நல்ல தொழில்முனைவோரின்றி இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களைச் சமாளிக்க இயலாது என்றும், மாறிவரும் இக்காலம் முன்வைக்கும் உடனடித் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் முக்கிய நபர்களாகச் செயல்படுமாறு இத்தாலிய தொழிற்சாலை கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் பங்குபெறும் ஏறத்தாழ 4,600 உறுப்பினர்களை, செப்டம்பர் 12, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
தொழில்முனைவோர் தங்களின் படைப்பாற்றல், மற்றும், புதியன புகுத்தல் வழியாக, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கு உதவும் மாறுபட்ட ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புதிய தொழில்முனைவோரின்றி, இந்த உலகம், முதலீட்டின் எதிர்விளைவைச் சமாளிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய எதிர்விளைவால் அதிகமாகக் காயமடைந்த ஒரு பூமிக்கோளத்தையே வருங்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச்செல்வோம் என்று எச்சரிக்கைவிடுத்த திருத்தந்தை, பூமிக்கோளத்தைப் பாதுகாக்க இதுவரை நாம் ஆற்றியவை போதாது, நாம் ஒன்றிணைந்து மேலும் முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
நற்செய்தியில், யூதாஸ் இஸ்காரியோத் பெற்ற முப்பது வெள்ளிக் காசு, அன்றும் இன்றும், ஒரு நண்பரைக் காட்டிக்கொடுக்கவும், ஒரு நண்பரை விற்கவும், அல்லது பலிகடா ஆன ஒருவரைக் காப்பாற்றவும் பயன்படுத்தப்படலாம் எனவும், யூதாசின் பணமும், நல்ல சமாரியரின் பணமும் ஒரே சந்தையில், ஒரே பங்குச் சந்தையில் உள்ளன என்றும், நல்ல சமாரியரின் பணம், யூதாசின் பணத்தைவிட மிக அதிகமாக மாறும்போது, பொருளாதாரம் வளரும், மற்றும், அது மனிதமிக்கதாக மாறும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
திருஅவையில் தொழில்முனைவோரின் வாழ்வு, எப்போதும் எளிதானதாக இல்லை எனவும், செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது (காண்க.மத்.19:23-24) என இயேசு செல்வந்தருக்கு எதிராகப் பேசினார் எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, தொழில்முனைவோர் இறையாட்சியில் நுழைவதற்கு வரையறைகள் என்ன என்பதை எடுத்துரைத்தார்.
செல்வத்தைப் பகிர்தல்
செல்வத்தைப் பகிர்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகிய வரையறைகளை முதலில் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, இது, நற்செய்தி அறிவுறுத்தும் உணர்வில் தேவையில் இருப்போருக்கு செல்வத்தைப் பகிர்வதாகும் என்றும், இந்நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு உதவிவருகின்ற இந்த தொழில்முனைவோருக்கு நன்றி சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
அனைவருக்கும், குறிப்பாக, இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குமாறும், இளையோருக்கு, தொழில்முனைவோரின் நம்பிக்கையும், தொழில்முனைவோருக்கு இளையோரும் தேவைப்படுகின்றனர், இளையோரின்றி, தொழிலில் புதினம், சக்தி, ஆர்வம் போன்றவை இல்லாமல் போகும் என்றும், தொழில் பிரச்சனை, தொழில் சந்தையோடு மட்டும் இருந்தால் அதனைத் தீர்க்க முடியாது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
தொழில்முனைவோர் தன்னிலே தொழிலாளர்கள், அவர்கள் வேலைசெய்யும்வரைதான் ஊதியம் பெற முடியும் என்பதையும் நினைவுபடுத்திய திருத்தந்தை, வேலைவாய்ப்பை உருவாக்குகையில், நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தின் தரம் மேம்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
தொழில்முனைவோரின் பணிகளை ஆசிர்வதித்து ஊக்கப்படுத்தி தன் உரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவு செய்தார்.