கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அமலில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில், கொரோனா லாக்டெளன் சமயத்தில் செய்த உதவிக்காக, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி உள்ளூர்வாசிகளைச் சிலர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக, மங்கடாபுரம் காலனியில் வசிக்கும் சிலர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொரோனா லாக்டெளன் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு உணவு மற்றும் நிதியுதவி அளித்ததாகவும், பின்னர் அவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள், அந்தப் பகுதி மக்களின் வீடுகளிலிருந்து, இந்து கடவுள்களின் படங்களை வீசி எறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், உத்தரப்பிரதேச சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் பிரிவு 3, 5(1)ன் கீழ் மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்களில் மூன்று பேரைக் கைதுசெய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது.
பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி பியூஷ் குமார் சிங், மீதமுள்ளவர்களைக் கைதுசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி உள்ளூர் பா.ஜ.க தலைவர் தீபக் சர்மா, ``இது கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவருகிறது. கொரோனா காலத்தில், மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு ரேஷன் மற்றும் பணம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது, மற்றவர்களும் மதம் மாற மிரட்டப்படுகிறார்கள்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.