Namvazhvu
அருள்பணியாளரின் உருவாக்கம் நற்செய்தி அறிவிப்புப்பணியின் மையம்
Friday, 11 Nov 2022 09:09 am
Namvazhvu

Namvazhvu

உரோம் நகரில் இலத்தீன் அமெரிக்காவின் அருள்பணித்துவப் பயிற்சிக் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும், பயிற்சியாளர்களுக்கென்று, அருள்பணியாளர் திருப்பீடத் துறை நடத்தும் கருத்தரங்கில் பங்குபெறும் ஏறத்தாழ 160 உறுப்பினர்களை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் நவம்பர் 10,  வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்து உரையாற்றினார்.

இறைவார்த்தை மற்றும், அருளடையாளங்களால் ஆண்டவர் இயேசுவின் இருத்தலை வெளிப்படுத்தும் திருப்பணியை ஆற்றுகின்றவர்களை உருவாக்குவதில், தரமான ஒரு பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, ரேஷியோ ஃபன்டமென்டலிஸ் இன்ஸ்டிடுடிஓனிஸ் சேக்ரட்டொடலிஸ் அதாவது அருள்பணித்துவ அழைத்தல் வாழ்வின் கொடை பற்றிய திருத்தூது அறிக்கையில், குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகளில் அருள்பணியாளர்களின் உருவாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பண்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

அருள்பணித்துவ வாழ்வுக்கான பயிற்சி, தனித்துவமிக்கது, அவசியமானது, குழும, மற்றும், மறைப்பணிப் பண்பைக்கொண்டது என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் இறையழைத்தல் குறைவதால், இப்பயிற்சிக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், மறைமாவட்டங்கள், மற்றும், மாநில பயிற்சிக் கல்லூரிகளுக்கு இடையே இவற்றை அமைக்கவேண்டியுள்ளது என்றும், இது, நாடுகளின் ஆயர் பேரவைகளின் பணியாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

உருவாக்குனர்களுக்கு இயேசுவே முன்மாதிரிகை

அருள்பணியாளர்களே, நீங்கள் திருஅவைக்கு ஆற்றுகின்ற பணி எளிமையானது அல்ல, உருவாக்கும் பணியில் மனச்சோர்வு, களைப்பு, கோபம், திறமையின்மை போன்ற உங்களின் மனிதத்திற்கு அடிக்கடி சவாலை எதிர்கொள்கின்றீர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இக்காரணத்தால் அவர்கள், மனத்தாழ்மையும் கனிவும் நிறைந்த இயேசுவிடம் தினமும் செபிக்கவேண்டும், இதனால் அவர்களின் இதயம், மெதுமெதுவாக போதகரான ஆண்டவர் இயேசுவின் துடிப்பிலிருந்து கற்றுக்கொள்ளும் என்று எடுத்துரைத்தார்.

வருங்கால அருள்பணியாளர்களை உருவாக்கும் உங்களின் பணிக்கும் வாழ்வுக்கும் திருஅவை நன்றியுடன் இருக்கின்றது என்றும், அருள்பணியாளர்களின் அன்னை மரியா, உங்களை ஊக்கப்படுத்தி, உங்களது பணியை வழிநடத்துவாராக, எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று சொல்லி, தன் உரையை திருத்தந்தை பிரான்சிஸ்  நிறைவுசெய்தார்.