Namvazhvu
நவம்பர் - 13 6-வது உலக வறியோர் தினத்திற்கான தயாரிப்புகள்
Friday, 11 Nov 2022 10:45 am
Namvazhvu

Namvazhvu

அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’(2கொரி.8:9) என்ற பவுலடியாரின் வார்த்தைகளை மையக்கருத்தாகக் கொண்டு, நவம்பர் 13, வரும் ஞாயிறன்று 6-வது உலக வறியோர் தினத்தைச் சிறப்பிப்பதற்காக தயாரிப்புகள் நடந்து வருவதாக நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறை தெரிவித்துள்ளது

திருஅவையின் தொடக்க காலத்திலிருந்தே, ஏழைகளின் தேவைகளில் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ சமூகத்தின் சிறப்புப் பண்பாக இருந்ததை, கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் புனித பவுலடியார் சுட்டிக்காட்டியுள்ளதை, இந்த ஆண்டுக்கான செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு நினைவூட்டுகிறார் என்றும், அந்தக் கடிதத்தில், இயேசு காட்டிய அன்பின் அடையாளமாக எருசலேமில் உணவுப் பற்றாக்குறையால் மிகவும் அவதியுற்ற எருசலேம் சமூகத்திற்காக ஒரு சிறப்பு நன்கொடையைத் திரட்டுமாறு உள்ளூர் கிறிஸ்தவச் சமூகத்தை திருத்தூதர் பவுல் கேட்டுக்கொள்வதையும் நாம் காணமுடிகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

உலக வறியோர் தினத்தன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பெருங்கோவிலில் வறியோர் மற்றும், ஏனைய நம்பிக்கையாளர்களின் சிறப்புமிக்க பங்கேற்புடன் திருப்பலிக்குத் தலைமை தாங்குகிறார் என்றும், திருப்பலிக்  கொண்டாட்டத்தின் முடிவில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், 1,300 ஏழையோருக்குச் சிறப்பு உணவு வழங்கப்படும் என்றும், அத்திருப்பீடத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

உலக வறியோர் தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, இந்த நிகழ்வை ஊக்குவிக்கும் விதமாக நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீடத் துறை, உரோமையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது என்றும்உரோமையிலுள்ள பங்குப்  பணியாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தாலிய சந்தை வழங்கும் உணவுப் பொருள்களுடன்கூடிய 5,000 உணவுப் பெட்டிகள் உள்ளூர் குடும்பங்களுக்காக உரோமை முழுதும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரத்தில், பல குடும்பங்கள் ஏற்கனவே எதிர்கொள்ளும் வறுமை நிலைமையை மோசமாக்கும் எரிசக்தி நெருக்கடியால் மிகவும் சிரமப்படுபவர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் செலுத்தப்படும் என்றும் நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீடத் துறை அறிவித்துள்ளது.