Namvazhvu
போர்த்துக்கல் நாட்டு தொலைக்காட்சியின் CNN அலைவரிசை திரு அவையில் இடம்பெறும் முறைகேடுகள், ஒன்றிப்புக்கு இடையூறு
Monday, 12 Sep 2022 09:01 am
Namvazhvu

Namvazhvu

திரு அவையில் இடம்பெறும் முறைகேடுகள், ஒன்றிப்புக்கு இடையூறு

திரு அவையில் சில ஆண்கள் மற்றும் பெண்களால் இடம்பெறும் அதிகார அத்துமீறல்பாலியல் முறைகேடுகள் போன்றவற்றால், திரு அவை துன்புறுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

போர்த்துக்கல் நாட்டு தொலைக்காட்சியின் CNN அலைவரிசைக்கு அளித்துள்ள பேட்டியில், அந்நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள், உரையாடலின் முக்கியத்துவம், ஒன்றிணைந்து பயணம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றம், திரு அவையில் சில மனிதர்களின் பாலியல் முறைகேடுகள், உக்ரைனில் அமைதி போன்ற தலைப்புகளில், திருத்தந்தை பிரான்சிஸ் தன் எண்ணங்களை எடுத்துரைத்துள்ளார்.

சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள், ஒருபோதும் சகித்துக்கொள்ளவே முடியாதவை என்றும், திரு அவையின் ஆண்களும், பெண்களும், அவர்கள் அருள்பணியாளராகவோ, இருபால் துறவறத்தாராகவோ, பொதுநிலையினராகவோ யாராக இருந்தாலும், அதிகார வரம்பு மீறல், கொடிய தீமை என்பதை தெளிவாகக் கூற விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

திரு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் பணிபுரியவும், ஒன்றிப்பை உருவாக்கி அதை வளர்க்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை, திரு அவையில் இடம்பெறும் முறைகேடுகள் அனைத்தும், இவ்வொன்றிப்பை எப்போதும் அழிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

உலக இளையோர் நாள்

போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் 2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளையோர் நாள் பற்றியும் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் வாழ்கின்ற இளையோரை ஒன்றிணைத்து, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி, அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் இவ்வுலக இளையோர் நாளை உருவாக்கிய திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அவர்களுக்கே அனைத்துப் பெருமையும் சாரும்  என்றார்.

இளையோரிடம் விளங்குகின்ற படைப்பாற்றல், அவர்கள் நிகழ்காலத்தில் வேரூன்றி, வருங்காலத்தை நோக்குவதன் அடையாளமாக உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, 2023 ஆம் ஆண்டு உலக இளையோர் நாளுக்கு ஒரு திருத்தந்தை செல்வார், அவர் பிரான்சிசாகவோ, 24 ஆம் யோவானாகவோ இருக்கலாம். அந்நிகழ்வு நடைபெறும்போது ஒரு திருத்தந்தை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக நகைச்சுவையோடு கூறியுள்ளார்.

தங்களின் கலாச்சாரத்திலிருந்து வருகின்ற இளையோரிடம் அவர்களின் தாய்மொழியில் பேசவேண்டியது முக்கியம். இதனால் அவர்கள் காரியங்களை விளக்கும் முறைகளை அவர்கள் பாணியில் புரிந்துகொண்டு, அவர்களுக்குப் புரியும்முறையில் பதிலளிக்க முடியும் என்பதையும் திருத்தந்தை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

செபிக்கும் முறை

தான் செபிக்கும் முறை, உரையாடலின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, தினமும் திருப்புகழ்மாலை மற்றும், செபமாலை செபிக்கின்றேன், விவிலியத்தின் அடிப்படையில் தியானம் செய்கிறேன் என்றும் கூறினார்.

கடவுள் திருமுன் என்னை வைக்கின்றேன், சில நேரங்களில் திசை திருப்பப்படுவேன். ஆயினும், கடவுள் அவ்வாறு இல்லாமல், என்னைத் தேற்றுகிறார் என திருத்தந்தை தன் செப வாழ்வு குறித்துக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி போர்த்துக்கல் நாட்டு தொலைக்காட்சியின் CNN அலைவரிசைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி, செப்டம்பர் 05 ஆம் தேதி திங்கள் இரவில் ஒளிபரப்பப்பட்டது.