Namvazhvu
மாணவர்களின் திறமைகளை வளர்ப்பது நம் கல்வி நிறுவனங்களின் தனித்துவம் என்ன?
Thursday, 15 Sep 2022 05:40 am
Namvazhvu

Namvazhvu

இப்படியொரு கேள்வி நம்முன் எழுப்பப் பட்டால் நம்மில் பலர் அப்பொழுதுதான் அதற்கான பதிலைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிப்போம்.

ஒழுக்கம் என்பதே எங்கள் பள்ளியின் தனித்துவம் என்று ஓங்கி உரைக்கும் பள்ளிகள் சில நம்மிடம் உண்டு.

ஆனாலும், அந்த ஒழுக்க நெறியை அறிவியல் பூர்வமான, புள்ளி விபர ஆதாரங்களோடு நிரூபிக்க இயலாத நிலையில் எல்லா பள்ளிகளும் இதனை எளிதாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க இயலாது.

மேலும், மிகப்பெரிய விரிந்த பொருள் கொண்ட ஒழுக்கம் என்கிற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலைக் கொண்டுள்ள நிலையில், அதுவே எங்கள் பள்ளியின் தனித்துவம் என்று ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாட முயல்வது தனியே ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

நாட்டியம், கராத்தே, யோகா போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகள் (Extra Curricular Activites) ஏதாவது ஒன்றில் மாணவர்கள் திறமை பெற வைப்பது, எம் பள்ளியின் தனித்துவம் என்று இன்னும் சிலர் சொல்லலாம்.

வாரம் ஓரிரு மணி நேரமே நடக்கும் எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளில், மாணவர்கள் திறமை பெற வைக்க முடிந்த நம்மால், வாரம் முழுவதும் நடக்கும் கரிகுல நடவடிக்கைகளில் மாணவர்கள் என்ன திறமை பெற வைக்க முடிந்தது? என்று கேட்டால் பதிலிருக்காது.

ஆனாலும், கரிகுல நடவடிக்கைகளில் நாம் காட்டும் தனித்துவமே ஒரு பள்ளியின் அடையாளமாகவும், தலையாயக் கடமையாகவும் இருக்க முடியும்.

அங்ஙனமே, “இலாபம் ஈட்டுவதேதமது நோக்கமாகக் கொண்ட கல்வி வணிகக் கூடங்கள் போல் அன்றி, ஏழை எளிய மக்களுக்கான கல்வி சேவையில் உண்மையாகவே ஈடுபட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கென்று தனித்துவம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பயனாளர்கள் பாமர மக்கள் என்பதாலேயே ஏனோதானோ என்று கல்வியை எடுத்து செல்ல இயலாது / கூடாது .

கல்வி பணியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் மனநிறைவும், கல்வி பயிலும் ஒவ்வொருவர் வாழ்விலும் மா()ற்றமும் ஏற்படுத்தும் கல்வியை வழங்குவது நம் பள்ளிகளின் தனித்துவமாக அமைய வேண்டும்.

அந்த வகையில் கீழே காணும் பத்து செயல்பாடுகளைப் பரிந்துரைத்து, குறித்த ஆண்டுக்குள் பள்ளிகள் அதனை கவனமாகச் செயல்படுத்த சிறப்பு பயிற்சிகளை அளித்து வரும் அனுபவத்தின் அடிப்படையில் நம் பள்ளிகள் தனித்துவமாய் தலைநிமிர்ந்து நிற்க இக்கருத்துகளைப் பகிர்கின்றேன்.

1) “தாய்மொழியாம் தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத குழந்தைகளே எம் பள்ளியில் இல்லைஎன்கிற நிலையை ஏற்படுத்துவது நம் பள்ளிகளின் முதல் தனித்துவமாக அமைய வேண்டும். ஏனெனில், தாய் மொழியாம் தமிழில் எழுத, வாசிக்கத் தெரியாத குழந்தைகள் உயர்நிலை வகுப்புகளில் கூட, கணிசமான அளவில் இருக்கும் நிலையிலேயே இன்றைய கல்வி செயல்பாடுகள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. கடந்த கல்வி ஆண்டில் ஏறக்குறைய நாற்பதாயிரம் மாணவர்கள் +2 இறுதி தேர்வில் தமிழில் தோற்றுப் போனார்கள் என்கிற புள்ளி விபரம் ஒட்டுமொத்த தமிழக கல்வி துறைக்கே அவமானம் தருவதாக உள்ளது.

எனவே, “இருட்டு அது எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்... ஆனால், உம் இதயத்தில் மட்டும் அதற்கு இடம் தராதே...” 

என்பது போலஇந்த அவல நிலை எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால், கத்தோலிக்கத் திரு அவையின் பள்ளியான எம் பள்ளியில் இல்லைஎன்கிற உரிய உயரிய நிலையை, குறிப்பிட்ட காலத்தில் அடைவதில் நம் பள்ளிகள் ஒவ்வொன்றும் உறுதியாக இருக்க வேண்டும்.

தற்போது பள்ளியில் உள்ள எழுத, வாசிக்கத் தெரியாத குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை வகுப்பு வாரியாக ஒரு மாத காலத்துக்குள் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு, அடுத்த மூன்று மாத காலத்திற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றுதல். இதற்கு தேவையான முறையான பயிற்சியை ஆசிரியர்கள் பெற வழிகாட்டுதல் போன்ற ஆக்கப்பூர்வமான அவசிய செயல்களால் இதனை எளிதில் அடையலாம்.

2) குழந்தைகள் வாசிக்கத் தெரிந்த பிறகு, அந்தவாசிப்பை நேசிக்கும் வழக்கத்தை ஒவ்வொரு குழந்தையும் பெற உறுதிபடுத்துவதுநம் பள்ளிகளின் இரண்டாம் தனித்துவமாக அமைய வேண்டும்.

ஒருவனுக்கு வாசிக்கத் தெரிந்துவிட்டால், அவன் தன் கண்ணால் காண்பதையெல்லாம் வாசிக்க வாசிக்க அதன் மூலம் அவன் யோசிப்பு அதிகமாகும் என்பதற்காகவே எழுத்தை அறிவிப்பது பள்ளிகளின் தலையாயக் கடமையாக அமைக்கப்பட்டது.

ஆனால், இன்றைய கல்விச் சூழலில்வாசிக்கத் தெரிந்தும் வாசிக்கும் வழக்கம் இன்றிபள்ளிகளில் மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களும் பழகியுள்ளனர்.

ஒரு மனிதன் அறிவில், ஆளுமையில், ஆன்மீகத்தில் வளர வாசிப்பு மட்டுமே வழிவகுக்கும்.

எனவே, வாசிக்கத் தெரிந்த பிறகு, குழந்தைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகமாவது எடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல், அதற்கு முன்னுதாரணமாக, ஆசிரியர்கள் அப்பழக்கத்தை மேற்கொண்டு விளங்குதல் என்பது, நம்பள்ளிகளின் இரண்டாவது தனித்துவமாக திகழ வேண்டும்.

3) ஒரு மனிதனின் சிந்தனையை வளர்ப்பது அவனது தாய்மொழியே.

எனவே, “அவனவன் சிந்திப்பதை மொழியின் நான்கு வடிவங்களான கதை, கவிதை, கட்டுரை, நாடகம் வடிவில் வடிக்கும் திறமையை எட்டாம் வகுப்புக்குள் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தையும் (கவனிக்க ஏதோ ஒருசில குழந்தைகள் மட்டுமல்ல; மாறாக, ஒவ்வொரு குழந்தையும்) பெற்றிட உதவுவதுஎன்பது நம் பள்ளிகளின் மூன்றாவது தனித்துவமாக இருக்க வேண்டும்.

எவரெவருடைய சிந்தனைகளையெல்லாம் உள்வாங்கி திரும்ப சொல்வது அல்ல மொழி ஆற்றல்.

மாறாக, தான் நினைப்பதை மேற்குறிப்பிட்ட நான்கு வடிவத்தின் ஏதாவது ஒன்றில் வெளிப்படுத்துவதே மொழி ஆற்றல். அதாவது, 1330 திருக்குறளையும் மனனம் செய்து ஒப்பிப்பதை விட, ஒரேயொரு திருக்குறள் சுயமாக, சொந்தமாக எழுதுவதே மொழியாற்றல்.

அத்தகைய ஆற்றலைப் பள்ளியில் பயிலும் எட்டு, பத்து ஆண்டுகளில் கூட மாணவர்கள் பெற உதவவில்லை யென்றால் அந்த கற்றலினால் ஆகும் பயன் என்ன?

நடனம், பாட்டு, ஓவியம் போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளுக்காக வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் வகுப்புகள் நடத்தி வருடத்தின் இறுதியில் ஆயிரம் பேருக்கு முன்னால் அரங்கேற்றம் செய்யும் அளவிற்கு தயார் செய்யும் பள்ளிகளால், தங்களது பாடத்திட்டத்தின் தலையாய பாடமான தாய்மொழிப் பாடத்தில் வாரம் முழுவதும் வகுப்பு நடத்தி, எட்டு, பத்து ஆண்டுகளின் இறுதியில் அதை பயிலும் அனைத்து மாணவர்களும் அம்மொழியில் சுயமாக படைப்புகள் படைக்கும் திறமைகளை வழங்க முடியாதா?

எனவே, எங்கு வேண்டுமானாலும் இத்தகைய படைப்பாற்றல் திறன் கிடைக்காது போகலாம். ஆனால், எம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் படைப்பாற்றல், திறமைகளை தாய்மொழிப் பாடத்தில் பெற நாங்கள் வழிகாட்டுகிறோம் என்று, உரத்து உரைத்து தனித்துவமாக நம் பள்ளிகள் விளங்க வேண்டும்.

தம் தாய்மொழிப் புலமையுடன் படைப்பாற்றல் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளும் மாணவர்கள், நாளை தங்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற உதவும் உன்னத நிலையை அடைய சில பல சிறப்பு பயிற்சிகளை ஆசிரியர்கள் பெற்று நடைமுறைப்படுத்தினால் இதுவும் எளிதில் சாத்தியமாகும்.

4) ‘எண்ணும் எழுத்தும் கண்ணெண தகும்என்பதால்அடிப்படைக் கணித அறிவான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயல்பாடுகளுடன் அதை சார்ந்த பிற கணித செயல்பாடுகளும் தெரியாத குழந்தைகளே எம் பள்ளியில் இல்லைஎன்கிற நிலையை, எட்டாம் வகுப்பிலாவது எல்லா குழந்தைகளும் பெற்றுள்ள தனித்துவத்தை அடைவது நம் பள்ளிகளின் நான்காவது தனித்துவமாக அமைய வேண்டும்.

5) தாய்மொழி ஒருவரின் சிந்தனையை வளர்த்து படைப்பாற்றலை வெளிப்படுத்த பயனளிக்கும் என்றால், அந்த சிந்தனைகளை இன்னும் கொஞ்சம் கூர்மையாக மாற்றுவது கணிதப் பாடமே.

எனவே, வெறுமனே சில எண்கள் (Numbers), சில குறியீடுகள் (Symbols) இவற்றை பயன்படுத்திடும் திறன் பெறுவதோடு கணித பாடத்தினை முடித்து விடாமல் அக்கணித செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கூர்மையான அறிவை வளர்க்கும் விதத்தில் கணித செயல்பாடுகள் கொடுத்து அவர்களின், கூர்ந்து நோக்கும் திறன் (Observation Power), ஆய்ந்தறியும் திறன், (Analytical Skill - Logic Mind, Critical Thinking, Test Of Reasoning), முடிவெடுக்கும் திறன் (Decision making), உருவாக்கும் திறன் (Creativity) போன்ற மென்திறன்களை (Soft Skill) பெற்று வளர உதவுவது நம் பள்ளிகளின் தனித்துவமாக ஆக்க வேண்டும்.

இத்தகைய மென்திறன்களே நாளை நம் மாணவர்கள் நல்ல வேலையை பெற மட்டுமல்லாது, மேன்மை நிலையை அடைவும் உதவிடும். எனவே, இதற்கு தேவைப்படும் சில பல பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி, இதனையும் எளிதில் சாத்தியமாக்கலாம்.

6) “தமிழ் வழியில் படிக்கும் நம் பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளித்து ஓராண்டுக்குள் அவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதுநம் பள்ளிகளின் அடுத்த தனித்துவமாக அமைய வேண்டும்.

இதற்கும் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்து இதனையும் சாத்தியப்படுத்த முடியும்.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசச் செய்து விட்டால், அப்போது சமூகத்தில் ஆங்கில மீடியம் மோகம் குறைந்து, கல்விக்கான செலவும் குறையும். ஏழை, எளிய மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் ஏற்றம் பெற வழிபிறக்கும். அதற்கு நம் பள்ளிகள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

7) அறிவியல் என்பது, ஆய்ந்து அறியும் இயல். எனவே, “அறிவியல் பாடத்தை பயிலும் மாணவர்கள் அன்றாட வாழ்வில் காண்பவற்றை அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கவும், அறிவியல் ஆய்வகத்தில் அறிந்ததை அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்கவும் தூண்டும் விதத்தில் நம் பள்ளிகளின் அறிவியல் செயல்பாடுகள் அமைவதை உறுதிபடுத்துவதுதனித்துவமாக அமைய வேண்டும். ஓராண்டுக்குள் பத்து ஆராய்ச்சி செயல்பாடுகளிலாவது மாணவர்களை ஈடுபடுத்தி, அவர்களின் ஆராய்ந்து பார்க்கும் அறிவை அணியமாக்க வேண்டும்.

அங்ஙனமே பள்ளியில் பயிலும் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டும்மாணவர்கள் திறன் அறியும் தேர்வுக்குஅனுப்பப்படும் நிலையை மாற்றி பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் அத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கி வெற்றி பெற உதவி கணிசமான மாணவர்கள் ஊக்கத்தொகை பெற செய்வது நம் பள்ளிகளின் தனித்துவமாக வேண்டும்.

8) வரலாறு அறிந்தவனே வரலாறு படைக்க முடியும். தனிமனித வரலாறு அல்லாமல் ஒரு

சமூகத்தின் உண்மையான வரலாற்றை உய்த்துணர தூண்டுவது நம் பள்ளிகளின் தனித்துவமாக விளங்க வேண்டும்.

9) இப்படியாக, அந்தந்த பாடத்திட்டத்தில் அதற்குரிய அறிவு, திறமை போன்றவற்றில் வளர உதவுவதில் நாம் முதன்மையான தனித்துவம் காட்டி நிற்பதுடன் நாம் நிறைவு பெற முடியாது. கிறித்தவ நிறுவனங்களில் பயிலும் நம் மாணவர்கள்நல்ல மனிதமும், மனப்பக்குவமும் பெற்றிட உதவுவதுநம்பள்ளிகளின் தனித்துவமாக இருக்க வேண்டும்.

மனித நேயமும், மாந்த உணர்வுடன் கூடிய சில பல நற்மதிப்பீடுகளை பெற்று நற்குணங்களில் வளர்ந்து முகிழ்வதே மனப்பக்குவமாகிறது.

மனித நேரத்தையும், மதிப்பீடுகளையும், நற்குணங்களையும் யாரும் யாருக்கும் சொல்லிக் கொடுக்க முடியாது. மாறாக, கற்றுக் கொள்வதற்கான சூழலைத் தான் ஏற்படுத்த முடியும். அத்துடன் ஒருவர் இவற்றைக்கற்பது பிறருக்கு கற்பிக்க அல்ல; மாறாக, தம் வாழ்வில் கடைபிடிக்கவேஎன்பதால் மாணவர்களுக்கு நல்லொழுக்கம், மறைக்கல்வி, மதிப்பீட்டுக் கல்வி, மனித உரிமைக் கல்வி போன்று ஏதேதோ நடத்துவதுடன் மட்டும் நாம் நின்றுவிடாமல், மாணவர்கள் தாம் கற்றவற்றை அன்றாட வாழ்வில் அனுபவித்து பார்த்து அறவாழ்வு நல்க ஏதுவான தளத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

அதற்கு மாணவர்களை இருபது பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவின் ஒவ்வொரு குழந்தைக்கும் சில சில கடமைகளை பொறுப்புகளாக கொடுத்து, அவற்றை குழுவோடு செயல்படுத்தும் அனுபவம் அளித்து, அவற்றில் அடைந்த வெற்றித் தோல்விகளை குழுவில் ஆய்ந்தறிந்து, மேம்படுத்த வாய்ப்பும் தந்து, மாணவர்களே மாணவர்களை உருவாக்கும்குழந்தைகள் பாராளுமன்றங்கள்வழியினை கையாள்வது நம் பள்ளிகளின் தனித்துவமாக அமைய வேண்டும். அத்தகைய குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து வழிநடத்த தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்து முயற்சி எடுக்க இதுவும் சாத்தியமாகும்.

10) இறுதியாக, மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு திட்டத்திலும் முழுமையாக சிறப்பு ஈடுபாடு காட்டும் ஆசிரியர்கள், மாணவர்களை அவ்வப்போது அடையாளம் கண்டு அவர்களின் ஒவ்வொரு சிறப்பு செயலுக்கும் ஒரு பச்சை கார்டு என அசெம்பிளி நேரத்தில் வழங்கி கௌரவப்படுத்துவது.

ஒரு நபரே ஐந்து முறை பச்சை கார்டு பெற்று, சிறப்புடன் நிகழ்ந்தால் அப்போது அந்த ஐந்து பச்சைக் கார்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக அவரிடம் ஒரு மஞ்சள் கார்டு கொடுத்து அவருக்கு சிறப்பு பரிசளித்து வாழ்த்துவது.

ஒரு கல்வி ஆண்டில் ஒரே நபர் ஐந்து மஞ்சள் கார்டு பெற்று சிறப்புடன் திகழ்ந்தால் அப்போது அவரிடமிருந்து அந்த ஐந்து மஞ்சள் கார்டுகளையும் திரும்ப பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு ஆரஞ்சு கார்டு கொடுத்து, வாழ்த்துவதுடன் பள்ளி ஆண்டுவிழாவில் அவருக்கு சிறப்பு கௌரவம் அளித்து, பாராட்டி மகிழ்விப்பது போன்ற, ஆக்கப்பூர்வமான பாராட்டுக்கள் வழியாக ஆசிரியர், மாணவர்களின் அறிவு வளர்ச்சி, திறமை எழுச்சி, மனப்பக்குவ முதிர்ச்சி போன்ற ஒவ்வொன்றையும் அங்கீகாரம் செய்வது நம் பள்ளிகளின் தனித்துவமாக விளங்க வேண்டும்.

இதன்மூலம் மறைமுகமாக நம் மாணவர்களும் ஆசிரியர்களும் நம் பள்ளிகளின் தனித்துவத்தை தனித்துவமாக பெற்ற மனிதர்களாக வாழ வழிகாட்டலாம். இதற்கு தேவை சில பயிற்சிகளும் முயற்சிகளும் மட்டுமே.

செய்து பார்த்தவர்கள் செழுமை பெற்று வருகிறார்கள். நாமும் செய்து பார்ப்போமா?