கிறிஸ்தவத் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்களும், இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பும் இணைந்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்து தீவிரவாதிகளிடம் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்த விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்து தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெளியிடும் வெறுப்பைத் தூண்டும்  விளம்பரங்கள், ஆலயங்கள் தாக்கப்பட காரணமாகின்றன எனவும், இம்மனுவில் குறிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில்இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர், மற்றும், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி, கந்தமால் நாள் என கடைப்பிடிக்கப்பட்டுவரும்வேளை, ஒடிசா மாநில உள்துறை அமைச்சரும், இந்து தீவிரவாதிகளிடம் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து உச்ச நீதி மன்றத்திற்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு இம்மாதம் 25ம் தேதி விசாரணைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்சகோதரி மீனா பார்வா

இதற்கிடையே, 2008ஆம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்களின்போது, அத்தீவிரவாதிகளால் பாலின வன்கொடுமைக்கு உள்ளாகிய அருள்சகோதரி மீனா பார்வா அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையும், பகைவரை மன்னித்த மனநிலையுமே தொடர்ந்து வாழ்வதற்கு உதவியுள்ளன என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 23, வருகிற செவ்வாயன்று கடைப்பிடிக்கப்படும் கந்தமால் நாளையொட்டி ஆசியச் செய்தியிடம் பேசிய அருள்சகோதரி மீனா பார்வா அவர்கள், தான் வன்கொடுமைக்கு உள்ளாகி அரை நிர்வாணமாய் தெருவில் இழுத்துவரப்பட்டேன், ஆயினும் தான் உயிர்பிழைத்தது புதுமையே எனவும் தெரிவித்துள்ளார்.