வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான திருப்பயணிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி, ஞாயிறன்று சக்கேயுவோடு தான் தங்க வேண்டும் என்று, இயேசுவே அவரை அழைத்த, “இயேசுவும் சக்கேயுவும்” என்ற, ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக் 19:1-10) மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மூவேளை செப உரை:
இஸ்ரயேலை ஆக்ரமித்திருந்த உரோமையர்களுக்காக வரிதண்டுவோருக்குத் தலைவராகப் பணியாற்றிய சக்கேயு, தனது பதவியைப் பயன்படுத்தி மற்றவர்களிடமிருந்து பணத்தை வசூலித்தார். அதனால் அவர் எல்லாராலும் வெறுக்கப்பட்டார் மற்றும் பாவி எனவும் முத்திரை குத்தப்பட்டார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
தான் குட்டையாக இருந்தது, மக்களால் பொதுவில் தான் நோக்கப்பட்டது மற்றும் இயேசுவை அதுவரை அறியாதிருந்தது ஆகியவற்றின் மத்தியிலும், சக்கேயு இயேசுவைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆவல்கொண்டிருந்தார் என்றுரைத்த திருத்தந்தை, வாழ்க்கையில் எல்லாமே இழந்துவிட்டது போன்ற ஒரு நிலை ஏற்பட்டாலும், மீண்டும் தொடங்குவதற்கும், மனம் மாறுவதற்கும் எப்போதும் ஓரிடத்தை நம்மால் கண்டுபிடிக்கமுடியும் என்பதை, சக்கேயு நமக்குக் கற்றுத் தருகிறார் என்று கூறியுள்ளார்.
இழந்துபோனதைத் தேடி மீட்கவே இறைத்தந்தையால் அனுப்பப்பட்ட இயேசுவின் பார்வை குறித்த தன் எண்ணங்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, அண்ணார்ந்து பார்த்து, சக்கேயுவிடம், ‘விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’ என்று கூறினார் என லூக்கா நற்செய்தி பதிவுசெய்துள்ளது என்றார்.
இந்நற்செய்தி வார்த்தைகள், சக்கேயு கீழே பார்த்தபோது, இயேசு அண்ணார்ந்து பார்த்தார் என, இயேசு பற்றிய அழகிய உருவத்தை நமக்கு வழங்குகிறது என்றுரைத்த திருத்தந்தை, கடவுள், நம்மைத் தாழ்த்தவும், தீர்ப்பிடவும் ஒருபோதும் அவர் கீழே நோக்கியது கிடையாது, மாறாக, நம் காலடிகளைக் கழுவும் அளவிற்கு அவர் தம்மைத் தாழ்த்தினார் மற்றும் நமது மாண்பை நமக்கு மீட்டுக்கொடுப்பதற்கு நம்மை கீழேயிருந்து நோக்கினார், இதுவே மீட்பு வரலாறு எனவும் கூறியுள்ளார்.
இயேசுவும் சக்கேயுவும் என்ற நிகழ்வு, மீட்பு வரலாறு முழுவதையும் தொகுத்துத் தருகிறது என்றும், மனித சமுதாயம், தன் துயரங்களோடு மீட்பைத் தேடுகின்றது. ஆயினும், கடவுள் தம் படைப்புகளைக் காப்பாற்றுவதற்கு இரக்கத்தோடு முதலில் அவற்றைத் தேடுகிறார் என்று திருத்தந்தை கூறினார்.
கடவுள், நம் கடந்தகாலத் தவறுகளை ஒருபோதும் நினைத்துக்கொண்டிருப்பதில்லை. மாறாக, நாம் எவ்வாறு மாறமுடியும் என்பதில் எல்லையற்ற நம்பிக்கையோடு நம்மை அவர் நோக்குகிறார். வாழ்வின் சவால்களை நம்மால் எதிர்கொள்ள திறனற்று இருந்தாலும்கூட இயேசு எப்போதும் நம்மை அன்போடு நோக்குகிறார். அவரை வரவேற்க நாம் தயாராக இருந்தால் நம் வீட்டில் அவரே தங்க நம்மை அழைக்கிறார் என்றும், நம்மையும், தங்களின் தவறுகளிலிருந்து மீண்டெழப் போராடுபவர்களையும் எவ்வாறு நோக்குகிறோம் என சிந்தித்துப் பார்ப்பதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
கீழேயிருந்து நம்மை அணைத்துக்கொள்கின்ற, இழந்துபோனவர்களைப் பரிவன்போடு தேடுகின்ற கிறிஸ்துவின் பார்வையை கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்கவேண்டும். இதுவே, திரு அவையின் பார்வை மற்றும் அதன் பார்வையாக எப்போதும் இருக்கவேண்டும் என்றுரைத்து, தன் மூவேளை செப உரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுசெய்தார்.