ஒரே மாதிரியாக செயல்படுவதல்ல திரு அவை; மாறாக, ஒவ்வொரு தலத்திரு அவைகளின் தனித்தன்மையை மதிக்கின்ற உலகளாவியத் திரு அவை எனவும், இத்திரு அவையில் ஆசியா, ஏழைகள் மற்றும் இளையோரின் திரு அவையாகவும், கலந்துரையாடும் திரு அவையாகவும் திகழ்கின்றது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார்.
அக்டோபர் 12 ஆம் தேதி, புதன்கிழமை முதல் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை, தாய்லாந்தின் தலைநகரமான பாங்காங்கில் உள்ள மேய்ப்புப்பணி நிலையத்தில், 50வது ஆண்டு நிறைவு நிகழ்வைத் தொடங்கியுள்ள ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அனுப்பியக் காணொளிச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழ்வினை வாழ்விலிருந்து, தகுதியான மனித வாழ்விற்கு, ஆசியாவில் உள்ள இளையோர் விழித்தெழுந்து வருகின்றனர் எனவும், கலாச்சார வேறுபாடுகள் கொண்ட சமூகங்கள் உண்மையான மக்கள் சமூகங்களாக விழித்தெழுந்து வருகின்றன என, ஆசிய ஆயர்கள் எடுத்துரைப்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய விழித்தெழுதல்தான், ஆசியத் திரு அவையை ஏழைகள், இளையோர் மற்றும் பிற சமய உடன்பணியாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் திரு அவை என உறுதியாக அழைக்கின்றது எனவும், ஆசியாவை அதிக மக்கள் தொகையுள்ள, அதிலும் குறிப்பாக இளையோரை அதிகமாகக்கொண்ட கண்டம், பல்வேறு கலாச்சாரம் மற்றும் சமூகங்களின் இல்லம் என, தனது ஆசிய திருத்தூதுப் பயணத்தின்போது திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் குறிப்பிட்டதையும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
பொதுநிலையினர் தங்களது திருமுழுக்கையும், பொதுநிலையினராக தங்களின் செயல்பாடுகளையும் மதித்து உண்மையான மக்கள் சமூகமாக மாறத் தொடங்கியுள்ளனர் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார். குறிப்பிட்ட தனித்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஆற்றும் செயல்கள் வழியாக தன்னுடைய உடனிருப்பை வெளிப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இப்பேரவையில் ஆசிய ஆயர்கள் தங்களது மறைப்பணியில் இடம்பெறும் சவால்கள் மற்றும் ஆசியத் தலத்திரு அவைப் பணிகளுக்கான புதிய பாதைகள் போன்றவற்றைக் குறித்தும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.