சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து, கிறிஸ்தவ மதம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூவரை அசாம் மாநிலத்தின் காவல்துறையினர் கைது செய்து, அவர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அசாம் நற்செய்திக்குழு ஏற்பாடு செய்திருந்த செபக் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டனர் என்று இவர்கள் மீது இந்து அடிப்படைவாதிகள் புகார் அளித்ததை அடுத்து, காவல் துறையினரால், அசாம் மாநிலத்தின் விசா சட்டங்களுக்கு எதிராக நடந்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவரும் 500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அசாம் கிறிஸ்தவ மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ஆலன் “ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மூவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் குற்றமானது ஆதாரமற்றது. ஏற்கனவே இந்த கூட்டம் நடத்துவதற்கும், இவர்களின் பங்கேற்பை பற்றியும் முன்கூட்டியே மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினரிடம் தெரிவித்து அனுமதி பெற்றோம். அதே நேரத்தில் இக்கூட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமே பங்கு கொண்டனர். எனவே இங்கே மதமாற்றத்திற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. ஆகவே இந்த குற்றமானது அடிப்படை ஆதாரமற்றது. மதமாற்றத்தில் ஈடுபட்டனர் என்பது உண்மையானால் அரசாங்கம் இதை தாராளமாக விசாரிக்கட்டும். ஏனெனில் இவர்கள் மூவரும் இங்கு வந்ததற்கு எந்த ஒரு மறைமுகத் திட்டமும் இல்லை. மூவரும் நல்ல ஒரு பேச்சாளர்கள், நல்ல ஒரு மறையுரை ஆற்றுபவர்கள் என்பதற்காகவே இவர்களை நாங்கள் வரவழைத்தோம்” என்று கூறினார். ஆனால், அசாம் காவல்துறையினர் இவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றம் உண்மை. இதற்கு ஆதாரமாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இருக்கின்றன என்று கூறினர்.