உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள், மற்றும், ஏழைகளோடு அருகாமையைத் தெரிவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் புதிதாக ஆயர்களாகத் திருப்பொழிவுபெற்ற ஏறத்தாழ 200 ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆயர்கள் பேராயம் மற்றும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தால் நடத்தப்பட்ட பணிப்பயிற்சியில் பங்குபெற்ற ஏறக்குறைய 200 புதிய ஆயர்களை, செப்டம்பர் 19, திங்களன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
உரோம் நகரின் Regina Apostolorum நிறுவனத்தில் பயிற்சிபெற்ற இப்புதிய ஆயர்களோடு கலந்துரையாடிய திருத்தந்தை, அவர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சியங்கள், முன்வைத்த பரிந்துரைகள் மற்றும், பிரச்சனைகளைக் கேட்டறிந்ததோடு, ஏழைகளுக்குப் பணிபுரியுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார்.
ஆயர்களாக இருப்பது எப்படி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்த தன் எண்ணங்களை அப்புதிய ஆயர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய ஆயர்களுக்கு உரோம் நகரில் பயிற்சி நடத்தப்படவில்லை. அதனால் புதிய ஆயர்களுக்கு, இவ்வாண்டில் இரு குழுக்காளாகப் பயிற்சி வழங்கப்பட்டது.
இம்மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சியில் ஏறக்குறைய 200 புதிய ஆயர்கள் பங்குபெற்றனர்.
"பெருந்தொற்றுக்குப்பின் மாறிவரும் உலகில் நற்செய்தி அறிவித்தல்: ஆயரின் பணி" என்ற தலைப்பில் இவ்வாண்டில் புதிய ஆயர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
திருஅவையில் இடம்பெற்றுவரும் ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கை, திருஅவையின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள், திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் உட்பட பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தை தன் எண்ணங்களை எடுத்துரைத்தார் என மேலும் சில ஆயர்கள் கூறியுள்ளனர்.