2018 ஆம் ஆண்டு வத்திக்கானுக்கும் சீனாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டு, இருதரப்புப் பிரதிநிதிகளும் கோவிட் பெருந்தொற்று காரணமாக சந்திக்க முடியாமல் இருந்ததால், 2020 ஆம் ஆண்டில் நீட்டிக்கப்பட்ட ஆயர் நியமன ஒப்பந்தம், ஒரு தற்காலிக மற்றும் சோதனை முயற்சியாக இருந்த நிலையில், மீண்டும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உறுதியான நிலைப்பாடு மற்றும் பொறுமையான அணுகுமுறைகளின் துணைகொண்டு, சீன அரசுடனான, ஆயர் நியமன ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்முகத்தில் குறிப்பிட்ட கர்தினால், சீன அரசு அதிகாரிகள் மற்றும் சீன தலத்திருஅவையின் தேவைகளைக் கருத்தில் கொண்டதாக அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு இரு தரப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து, அனைத்து சீன ஆயர்களும் திருத்தந்தையின் தலைமையை ஏற்று அவரின் கீழ் வந்துள்ளதாகவும், தினசரி திருப்பலிகளில் திருத்தந்தையின் பெயர் குறிப்பிடப்படுவதாகவும், இவ்வொப்பந்தத்தின் முதல் பலன் பற்றிக் கர்தினால் பரோலின் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் வழியாக நிகழ்ந்த இரண்டாவது பலன் பற்றி குறிப்பிட்ட கர்தினால், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆறு ஆயர்களின் நியமனம் திருத்தந்தையின் முழு ஒப்புதலுடன் இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூன்றாவது பலனாக, அரசுக்குப் பயந்து தலைமறைவு வாழ்வு நடத்திவந்த கத்தோலிக்க ஆயர்கள் ஆறுபேர் அரசின் முழு அங்கீகாரம் பெற்று செயல்படத் துவங்கியதையும் திருப்பீடச்செயலர் எடுத்துரைத்தார்.
சீன தலத்திருஅவையின் தினசரி வாழ்வுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எவ்வித பயமுமின்றி அந்நாட்டு கத்தோலிக்கர்கள் சீன அரசின் உண்மை குடிமக்களாகவும், உண்மை விசுவாசிகளாகவும் வாழ இந்த ஒப்பந்தத்தின் துணைகொண்டு திருஅவை முயன்று வெற்றிகண்டு வருகிறது என கர்தினால் பரோலின்கூறினார்.