Namvazhvu
கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ஆயர்களின் பொதுப்பேரவை
Monday, 14 Nov 2022 07:18 am
Namvazhvu

Namvazhvu

உரையாடல் என்பது வாய்ப்பல்ல; மாறாக, இந்தியத் தலத்திரு அவையின் மிக முக்கிய தேவை என்றும், அமைதி மற்றும் சந்திப்புகளை விளிம்புநிலை மக்களிடம் உருவாக்குபவர்களாக இந்திய ஆயர்கள் இருக்க விரும்புகிறார்கள் என்றும் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 6 ஆம் தேதி ஞாயிறு முதல் 11 ஆம் தேதி வெள்ளி வரை இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற, CBCI எனப்படும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 35 வது கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

மும்பை பேராயரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியாவில் உள்ள தலத்திரு அவைக்கு உரையாடல் என்பது வாய்ப்பாக அல்ல; மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது என்றும், மக்களிடையே அமைதியை உருவாக்கி அவர்களை ஒன்றிணைக்கவும், புலம்பெயர்ந்தோர், LGBTQ  சமூகங்கள், விளிம்புநிலை மக்கள், திரு அவையைவிட்டு வெளியேறியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவர் அருகில் இருந்தும் தலத்திரு அவை செயல்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திரு அவையின் ஒவ்வோர் உறுப்பினரும் இச்செயல்பாட்டில் பங்கேற்க அழைக்கப்படுகின்றார்கள் எனவும், 2 கோடியே 20 இலட்சம் கத்தோலிக்கர்களைக் கொண்ட இந்திய நாட்டில் ஒருங்கிணைந்த பயண வாழ்விற்கான உறுதியான வழிகளைப் பற்றி சிந்திக்க இந்திய ஆயர்கள் அனைவரும் கூடியிருப்பதாகவும் கர்தினால் கிரேசியஸ் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவதற்கிணங்க அனைத்து இந்திய மறைமாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆயர்கள், ஒருங்கிணைந்த தலத்திரு அவையாக இருக்க அழைப்பு என்னும் தலைப்பில் பங்கேற்று கலந்துரையாடிய இக்கூட்டத்தில், கடவுளின் மக்கள் அனைவரையும் திரு அவையின் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான புதிய வழிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக, இவ்வாயர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் இந்திய கத்தோலிக்க மறைமாவட்டங்களில் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் கத்தோலிக்கர்கள், 54,000 கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், 20,000 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளன என்றும், இதன் வழியாக 6 கோடி சிறார் மற்றும் இளையோர் பயனடைகின்றனர் என்றும் பேராயர் மச்சாடோ தெரிவித்துள்ளார்.

நவம்பர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, இந்தியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லி அவர்கள் தலைமையில், நற்கருணைக் கொண்டாட்டத்துடன் துவங்கிய இக்கூட்டத்தில் திருத்தந்தையின் நவம்பர் மாத செபக் கருத்திற்கேற்ப வீடற்ற அனாதைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இந்திய ஆயர்கள் செபித்தனர்.

மேலும் புனித பவுல் தீத்துவிற்கு எழுதிய திருமடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டு, கடவுளின் நிர்வாகி, நம்பகத்தன்மை, விருந்தோம்பல் பண்பு, அன்பு, நற்குணம், விவேகம், நீதி, அர்ப்பணம், தன்னம்பிக்கை, கடவுளின் வார்த்தையைக் கடைப்பிடிக்கும் திறன் மற்றும் திரு அவையின் கருத்துக்களுக்கு உண்மையுள்ள ஆயர் தீத்து போன்று இந்திய ஆயர்கள் வாழ அழைக்கப்படுகின்றார்கள் என்றும், பேராயர் ஜிரெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் புனித ஆறாம் பவுலின் வார்த்தைகளான, இன்றைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது கிறிஸ்தவ சமூகம் மற்றும், அனைத்து மனிதகுலத்திற்கும் செய்யப்படும் சேவை என்பதையும் இந்திய ஆயர்கள் நினைவுகூர்ந்தனர்.