Namvazhvu
ஞாயிறு தோழன் ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு விப 32 :7-11, 13-14, 1 திமொ 1:12-17, லூக் 15:1-32
Tuesday, 06 Sep 2022 12:59 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

அறிவுத் தெளிந்தவர்களாக ஆண்டவரின் அழைப்பை ஏற்று நம்மையே அர்ப்பணிக்க இன்றையத் திருப்பலிக் கொண்டாட்டம் அழைப்புவிடுக்கிறது. பரபரப்பான இன்றைய உலகில் கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. கடவுளுக்கு எதிராக கலகம் செய்கிற உலகமாகவே இது மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய சமூக, பொருளாதார, அறிவியல் வளர்ச்சி இறைவனிடமிருந்து மானுடத்தை அந்நியப்படுத்தியுள்ளது. படைத்தவருக்கும் படைப்புக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பாவ உணர்வு என்பது குறைந்து வருகிறதுமழுங்கிய மனநிலை என்பது நமக்குள்ளே வளர்ந்து வருகிறது. வணங்கா கழுத்துள்ள மக்களாக இன்றைய மனிதர்கள் மாறி வருகின்றனர். வணங்கா கழுத்து என்பது ஆணவத்தின் அடையாளம்; தான் தோன்றித்தனத்தின், சுயநலத்தின் அடையாளம். இறைவன் இன்றும் வணங்கா கழுத்துள்ள மக்களைக் குறித்து கவலைப்படுகிறார். அவரது கோபம் இன்றும் நீடிக்கிறது. இருப்பினும் இரக்கம் மிகுந்தவர் நம்மை முழுமையாக அன்புச் செய்கிறார். நாம் மனந்திரும்ப வேண்டும் என்றே இறைவன் விரும்புகிறார்; அதற்காகவே அவர் ஆவலுடன் காத்திருக்கிறார். எந்த நாணயமும் தொலைந்துபோகக்கூடாது; எந்த ஆடும் காணாமல் போகக்கூடாது; எந்த மகனும் ஊதாரி மகனாக தன்மானம் இழக்கக்கூடாது என்றே இறைவன் விரும்புகிறார். அறிவுத் தெளிந்தவர்களாக நாம் அவரிடம் சரணாகதி அடைந்தால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை; நாம் வருந்தி, திருந்தி வருகிறபோது அனைவருக்கும் விருந்தளித்து அவர் கொண்டாடுகிறார். இன்றும் நம் ஆண்டவர் இயேசு விருந்து படைக்கின்றார்; நம்மை அழைக்கின்றார்; நாமும் அறிவுத் தெளிந்தவர்களாய் மனம் வருந்தி, திருந்தி வந்து இப்பந்தியில், இத்திருவிருந்தில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

விடுதலைப் பயண நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கொண்டுவந்த இஸ்ராயேல் மக்கள் வணங்கா கழுத்துள்ள மக்களாக மாறியதைக் குறித்து ஆண்டவர் வருந்துகிறார்; கோபங்கொள்கிறார். இருப்பினும் மோசே இம்மக்களுக்காக வைத்த பரிந்துரையை ஆண்டவர் ஏற்று, தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தீங்கு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார் என்று விளக்குகிறது. கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திமோத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பாவிகளுள் பாவி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருத்தூதர் புனித பவுல், பாவிகளை மீட்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் என்பதை அனுபவித்து உணர்ந்து, மிகுந்த உணர்ச்சியோடு எடுத்துரைத்து, தான் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தன் அனுபவத்தை ஒரு செப வடிவில் மிக அழகாகவும் அழுத்தம்திருத்தமாகவும் பதிவுச் செய்கிறார். மனமொன்றித்து இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எம் திரு அவையை தலைமையேற்று வழிநடத்தும் திருத்தந்தை, கர்தினால்கள்ஆயர்கள்அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் அனைவரும் நல்லாயனுக்குரிய மனநிலையில், தந்தைக்குரிய அன்பை எப்போதும் வெளிப்படுத்தி, காணாமற்போன ஆட்டைத் தேடியும் ஊதாரி மகனை மீண்டும் வரவேற்றும், பாவிகளை ஆரத்தழுவியும் தங்கள் மறைப்பணித்தளங்களில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆகஸ்டு  மாதம் 28 ஆம் தேதி, அகில உலகத் கத்தோலிக்கத் திரு அவைக்காக உலகளவில் திருத்தந்தை அவர்கள் தேர்ந்து கொண்டு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அனைத்து கர்தினால்களுக்காகவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கோவா பேராயர் கர்தினால் பிலிப் நேரி மற்றும் ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோனி பூலா ஆகியோருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் திருத்தந்தையோடு இணைந்து உடன் உழைத்து திரு அவையின் வளர்ச்சிக்கு உழைக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவிவிலிய மாதத்தைச் சிறப்பிக்கிற இந்த செப்டம்பர் மாதத்தில், நாங்கள் எங்கள் வாழ்வில் உயிருள்ள, ஆற்றல்வாய்ந்த, இரு புறமும் கருக்கு நிறைந்த இறைவார்த்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசித்து தியானிக்கவும், வாசித்ததை எங்கள் வாழ்வாக்கவும், நற்செய்தியை நானிலமெங்கும் எங்கள் சொல்லாலும் செயலாலும் பறைசாற்றவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இக்கல்வி ஆண்டின் காலாண்டுப் பருவத்தை நிறைவுச் செய்யும் எம் மாணவ -மாணவிகள் தங்களின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை கசடற கற்கவும்  கற்றதையும் பெற்றதையும் நடைபெறும் பருவத்தேர்வுகளின் போது சிறப்பாக எழுதி தேர்ச்சிப் பெறவும், பொறியியல் கலந்தாய்வில் இடம்பெறும் இளைஞர்களுக்கு எதிர்பார்க்கிற துறைகளும் கல்லூரிகளும் கிடைக்கப்பெறவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.