அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது நினைவு மறதி நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தார், அவர்களை அன்போடு பராமரிப்போர் ஆகிய எல்லாருக்காகவும், புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார்.
செப்டம்பர் 21, புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட அறிவாற்றல் இழப்பு அல்லது மறதி நோய் விழிப்புணர்வு உலக நாளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நோயால் பலர் தாக்கப்பட்டுள்ளனர் எனவும், அந்நோய் காரணமாகவே, அவர்கள் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்குத் தேவையான ஆதரவும் உதவிகளும் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உலக அளவில், 65ம் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே அல்சைமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும்வேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஏறத்தாழ 2 இலட்சம் பேர் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
மறதி நோய் விழிப்புணர்வு உலக நாள்
1901ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மனநல மற்றும், நரம்பியல் நோய் மருத்துவரான Alois Alzheimer, 50 வயதான அந்நாட்டுப் பெண் ஒருவருக்கு இந்நோயின் அறிகுறி இருப்பதைக் கண்டறிந்தார். மேலும், மறதி நோய் ஏற்படுவதன் மூல காரணங்களை ஆராய்ந்து அதனைக் குணப்படுத்தும் வழிவகைகளையும் இவர் கண்டறிந்தவர். எனவே இந்நோய்க்கு அந்த மருத்துவரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டில் அல்சைமர் நோய் விழிப்புணர்வு உலக நாள் உருவாக்கப்பட்டாலும், 1994ஆம் ஆண்டில்தான், செப்டம்பர் 21ம் தேதியை அல்சைமர் உலக நாளாக அறிவிக்கப்பட்டது.
WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, உலகில் மறதி நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள் 5 கோடியே 50 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், எனவும், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் இந்நோயால் புதிதாகத் தாக்கப்படுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
இன்னும், பொது மறைக்கல்வியுரை நிகழ்வில் பங்குபெற்ற, ஹீமோ, டயாலிசிஸ் சிகிச்சைகள், மற்றும் உறுப்பு மாற்றம் ஆகியவற்றோடு தொடர்புடையவர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார்.
பொலிவியா உதவி அரசுத்தலைவர் Choquehuanca
மேலும், செப்டம்பர் 21, புதன் இத்தாலி நேரம் காலை 9.30 மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரையை வழங்க வருவதற்கு முன்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், பொலிவியா நாட்டு உதவி அரசுத்தலைவர் David Choquehuanca அவர்களைச் சந்தித்து உரையாடினார்.