Namvazhvu
திருத்தந்தை: கிறிஸ்துவைக் கண்டுணர வாழ்வுக் கதையை வாசியுங்கள்
Friday, 21 Oct 2022 06:59 am
Namvazhvu

Namvazhvu

அக்டோபர் மாதம் செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் நாம் செபிக்கும் செபமாலையை உலகில், குறிப்பாக, உக்ரைனில் போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ ஒப்புக்கொடுப்போம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 19 ஆம் தேதி, புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த திருப்பயணிகளுக்கு தெளிந்துதேர்தலுக்கு, நம் சொந்த வாழ்வுக் கதை பற்றிய விழிப்புணர்வு முக்கியம் எனக் கூறி இணைச்சட்டம் 8:2 மேற்கோள் காட்டி தனது புதன் மறைக்கல்வியுரை துவங்கினார்.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். தெளிந்துதேர்தலை நன்முறையில் செய்வதற்குள்ள முன்நிபந்தனைகள் குறித்து கடந்த வாரங்களில் சிந்தித்து வந்தோம். ஒவ்வொரு முக்கியமான செயலும், அது விரும்பிய பலனைக் கொணரும்பொருட்டு, நாம் பின்பற்றுவதற்கு அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. தெளிந்துதேர்தலுக்குத் தேவையான மற்றுமொரு இன்றியமையாத கூறான, நம் ஒவ்வொருவரின் சொந்த வாழ்வுக் கதை குறித்து இன்று கவனம் செலுத்துவோம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாழ்வு மிகவும் விலைமதிப்பற்ற நூலாகும். அந்நூலை பலர் வாசிப்பதில்லை அல்லது மிகத் தாமதமாக, அதாவது இறப்பதற்குமுன் வாசிக்கின்றனர். எனினும், ஒருவர் மற்ற வழிகளில் பயனற்ற விதமாகத் தேடுவதை அந்நூலில் சரியாகக் கண்டுகொள்கின்றார். எனவே, கடவுளின் பராமரிப்பின் ஒளியில், நம் சொந்த வாழ்வுக் கதையை விளக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இன்று சிந்திப்போம்.

நம் வாழ்வு முழுவதும் திருவருள் இழையோடுவதை, இறைவேண்டல் மற்றும் ஆன்மிக உள்தூண்டுதல் வழியாகத் தெளிந்துதேர்வு செய்யக் கற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நம் சொந்த வரலாறு பற்றிய தெளிவு, நம் ஆன்மிக வளர்ச்சிக்கு தீங்குவிளைவிக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் குறித்து நம்மை விழிப்புடன் இருக்கச்செய்கிறது. அதேநேரம், நம் நிலைவாழ்வு மகிழ்வுக்காக ஆண்டவர் வைத்திருக்கும் அன்புத் திட்டத்தை அமைதியாக வெளிப்படுத்தும் மறைவான நிகழ்வுகள் மற்றும் சந்திப்புக்களுக்கு நம் கண்களைத் திறந்து விடுகின்றது. புனிதர்களின் வாழ்வும், புனிதத்துவத்திற்கான நம் தனிப்பட்ட வாழ்வுப் பாதையில் ஒளியூட்டுகின்றது. கடவுள் தம் நண்பர்களோடு தொடர்புகொள்ளும் அவரின் வழிகளில் நாம் பழக்கப்பட்டவர்களாக மாறவும் புனிதர்கள் மற்றுமொரு பாதையை நமக்குக் காட்டுகின்றனர். கடவுள் மட்டுமே நம் இதயத்தின் உள்ளார்ந்த ஆசைகளைத் திருப்தி செய்யக்கூடியவர் என்ற உண்மையைக் கண்டுணரவும், அதை ஏற்றுக்கொள்ளவும் அவர் எவ்வாறு புதிரான முறையில் தன்னை வழிநடத்தினார் என்பதை மெது மெதுவாக அறிந்துகொண்டதை, புனித அகுஸ்தீனார் Confessions என்ற தன் நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நம் இதயத்தின் உள்ளாழத்தில் கடவுளின் குரல் பேசுவதையும், வாழ்வு முழுவதும் நம் படிநிலைகளை வழிநடத்தி, அவரோடு என்றென்றும் மிக ஆழ்ந்த ஒன்றிப்பில் வாழ அவர் அழைப்பதையும் எவ்வாறு தெளிந்துதேர்வு செய்வது என்பதை நமக்குக் கற்றுத்தரும்வண்ணம், மற்றுமொரு மாபெரும் ஆன்மிக வழிகாட்டியான புனித இலெயோலா இஞ்ஞாசியார், தனது சொந்த மனமாற்றப் பயணத்தில் குறிப்பிட்டுள்ளார். வாழ்வின் நிகழ்வுகள், அந்நேரத்தில் மிக் குறைந்த அளவே முக்கியமானதாகத் தெரிந்தாலும், அவை நம் வாழ்வு குறித்து, மேலும் ஆழ்ந்து சிந்திக்க ஏதோ ஒன்றை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்நிகழ்வுகள், நம் தினசரி வாழ்வில் ஆண்டவர் விதைக்கின்ற மறைந்திருக்கும் விலைமதிப்பற்ற முத்துக்கள். நல்லவை சப்தமின்றி மறைந்திருக்கின்றன. அது மெதுவாகவும், தொடர்ந்தும் தோண்டப்படவேண்டியவை. ஏனென்றால் கடவுளின் செயல்முறை, காலமறிந்து செயலாற்றுவது, அது திணிக்கப்படுவதில்லை. அது நாம் சுவாசிக்கும் காற்று போன்றது. அதை நாம் பார்ப்பதில்லை, ஆனால் அது வாழ்வதற்கு நம்மை அனுமதிக்கிறது. அது இல்லாமல்போகும்போதுதான் அதன் நன்மையை உணர்கிறோம்.

இவ்வாறு புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட எல்லாரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.