தீபாவளித் - ‘தீபம்’ (‘விளக்கு’) மற்றும் ‘ஆவளி’ (‘வரிசை’) - ‘விளக்குகளின் வரிசையே’ தீபாவளி. பளபளக்கும் ஆடை, கண்களை வியக்கவைக்கும் இனிப்புகளின் நிறங்களும், கண்கள் கூசும் அளவிற்கு பட்டாசு வெளிச்சம் என, இன்று நம்மைச் சுற்றி எல்லாமே பளபளப்பாய், வெளிச்சமாய் இருக்கின்றன. இந்தப் புறஒளியில் அகஒளியைத் தேட அல்லது புறத்திலிருந்து அகத்திற்கு நம்மைத் திரும்ப அழைக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
நம்முடைய பிறந்தநாள் அல்லது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நமக்கு நிறைய பரிசுப்பொருள்கள் வருகின்றன என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பரிசுப்பொருளும் மிகவும் நேர்த்தியான தாளால் பொதியப்பட்டுள்ளது. நேர்த்தியான தாளில் அல்லது தாளால் பொதியப்பட்ட பரிசுப்பொருள் நம் கண்களுக்கு நேரிடையாகத் தெரிகிறது. ஆனால், அதைத் திறந்து பார்த்தால் அதற்கு உள்ளே வேறு ஒரு பொருள் இருக்கிறது. அப்போதுதான் நமக்கு உரைக்கிறது. முதலில் நம் கண்களுக்குத் தெரிந்த பொருளும் இப்போது தெரிகின்ற பொருளும் ஒன்றல்ல என்று. மேலும், இவை இரண்டையும் விட, சில நேரங்களில் இந்தப் பரிசுப்பொருளைக் கொடுத்தவரால் பரிசு இன்னும் அதிக மதிப்பு பெறுகிறது. ஆக, பளபளப்புத் தாளில் பொதியப்பட்ட பொருள், உள்ளே இருக்கும் பொருள், கொடுத்தவர் என்று பரிசுப்பொருளில் மூன்று விடயங்கள் அடங்கியிருக்கின்றன. இப்படித்தான் எல்லாப் பரிசுப்பொருள்களும்.
இப்போது நம்மையே பரிசுப்பொருளுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம். நாம் எல்லாரும் பரிசுப்பொருள்கள். நம் எல்லாரையும் ஒரு காகிதம் மூடியிருக்கிறது. நம்முடைய நிறம், உயரம், அகலம், தடிமன், பேசும் மொழி, குடும்ப பின்புலம், படிப்பு, வேலை போன்ற அனைத்தும் நம்மை
மூடியிருக்கும் காகிதங்கள். இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நபர் நமக்குள் இருக்கிறார். அதுதான் பரிசுப்பொருள். மேலும், இந்தப் பரிசுப்பொருளை உலகிற்கு வழங்கிய ஒருவர் இருக்கிறார். அவர்தான் கடவுள். இப்போது பிரச்சனை என்னவென்றால், பரிசுப்பொருள்கள் அமைதியாக இருக்க, பல நேரங்களில் அட்டைப்பெட்டிகள் மோதிக்கொள்கின்றன. ‘நான் இப்படி!’ ‘நீ அப்படி!’ ‘நான்தான் உன்னைவிட சிறந்தவன்!’ ‘நீ எனக்கு அடிமை!’ ‘நான் அதிகம் வைத்திருக்கிறேன்!’ ‘நீ ஒன்றுமில்லாதவன்’ என சத்தம்போட்டு சண்டை போடுகின்றன அட்டைப் பெட்டிகள். ஆனால், உள்ளே இருக்கும் பரிசுப்பொருள்கள் யாருடனும் மோதிக்கொள்வதில்லை. அட்டைப் பெட்டிகளிலிருந்து நாம் பரிசுப்பொருளுக்குக் கடந்து செல்ல நமக்குத் தேவை அகஒளி.
இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 35:12-14,16-18) சீராக்கின் ஞான நூல் என்னும் இணைத்திருமுறை நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘ஆண்டவருடைய திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர் வளமும் ஆசீரும் பெறுவார்’ என்பது சீராக்கின் ஞானநூல் ஆசிரியரின் பொதுவான போதனையாக இருக்கிறது. இதைத் தலைகீழாகப் புரிந்துகொண்ட சிலர், ‘ஒருவர் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறார் என்றால் அவர் ஆண்டவருடைய திரு அவைக்குக் கீழ்ப்படியாதவர், பாவி, சபிக்கப்பட்டவர்’ என்று எண்ணத் தொடங்கினர். மேலும், ‘செல்வரும் நலமுடன் வாழ்வோரும் ஆண்டவரின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற நீதிமான்கள்’ என்ற எண்ணமும் வளர்ந்தது. இப்படிப்பட்ட தவறான எண்ணங்களையும், எளிமையாக்கப்பட்ட புரிதல்களையும் களைய முயல்கின்றார் ஆசிரியர்.
ஏழைகளையும், எளியவரையும் ஒடுக்கும் ஒருவர் கொடுக்கும் ‘அநீத பலியின்’ பின்புலத்தில் அமைகிறது இன்றைய முதல் வாசகம். ஒருவர் எளியவரை ஒடுக்கி அந்தப் பணத்தைக் கொண்டு கொடுக்கும் பணம் அநீதியானது என்றும், பணத்திற்கும் நேர்மையாளராய் இருப்பதற்கும் தொடர்பில்லை என்றும், எளியவர்கள், கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்களின் குரலையும் ஆண்டவர் கேட்பார் என்றும் சொல்லி ஒரு மாற்றுப் புரிதலை விதைக்கின்றார் பென் சீரா. ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணி செய்வோர் - அவர் ஏழை என்றாலும் செல்வர் என்றாலும் - ஏற்றுக்கொள்ளப்படுவர் என்றும் சொல்கின்றார்.
ஆக, ஒருவர் தன்னுடைய செல்வத்தினாலும், வளத்தினாலும் அல்ல; மாறாக, ஆண்டவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்யும்போதே ஆண்டவருக்கு ஏற்புடையவராகிறார் என்று அறிதலே அகஒளி. புறஒளி பெற்றிருப்பவர் ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து மதிப்பை நிர்ணயிப்பார். ஆனால், அகஒளி பெற்றவரோ, ஒருவர் தன்னுடைய இறைவேண்டலாலும், இறைவனின் இரக்கத்தினாலும், மதிப்பு பெறவும் நேர்மையாளர் எனக் கருதப்படவும் இயலும் என்று உணர்வார்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 4:6-8,16-18) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் (4:6-8), தன்னுடைய இறப்புக்கு முன் தன்னுடைய வாழ்வைத் திரும்பிப் பார்க்கின்ற பவுல் (அல்லது ஆசிரியர்) தன்னுடைய வாழ்வுப் பயணத்தையும், திருத்தூதுப் பணியையும் மற்போருக்கும், ஓட்டப்பந்தயத்திற்கும் ஒப்பிடுகின்றார்: ‘நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்.’ இந்த இரண்டிலும் - வாழ்விலும், பணியிலும் - ‘விசுவாசத்தைக் காத்துக்கொள்கின்றார். நேரிய வாழ்வுக்கான வெற்றிவாகைக்காகக் காத்திருக்கின்றார்.’ அதை இறுதிநாளில் ஆண்டவர் தனக்குத் தருவார் என்று நம்புகிறார் பவுல். இரண்டாம் பகுதியில், தன்னுடைய இக்கட்டான வாழ்வியல் நிகழ்வுகளில் தன்னோடு உடனிருந்து தன்னைக் காத்து வழிநடத்தியவர் ஆண்டவர் என்று அறிக்கையிடுகின்றார்: ‘எல்லாரும் என்னைவிட்டு அகன்றனர், … ஆண்டவர் என் பக்கம் நின்று, எனக்கு வலுவூட்டினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் என்னை விடுவித்தார்.’
பவுல் பெற்ற அகஒளி இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, தன்னை முழுமையாக அறிந்தவராகவும், தன் பணியின் நிறைவை உணர்ந்தவராகவும், தன் ஆண்டவர்மேல் உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கிறார். இரண்டு, தன்னுடைய ‘விருத்தசேதனம், இஸ்ரயேல் இனம், பென்யமின் குலம், தூய்மையான வழிமரபு, திரு அவையின்மேல் உள்ள பேரார்வம்’ (காண். பிலி 3:5-6) என்று தனக்கிருந்த எல்லாத் தூண்களையும் தகர்த்துவிட்டு, ஆண்டவரின் இரக்கம் என்னும் தூணின்மேல் சாய்ந்துகொள்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி (காண். லூக் 18:9-14) கடந்த வார நற்செய்தி வாசகத்தைப் போல லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. ‘தாங்கள் நேர்மையானவர்கள் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து’ இயேசு ஓர் உவமை சொல்கின்றார். நேர்மையானவர் என்பவர் இறைவனோடும் ஒருவர் மற்றவரோடும் நல்ல உறவுநிலையில் இருப்பவர். இந்த உறவுநிலை உருவாக அக ஒளி அவசியம்.
இந்த நிகழ்வு கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு இறைவேண்டல் செய்ய பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் என்னும் இரு கதைமாந்தர்கள் வருகின்றனர். இருவருமே கடவுளிடம் தங்கள் வாழ்வைப் பற்றி மனம் திறக்கின்றனர். பரிசேயரின் இறைவேண்டல் மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) தான் யார் என்பதைத்தான் யார் இல்லை (கொள்ளையர், நேர்மையற்றோர், விபச்சாரர், வரிதண்டுபவர்) என்று அறிக்கையிடுகின்றார், (ஆ) தான் என்ன செய்கிறேன் - வாரம் இருமுறை நோன்பு, பத்திலொரு பங்கு காணிக்கை - என்பதைப் பட்டியலிடுகின்றார் மற்றும் (இ) கோவிலுக்குள் நின்றுகொண்டு கோவிலுக்கு வெளியே நிற்பவரோடு தன்னை ஒப்பிட்டுக்கொள்கின்றார் - அவருடைய நெருக்கம் அவரைக் கடவுளுக்கு அருகில் கொண்டுவரவில்லை. வரிதண்டுபவரின் இறைவேண்டலும் மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) தான் யார் என்பதை நேரடியாகவே - ‘பாவி’ - அறிக்கையிடுகின்றார், (ஆ) தான் செய்யும் செயல்கள் எதையும் பட்டியலிடவில்லை - தன் செயல்களைவிடக் கடவுளின் இரக்கம் மேன்மையானது என நினைக்கின்றார் மற்றும் (இ) கோவிலுக்கு வெளியே நிற்கின்றார்.
‘பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்’ என இயேசு தீர்ப்பு எழுதுகின்றார். மேலும், ‘தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்’ என்னும் மகா வாக்கியத்தையும் உதிர்க்கின்றார். ‘நான் அப்படி அல்ல; இப்படி அல்ல’ என்று பேசிய பரிசேயரை, ‘நீர் ஏற்புடையவர் இல்லை’ என்று அவருடைய வாய்ச்சொல்லை அவருக்கே திருப்புகின்றார் இயேசு. ‘இரங்கியருளும்!’ என்னும் வார்த்தை ‘என்னைச் சரிசெய்யும் அல்லது எனக்கும் எனக்குமான உறவை சரியானதாக்கும்!’ என்ற பொருளில் அமைகிறது.
கோவிலுக்கு வெளியே நின்றவர் கடவுளுக்கு அருகில் வருகின்றார். கோவிலுக்கு உள்ளே நின்றவர் கடவுளைவிட்டு தூரமாகிப் போகின்றார். ஏனெனில், வெளியே இருந்தவர் தன்னுடைய இருப்பை தனக்கு மேலே இருக்கும் இறைவனில் பார்த்தார். உள்ளே இருந்தவர் தன்னுடைய இருப்பைத் தன் செயல்களில் பார்த்தார். கடவுளின் லாஜிக் முரணாகவே இருக்கிறது. தான் செய்த செயல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றிற்குக் கைம்மாறு செய்யுமாறு கடவுளிடம் வியாபாரம் செய்கிறார் பரிசேயர். தன்னுடைய வெறுங்கையைக் காட்டிப் பரிசுகளை அள்ளிச் செல்கின்றார் வரிதண்டுபவர். ‘தாழ்ச்சி’ என்பதன் ஆங்கிலப் பதம், ‘ஹ்யூமுஸ்’ என்ற இலத்தீன் பதத்திலிருந்து வருகிறது. இதற்கு ‘களிமண்’ என்பது பொருள். ஆக, கடவுள் நம்மை முதன்முதலாக உருவாக்கிய களிமண் நிலையை - ஒன்றுமில்லாத நிலையை - ஏற்று, அவரிடம் சரணாகதி ஆவதே தாழ்ச்சி.
ஆக, கோவிலுக்கு உள்ளே நின்றவரைவிட, கோவிலுக்கு வெளியே நின்றவரே அக ஒளி பெற்றவராக இருக்கிறார். அந்த அக ஒளியே அவரைக் கடவுளுக்கு ஏற்புடையவராக்குகிறது.
பொருளாதார மதிப்பு என்னும் புறஒளியைவிட ஆண்டவருக்கு விருப்பமானதைச் செய்யும் அகஒளியே சிறந்தது என்று இன்றைய முதல் வாசகமும், மற்ற மனிதர்களின் உடனிருப்பு என்னும் புறஒளியைவிட ஆண்டவரின் உடனிருப்பு என்னும் அகஒளியே சிறந்தது என்று இரண்டாம் வாசகமும், மேட்டிமை எண்ணம் மற்றும் நற்செயல்கள் என்னும் புறஒளியைவிட, ஆண்டவரின் இரக்கத்தை நம்புவதும், அவருக்குச் சரணாகதி ஆவதும் என்னும் அகஒளியே சிறந்தது என்று நற்செய்தி வாசகமும், அகஒளியின் மேன்மையைச் சுட்டிக்காட்டி அதை நம் உள்ளங்களில் ஏற்றிக்கொள்ள அழைக்கின்றன.
இன்று நாம் கொண்டாடும் தீபஒளித் திருநாளில், புறஒளியை விடுத்து அகஒளிக்கு நாம் எப்படிக் கடந்து செல்வது?
1. நம்முடைய வலுவின்மையை ஏற்றுக்கொள்வது
ஏழைகள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப் பட்டோர், கைம்பெண்கள் என்று கையறு நிலையில் இருக்கும் நபர்களைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம். இவர்களுக்குத் தங்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. ஆனால், இவர்களின் வலுவின்மையே இவர்களை இறைவனின்மேல் சார்புநிலைகொள்ளச் செய்கிறது. இவர்களுடைய வலுவின்மையே இறைவனின் வல்லமை செயல்படும் தளமாக மாறுகிறது. இன்று நாம் பல நேரங்களில் நம்முடைய வலுவின்மைகளோடு சண்டையிடுகிறோம், அல்லது நம்முடைய வலுவின்மையிலிருந்து தப்பி ஓடுகிறோம். சண்டையிடும்போது நம் வலுவின்மையை மூடி மறைக்க முயல்கின்றோம். தப்பி ஓடும்போது நம்முடைய வலுவின்மைக்கு நாமே பயப்படுகிறோம். இவை இரண்டுமே ஆபத்தானவை. மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது. அதுதான், வலுவின்மையை நேருக்கு நேராக எதிர்கொள்வது. என்னை நான் இருப்பதுபோல, என்னுடைய வலுவின்மையோடு என்னை ஏற்றுக்கொள்வதே அகஒளி. இந்த அகஒளி இருந்ததால்தான் பவுல் தன்னுடைய வாழ்க்கையை போராட்டம் என்று ஏற்றுக்கொள்கின்றார். வரிதண்டுபவர் தன்னைப் பாவி என்று ஏற்றுக்கொள்கின்றார்.
2. நம்பிக்கையைக் காத்துக்கொள்வது
தன்னுடைய போராட்டத்திலும் ஓட்டப்பந்தயத்திலும் நம்பிக்கையைக் காத்துக்கொண்டதாகச் சொல்கிறார் பவுல். ‘ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்’ என்பதே பவுல் கொண்டிருந்த நம்பிக்கை. நாம் சார்ந்திருக்கும் நம்முடைய பெயர், ஊர், உறவு, பின்புலம், பணபலம், ஆள்பலம் எதுவும் துணையிருக்காது நமக்கு. பவுலுக்கும் இதே நிலைதான் நேர்ந்தது. ஆனால், அவருடைய கைவிடப்பட்ட நிலையில் ஆண்டவர் அவரை நோக்கிக் கைகளை நீட்டுகின்றார். அப்படி அவர் நீட்டுவார் என்று நம்புவதும், அவருடைய அருள்கரமே நம்மைக் காக்கிறது என்று நம்புவதும் அகஒளிப் பயணத்தின் இரண்டாம் படி.
3. இறைவனை மட்டுமே பார்ப்பது
கோவிலுக்கு உள்ளே நின்ற பரிசேயர் முன்நோக்கியும் பின்நோக்கியும் பார்க்கிறார். முன்நோக்கி இறைவனையும் பின்நோக்கி வரிதண்டுபவரையும் பார்க்கிறார். ஆனால், வெளியே நின்ற வரிதண்டுபவர் முன்நோக்கிப் பார்க்கிறார். இறைவனை மட்டுமே பார்க்கிறார். பரிசுப்பொருளாகிய அவர் தன்னைக் கொடுத்த இறைவனைப் பார்க்கிறாரே தவிர தனக்கு அருகே நிற்கும் இன்னொரு பரிசுப்பெட்டியை அவர் பார்க்கவில்லை. பரிசேயரோ வரிதண்டுபவரின் வெளிப்புறக் காகிதத்தைப் பார்த்தாரே தவிர, அவரின் உள்ளிருப்பதையும், அவரை அளித்த கடவுளையும் பார்க்கத் தவறிவிட்டார். இறைவனை மட்டுமே பார்ப்பது ரொம்ப எளிது. எப்படி? நம்மையே களிமண்ணாக்கிவிட்டால், அவர் அங்கே உடனே ஓடி வருவார். நம்மை அப்படியே கைகளில் ஏந்தி நம் நாசிகளில் அவரின் மூச்சை ஊதுவார். ஏனெனில், அவர் வெறும் களிமண்ணாக நம்மை வைத்திருந்து காயவிடமாட்டார். இன்று நாம் மனிதர்களைச் சேர்த்துப் பார்க்கும்போது அவர்கள் கொண்டிருக்கும் காகிதங்களும், அவர்கள் நம்மேல் ஒட்டும் காகிதங்களும் நம் கண்களைக் கூச வைக்கின்றன. அவரை மட்டும் பார்க்கும்போது அகம் ஒளி பெறும்.
இறுதியாக,
புறஒளியை கொண்டாடும் நாம் இன்று நம் உள்ளத்தில் அகஒளி ஏற்ற முன்வருவோம். எண்ணெய் இல்லாத விளக்குகளாக நின்றாலும், நம் திரிகள் எரிந்து கருகியிருந்தாலும் அவர் நம்மைத் தொட்டு ஏற்றுவார். ஏனெனில், ‘இந்த ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்’ (பதிலுரைப் பாடல், திபா 34).