Namvazhvu
இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் இணையதள குற்ற வழக்குகள் நிறுத்தம் - உச்ச நீதிமன்றம்
Friday, 21 Oct 2022 06:29 am
Namvazhvu

Namvazhvu

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 66 A - இணையதள மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் மூலமாக அநாகரிகமான செய்திகளை பகிர்வதோ, அச்சுறுத்தக்கூடிய வதந்திகளை பரப்புவதோ, வன்முறை மற்றும் வெறுப்பை வளர்க்கக் கூடிய பொய்யான தகவல்களை அனுப்புவதோ கடுங்குற்றமாகும். இக்குற்றத்தை புரிவோருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறுகிறது. மக்கள் உரிமைகளை காக்கும் மக்கள் சங்கம், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 66 A, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 அளிக்கும், அனைவருக்குமான பேச்சுரிமையை பறிக்கிறது என்று பொதுநல வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 66 A  சட்டத்தை இனிமேல் எந்த குடிமகன் மேலும் பயன்படுத்தக் கூடாது என்று 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்களுக்கு எதிராக போடப்படும் செய்திகளை கண்டித்து குடிமக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்வினால், நீக்கப்பட்ட சட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்யக்கூடாது என்று மீண்டும் மத்திய மற்றும் மாநில அரசர்களுக்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 12 ஆம் தேதி உத்தரவிட்டது.

தென்னிந்திய கத்தோலிக்க திரு அவை தலைவர்கள் இச்சட்டம் நீக்கப்பட்டதை குறித்து தங்கள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். கேரள கத்தோலிக்க ஆயர்கள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் அருள்பணியாளர் ஜே.ஜேக்கப், “கேரளாவில் அரசியல் தலைவர்களை மட்டுமில்லை, ஆன்மிகத்தலைவர்களையும் அநாகரிகமாக சித்தரிக்கும் போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக பெண்ணினமான அருள்சகோதரிகளை தவறாக சித்தரித்து ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இச்சட்டம் நீக்கப்பட்டதால் இதுபோன்ற இழிவான வதந்திகளை பரப்புபவர்களுக்கு சுதந்திரம் அளித்தது போல் இருக்கிறதுஎன்று கூறினார். மனித உரிமை ஆர்வலர் அருட்பணியாளர் செட்டிரிக் பிரகாஷ்இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பேச்சுரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் வரவேற்கிறோம். ஆனால் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கொள்கைகளை எதிர்க்கும் மக்களை குறிவைத்து தாக்குவதற்கு இது மேலும் ஒரு உதவியாக அமையுமோ என்ற அச்சம் தோன்றுகிறதுஎன்று கூறினார்.