Namvazhvu
திண்டுக்கல்​: பள்ளி​ மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்; நள்ளிரவில் மீட்ட போலீஸார் - நடந்தது என்ன?!
Tuesday, 15 Nov 2022 05:32 am
Namvazhvu

Namvazhvu

​திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியா​ல் பெண்கள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். திண்டுக்கல், நந்தவனப்பட்டி, சீலப்பாடி, சென்னம்மாநாயக்கன்பட்டி, முருக பவனம், பேகம்பூர் உள்ளிட்ட திண்டுக்கல் நகரின் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவிகள் படித்து வருகின்றனர். ​இவர்கள் ஆட்டோக்கள், பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.​

​இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த ​8 ஆம் வகுப்பு மாணவிகள்​ 4 பேர்​ மாலை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் வந்து முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது.

தொடர்ந்து, திண்டுக்கல் ​செல்லாண்டியம்மன் கோயில் தெரு, நந்தவனப்பட்டி, சென்னம்மா நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ​மாணவிகளின் பெற்றோர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். பள்ளிக்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள ​கண்காணிப்பு ​கேமரா பதிவுகளை கொண்டு போலீ​ஸா​ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மாணவிகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். ​முதற்கட்ட விசாரணையில், மாணவிகளில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட வெளியே சென்றிருப்பதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.

பின்னர், மாயமான மாணவிகள் நள்ளிரவு 12 மணிக்கு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதனிடம் கேட்டோம். ``குழந்தைகள் மாயமானது தொடர்பான புகாரை பெற்றவுடன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி இருந்தோம். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விசாரித்தோம். இந்நிலையில் இரவு கரூர் பேருந்து நிலையத்தில் நான்கு மாணவிகள் நின்று கொண்டிருப்பதாக கரூர் போலீஸார் எங்களுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் கரூர் பேருந்து நிலையத்திற்கு சென்று மாணவிகளை பத்திரமாக மீட்டு வந்தோம். மாணவிகளிடம் விசாரித்த போது படிப்பில் நாட்டம் இல்லாமல், பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் வெளியேறியதாக கூறியுள்ளனர். மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோர்களிடமும் விசாரிக்க உள்ளோம்” என்றார்.