Namvazhvu
உச்ச நீதிமன்ற உத்தரவு பேராயர் மச்சோடாவின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
Wednesday, 14 Sep 2022 10:16 am
Namvazhvu

Namvazhvu

"உச்ச நீதிமன்ற உத்தரவில் நாங்கள் திருப்தி அடைகிறோம்" என்று பெங்களூர் பேராயர் பீட்டர் மச்சாடோ, செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை, துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பெங்களூர் பேராயர் பீட்டர் மச்சாடோ தலைமையில் தொடுக்கப்பட்ட, பொதுநல வழக்கின் (PIL) உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்குமாறு இந்திய உச்சநீதி மன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு எட்டு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு, பொதுநல மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் போலியானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. ஆனால் நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்ய மறுத்து, உண்மை நிலையை அறிய இது உதவும் என்று கூறியுள்ளது.

மேலும் முதற்கட்ட போலீஸ் அறிக்கைகள், விசாரணையின் நிலை, செய்யப்பட்ட கைதுகள் மற்றும் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் போன்ற தகவல்களை அளிக்குமாறு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1 ஆம் தேதி உத்தரவிட்டது. பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் குறித்த விரிவான விவரங்களை பொதுநல சட்ட ஆலோசகர் துஷார் மேத்தா அலுவலகத்திற்கு நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறும் மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்குள் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும், அதற்கு முன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எட்டு மாநிலங்களில் இருந்து சரிபார்ப்பு அறிக்கைகளை சேகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் பொதுநல வழக்கில் 22 மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் பற்றிய விரிவான அறிக்கைகளை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். உச்ச நீதிமன்றம் பீகார், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற 8 மாநிலங்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் குறித்து விவரங்களைக் கேட்டுள்ளது,” என்று மனுதாரர்களில் ஒருவரான A.C மைக்கேல் கூறினார்.

மத்திய அரசு ஆகஸ்ட் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, எவ்வகையான இலக்கு தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும், தனிப்பட்ட பிரச்சனைகள் பொதுப்பிரச்சனைகளாக மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மனுதாரர்கள் அரசாங்கத்தின் கூற்றை மறுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து, முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, தாங்கள் சேகரித்து, சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் உண்மையானவை என்று வலியுறுத்தியுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் 500 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.