Namvazhvu
பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி மற்ற மதங்களோடுள்ள உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும்
Wednesday, 16 Nov 2022 09:54 am
Namvazhvu

Namvazhvu

இந்திய ஆயர்கள், காந்திய உணர்வில், மற்ற மதங்களோடுள்ள உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று, இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத் தூதர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 11 ஆம் தேதி, வெள்ளியன்று பெங்களூருவில் தொடங்கிய,  CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் 33வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவர்களும், மற்றவர்களோடு உரையாடுவதற்குத் தங்களை அர்ப்பணிக்கவேண்டும், அதன் வழியாக, அறநெறி விழுமியங்கள் பாதுகாக்கப்படும் மற்றும் படைப்பனைத்திலும் கடவுள் வாழ்த்தப்படுவார் என்று கூறியுள்ளார்.

அமைதிக் கலாச்சாரத்தைப் பேணிவளர்க்கும்வண்ணம், பல்சமய உரையாடலையும், மக்கள் மத்தியில் உறவுகளையும் ஊக்குவிக்கவேண்டும் என்றும், பேராயர் ஜிரெல்லி அவர்கள் இந்திய ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இத்தொடக்க நிகழ்வைத் தலைமையேற்று நடத்திய, கோவா மற்றும் டாமன் பேராயரும், CCBI  பேரவையின் தலைவருமான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள் பேசுகையில், நல்லதொரு வருங்காலத்தை அமைக்கும் பணியில், எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு, கோவிட் பெருந்தொற்று சூழலுக்குப் பின்னுள்ள காலம், நல்லதொரு வாய்ப்பாக உள்ளது என்பதை நினைவுபடுத்தினார்.

நம் முன்னுரிமைகளை மீள்ஆய்வுசெய்யவும், சமத்துவமின்மைகளை அகற்றவும், நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை உலகின் உண்மைநிலையோடு நம்மை இணைத்துக்கொள்ளவும் அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், கர்தினால் ஃபெராவோ அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

CCBIயின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் முதன் முறையாகப் பங்குகொண்ட பேராயர் ஜிரெல்லி அவர்களை, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களும், கர்தினால் ஃபெராவோ அவர்களும் இந்தியப் பண்பாட்டுமுறையில் வரவேற்றனர். CCBIயின் துணைத் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், நற்செய்தி திருநூலை பேராயர் ஜிரெல்லி அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார்.

பெங்களூருவிலுள்ள CCBIயின் செயலகத்தில் நவம்பர் 11 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்கிய CCBIயின் 33வது ஆண்டு நிறையமர்வு கூட்டம், நவம்பர் 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. இக்கூட்டத்தின் நிறைவாக, CCBIயின் துணைப் பொதுச் செயலர் அருள்முனைவர் Stephen Alathara அவர்கள் அனைவருக்கும் நன்றியுரையாற்றினார்.