அக்டோபர் 12, புதன்கிழமை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் பற்றிய ஐந்தாவது பொது மறைக்கல்வியுரையை யோவான் நற்செய்தி (அதிகாரம் 5) ல் பதிவுசெய்யப்பட்டுள்ள, உடல் நலமற்றவர் நலமடைதல் குறித்த பகுதி வாசிக்கப்பட்ட பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார்.
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, ஆன்மீகத் தெளிந்துதேர்தல் பற்றிய நம் மறைக்கல்வியில், இறைவேண்டல், தன்னையே அறிதல் ஆகிய இரு கூறுகளின் முக்கியத்துவம் பற்றிச் சிந்தித்துள்ளோம். அதைத் தொடர்ந்து இன்று, தெளிந்துதேர்தலுக்கு இன்றியமையாத மூன்றாவது கூறான “விருப்பம்” குறித்துச் சிந்திப்போம். உண்மையில், தெளிந்துதேர்தல் என்பது, ஒருவிதமான தேடலாகும். தேடுதல் என்பது, நம்மிடம் குறைபடும் எதையோ அறிந்துகொள்ள முனைவதிலிருந்து பிறப்பதாகும். விருப்பம் என்பது, முழு நிறைவை ஒருபோதும் கண்டுகொள்ளாத நிறைவுக்காக ஏங்குவது என்று ஆன்மீகப் போதகர்கள் கூறுகின்றனர். இது, கடவுளின் இருத்தல் நம்மில் இருக்கின்றது என்பதன் அடையாளமாகும். விருப்பம் என்பது, மகிழ்வுக்காகவும், மனித இதயத்தில் இருக்கின்ற நிறைவுக்காகவும் உள்ளூர ஏங்குவதாகும். நம் ஆன்மீக மரபில், விருப்பம் என்பது, நம் வாழ்வின் இறுதி இலக்கிற்கு வழிகாட்டும் ஒருவித திசைமானியாக, நம் ஆன்மா கடவுளுக்காகவும், அவர் மட்டுமே அளிக்கவல்ல அமைதிக்காகவும் ஏங்குவதன் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஆண்டவரைத் தேடுவது மற்றும் அவரது வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும்போது, துன்பங்களுக்கு மத்தியில் நாம் உறுதியுடன் இருக்கவும், தியாகங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவும், அனைத்துக் காரியங்களையும் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப வாழ முனையவும் சக்தியைக் கண்டுகொள்கிறோம். இயேசு, தம்மிடம் ஒரு புதுமையைத் தேடும் மக்களிடம், “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” (எகா.மாற் 10:51) என்றே பல நேரங்களில் கேட்டுள்ளார். இறைவேண்டலில் ஆண்டவரோடு நாம் நடத்தும் உரையாடல், நமது உள்ளார்ந்த விருப்பங்களைத் தெளிவாக எடுத்துரைக்கவும், நம் வாழ்வில், அருள் மற்றும் குணப்படுத்தலின் புதுமைகளை நிகழ்த்த அவரை அனுமதிக்கவும் உதவுகிறது. தமது விண்ணக வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக ஆக்கவும், நிலைவாழ்வின் மகிழ்வையும், நிறைவையும் அவரில் நாம் கண்டுகொள்ளவும் வேண்டுமென்று இயேசு விரும்புகிறார்.
விருப்பம், ஆன்மீக தெளிந்துதேர்தலுக்கு இன்றியமையாத மூன்றாவது முக்கிய கூறு என எடுத்துரைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.