Namvazhvu
செங்கை மறைமாவட்டத்தின் அருள்தலமான அச்சிறுப்பாக்கம் தமிழகத்திற்கு வருகை தந்த கர்தினால் அந்தோனி பூலா
Friday, 14 Oct 2022 10:05 am

Namvazhvu

தென் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கர்தினாலும் ஹைதராபாத் பேராயருமான மேமிகு அந்தோனி பூலா அவர்கள் செங்கை மறைமாவட்டத்தின் அருள்தலமான அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தின் திருவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தார். அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற்ற திருவிழா நிறைவுத் திருப்பலியை தலைமையேற்று சிறப்பித்த மேமிகு கர்தினால் அந்தோனி பூலா அவர்கள், திருப்பலிக்கு முன்பாக, அவர்தம் வருகையையொட்டி நிர்மாணிக்கப்பட்ட திரு அவையின் மாபெரும் திருத்தூதர்களான - புனித பேதுரு மற்றும் புனித பவுலின் தத்துருப திருச்சுருபங்களைப் புனிதம் செய்து திறந்துவைத்தார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகு நடைபெறும் இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தங்களின் மரியன்னை பக்தியை வெளிப்படுத்தினர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அருள்தல அதிபர் லியோ எட்வின், பங்குத்தந்தை மைக்கேல் அலெக்ஸாண்டர், உதவி அதிபர் மரிய ஆனந் ராஜ், உதவி பங்குத்தந்தை செபாஸ்டின் ஆகியோரோடு இணைந்து சிறப்பாகச் செய்திருந்தார். தயாரிப்பு நாட்களில் சென்னை- மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன், செங்கை ஆயர் மேதகு நீதிநாதன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். கர்தினால் மேமிகு அந்தோனி பூலாவின் வருகையை செங்கை மறைமாவட்டமே கொண்டாடி மகிழ்ந்தது.

இதற்கு முன்பாக, கர்தினால் மேமிகு அந்தோனி பூலா அவர்களை, DCLM என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் செங்கை ஆயர் இல்லத்தில் சந்தித்து தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர்.

அக்டோபர் 3 ஆம் தேதி, பாண்டிச்சேரி - கடலூர் மறைமாவட்டம், கோனான்குப்பம் பெரியநாயகி மாதா (வீரமாமுனிவர் புகழ்) திருத்தலத்தில் மணிக்கூண்டு அர்ச்சிக்கப்பட்டு, அதற்குக்கீழ் அமைதியின் அரசியாம் அன்னை மரியாவின் திருவுருவம் வைக்கப்பட்டதன் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மேமிகு கர்தினால் அந்தோனி பூலா அவர்கள் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் ஏனைய அருள்பணியாளர்களோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்தார். இத்திருப்பலியில் உக்ரைனில் இடம்பெறும் போர் முடிவுக்குவர கர்தினால் பூலா அவர்கள் சிறப்பாக செபித்தார். புதிய கர்தினாலின் வருகை தமிழகத் திரு அவைக்கு புத்துணர்வைத் தந்துள்ளது எனலாம்.