Namvazhvu
ஆகஸ்ட் 28 அருள்பணியாளரின் வாகனம் எரித்து வன்முறை
Friday, 02 Sep 2022 04:58 am
Namvazhvu

Namvazhvu

ஆகஸ்ட் 28 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ததுவான கிராமத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டு நிகழ்வில் வன்முறை செய்த  150 நிஹாங்குகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது FIRபதிவு செய்யப்பட்டது. நிஹாங்குகள் என்பவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள். தலையிலே நீல நிற தலைப்பாகையும், உடலில் பாரம்பரிய ஆயுதங்களையும் கொண்டு “அழியாத்தன்மையுள்ளவர்கள்” என்று எண்ணத்தோடு வாழ்ந்து வருபவர்கள்.

இந்த வன்முறை சம்பவம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு 4 நிஹாங்குகள், ஆகஸ்ட் 31 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் தரான் மாவட்டத்தில் உள்ள பட்டி என்னும் ஊரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தின் திருவுருவ சுரூபங்களையும், அவ்வாலயத்தை நிர்வகித்து வரும் அருட்பணியாளருடைய நான்கு சக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

பங்குத்தந்தை தாமஸ் பூச்சலில் “உண்மையாகவே இது ஒரு அதிர்ச்சியை தரக்கூடிய நிகழ்வு. ஏறக்குறைய காலை 12.45 மணிக்கு  4 நிஹாங்குகள் உள் நுழைந்து, எங்கள் இரவு காவலர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அச்சுறுத்தினார்கள். ஒருவர் ஆண்டவர் இயேசுவினுடைய சுரூபத்தின் தலையை பலமுறை கோடாரியால் வெட்டி தனியே எடுத்து வைத்தார். பிறகு எங்களது வாகனத்திற்கு தீ வைத்த பின்பு, “நாங்கள் காலிஸ்தானிஸ்” என்று சத்தம் எழுப்பிக் கொண்டே அன்னை மரியாளினுடைய சுரூபத்தின் தலையை வெட்டி அவர்களோடு எடுத்துச் சென்றார்கள். இவை அனைத்துமே சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றன” என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகாலையிலேயே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பிறகு காவல்துறையினர் வந்து அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

அருட்தந்தை தாமஸ் பூச்சிலில் பங்கு மக்களிடம், “ஆண்டவர் இயேசுவிடமும் அன்னை மரியாளிடமும் அமைதிக்காகவும் நம்மை காக்கும் படியும் உண்மையான குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பு கிடைக்கும் படியும் ஜெபியுங்கள்” என்று கூறினார். ஜலந்தர் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆக்னெல்லோ கிராசியஸ் இவ்வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களையும் மூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.பஞ்சாபில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையானது சமீபகாலமாக அதிக அளவில் நடந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.