திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் 32 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர்கள் ஆண்டவர் இயேசுவிடம் உயிர்த்தெழுதலை பற்றி வினாக்களை எழுப்புகிறார்கள். இவர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்காக உயிர்த்தெழுதலை பற்றி ஆண்டவர் இயேசுவிடம் கேட்கிறார்கள். இந்த சதுசேயர்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கும் முதல் ஐந்து புத்தகங்களில், மோசேவால் கூறப்பட்டிருக்கும் அனைத்தையும் அப்படியே நம்பினார்கள். இந்த ஐந்து புத்தகங்களில் உயிர்த்தெழுதலைப் பற்றி மோசே கூறவில்லை. எனவே, உயிர்த்தெழுதல் என்பது உண்மையில்லை என்பது இவர்களின் வாதம். ஆனால், பரிசேயர்களும், பிற யூதர்களும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்தனர். இப்பொழுது மக்கள் அனைவரும் ஆண்டவர் இயேசுவை சூழ்ந்திருக்க இந்த சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை பற்றிய கேள்விகளை எழுப்புகிறார்கள். திருமணத்தைப் பற்றி பேசினாலும், சதுசேயர்களின் திட்டம் ஆண்டவர் இயேசுவை இழிவுபடுத்துவதே. உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று சொன்னால் மோசேவின் சட்டத்திற்கு எதிராக பேசுகிறார் என்று இவர்கள் ஆண்டவர் இயேசுவிடம் வாதாடக்கூடும். ஒருவேளை உயிர்த்தெழுதல் இல்லை என்று சொன்னால், உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் கொண்டிருந்த மற்ற யூதர்கள் ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக திரும்பக் கூடும். ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து அற்புதமாக பதில் அளிக்கிறார். எரியும் முட்புதரிலே ஆண்டவர் மோசேவிடம், நானே ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள் என்று சொல்லுகிறார். அதாவது, இவர்கள் விண்ணகத்தில் கடவுளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதை மோசேவே கூறியிருக்கிறார் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவர்களுக்கு தெளிவாய் விளக்குகிறார். எனவே, நமது கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை
மோசேவின் சட்டங்களை விட்டுவிட்டு கிரேக்க தெய்வங்களை வழிபடும்படி சித்திரவதை செய்த அந்தியோக்கு மன்னனிடம், நாங்கள் எங்கள் திருச்சட்டங்களுக்காக எங்கள் உயிரைகூட கொடுப்போம் என்றுசொல்லி, இஸ்ரயேல் சகோதரர் எழுவர் சான்று பகிர்ந்ததை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
தந்தைக் கடவுள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுக்கு நிலையான ஆறுதல் தந்து, தீயோர் கையினின்று உங்களை விடுவிப்பார் என்று திருத்தூதர் பவுல் தெசலோனிக்கிய மக்களுக்கு கூறும் அறிவுரையை இவ்விரண்டாம் வாசகத்தில் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் அன்பு தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் உம்திருப்பணியாளர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப உம்மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டு, தங்களுக்கு ஏற்படும் சோதனைகளில் வெற்றி கண்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வானக தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள் மதத்தின் அடிப்படையில் மக்களை துன்புறுத்தாமல் அவரவரின் நம்பிக்கைக்கு ஏற்ப குடிமக்கள் வாழ்ந்திட இவர்கள் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் பரம்பொருளே! நீர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதை நாங்கள் உணர்ந்திடவும், நாங்கள் செய்யும் சிறுசிறு செயல்களிலும், உம்மீது வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் விண்ணக தந்தையே! உயிர்த்தெழுதலில், நிலை வாழ்வில் நம்பிக்கை இல்லாத மக்களை நீர் ஆசீர்வதியும். இவர்களின் நம்பிக்கை குறைவை போக்கி, இவர்களையும் உமது இறையரசில் நீர் சேர்த்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. என்றும் வாழ்பவரே! எங்கள் குடும்பங்களில், பங்கில் மரித்த ஒவ்வொரு ஆன்மாவையும் உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். இவர்களுக்கு நீரே நித்திய இளைப்பாற்றியளித்து, உமது வான் வீட்டில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.