Namvazhvu
புதன் மறைக்கல்வியுரை தெளிந்து தேர்தலுக்கு கடவுளோடு அன்புறவு....
Monday, 05 Sep 2022 09:35 am
Namvazhvu

Namvazhvu

ஆகஸ்ட் 31 ஆம் தேதி, வத்திக்கானில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, தெளிந்து தேர்தல் என்ற புதியதொரு தலைப்பில் தன் புதன் பொது மறைக்கல்வியுரையை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார். கடந்த பதினெட்டு புதன் பொது மறைக்கல்வியுரைகளில் முதுமை பற்றிய தன் சிந்தனைகளை வழங்கிவந்த திருத்தந்தை, தெளிந்து தேர்தல் என்றால் என்ன? அது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையப்படுத்தி தன் மறைக்கல்வியுரையை முதலில் தொடங்கினார். இம்மறைக்கல்வியுரைக்கு திருத்தந்தை தெரிவுசெய்த, புதையல் உவமை, வலை உவமை ஆகிய இரண்டும் மத்தேயு நற்செய்தி 13:44,47-48 லிருந்து வாசிக்கப்பட்டன.

புதன் மறைக்கல்வியுரை

 நம் மறைக்கல்வியுரையில் தெளிந்து தேர்தல் என்ற புதிய பகுதியைத் தொடங்குகிறோம். நம் ஒவ்வொருவரையும் பொருத்தவரை, தெளிந்து தேர்வு செய்தல் முக்கியமான ஒரு செயலாகும். ஏனென்றால் தேர்வுசெய்தல், வாழ்வின் இன்றியமையாத அங்கமாக இருக்கின்றது. உணவு, உடை, படிப்பு, வேலை, உறவு என அனைத்தையும் தேர்வு செய்வதில் நம் வாழ்வின் திட்டம் தெளிவாக உணரப்படுகிறது. அதேபோல் கடவுளோடுள்ள நம் உறவும் இருக்கின்றது. இயேசு, நற்செய்தியில் சாதாரண வாழ்விலிருந்து உருவகங்களைக் குறிப்பிட்டு, தெளிந்து தேர்வு செய்தல் பற்றி நம்மிடம் பேசுகிறார். எடுத்துக்காட்டாக, நல்ல மீன்களைத் தெரிவுசெய்து, கெட்டவற்றைப் புறக்கணிக்கின்ற மீனவர், பல முத்துக்களில் மிகவும் மதிப்புமிக்க முத்தை இனம்காணும் வர்த்தகர் மற்றும் நிலத்தில் உழுகின்றபோது அங்கு மறைந்திருந்த புதையலைக் கண்டுபிடிப்பவர் (காண்க. மத் 13:44-48). இயேசு, இவர்கள் செயல்படுவதை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தி, நம் அன்றாட வாழ்வில் கடவுளின் திட்டத்திற்கேற்ப வாழ்வை வாழ, ஞானத்தோடு தெளிந்து தேர்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறார். உண்மையான தெளிந்து தேர்வு செய்தலுக்கு, அறிவு, உள்ளுணர்வு, அனுபவம் ஆகியவற்றோடு ஞானமுள்ள இதயம், உறுதியான அர்ப்பணம் மற்றும் விடாமுயற்சியும் தேவைப்படுகின்றன. கடவுள் நமக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தைச் செயல்படுத்தும் ஒரு முயற்சியாக, நமக்கும், நம் உலகிற்கும் கடவுள் வகுத்துள்ள திட்டத்தில் நம் இடத்தைக் கண்டுணரும் வழிகளை ஆன்மீக வாழ்வில் தெளிந்து தேர்வு செய்கிறோம். நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் தீர்மானங்கள், இவ்வுலகை கடவுள் விரும்புவதுபோல், ஓர் அற்புதமான, வியக்கத்தக்க தோட்டமாக அல்லது, வாழ்விழந்த பாலைநிலமாக அமைக்கும். கடவுளோடு நமக்குள்ள அன்புறவு மற்றும் நம் மனிதச் சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து பிறக்கும் உண்மையான தெளிந்து தேர்வு செய்தல், ஓர் ஆழமான ஆன்மீக மகிழ்ச்சியையும், நிறைவையும் கொணரும். தூய்மை, ஞானம், நற்செய்தியின் மீட்பளிக்கும் உண்மைக்குப் பிரமாணிக்கம் ஆகியவற்றில் வாழ்வதற்கு தினமும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் தூய ஆவியார் நம்மை ஒளிரச்செய்யவும், வழிநடத்தவும் அவரது உதவியை நாடுவோம்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் தெளிந்து தேர்வு செய்வதற்கு ஆண்டவரோடு நெருங்கிய உறவு தேவை என்பதை வலியுறுத்தி, புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.