பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் முதன் முறையாக அதிகமாகப் பெய்யும் பருவமழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும்வேளை, இதில் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கு நிவாரணநிதி திரட்ட நன்மனம்கொண்டோர் அனைவரும் உதவுமாறு, கராச்சி பேராயர் பென்னி அவர்களும், ஹைதராபாத் ஆயர் சாம்சன் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டிற்குப்பின் முதன்முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நாடெங்கும் ஏறத்தாழ மூன்று கோடியே முப்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 1,400 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். நாட்டின் முக்கிய ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது, 7,93,000 வீட்டு விலங்குகள் இறந்துள்ளன. ஏறத்தாழ 8,10,000 ஹெக்டேர் அறுவடை நிலங்கள் சேதமடைந்துள்ளன. 3,600 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் ஆயிரம் கோடி டாலர் பெறுமான சேதம் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.