இந்திய சிறைப்பணி குழுமத்தின் 460க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கோவாவில் “ஒருங்கிணைக்க சீர்திருத்தம்” என்ற தலைப்பில் 4 நாட்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கிற கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
நவம்பர் 15-18 தேதிகளில் பழைய கோவாவில் உள்ள ஜோசப் வாஸ் புதுப்பித்தல் மையத்தில் இந்திய சிறைப்பணி குழுமத்தின் 13வது தேசிய மாநாட்டில், ஒரு கர்தினால், மூன்று ஆயர்கள், 85 அருள்பணியாளர்கள் மற்றும் 122 துறவற அருள்சகோதரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
கோவாவில் உள்ள தன்னார்வலரான கொரட்டி மார்டின்ஸ், “இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உறுப்பினர்களின் பரிந்துரை செபங்கள் அவசியம்” என்று கூறினார். 1981 ஆம் ஆண்டு நற்கருணை துறவற சபையைச் சார்ந்த குருமாணவர் பிரான்சிஸ் கொடியன் மற்றும் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள புனித தாமஸ் வடவத்தூர் குருமடத்தில் பயின்ற குருமாணவர் அவரது வகுப்புத் தோழரான வர்கீஸ் கரிப்பேரியும் இச்சிறைப்பணியை துவங்கியிருக்கிறார்கள்.
அருட்தந்தை பிரான்சிஸ் கொடியன், “தினமும் அரை மணி நேரம் திவ்விய நற்கருணை முன் செலவிட வேண்டும் என்பதுதான் எங்களின் முதல் முடிவாக இருந்தது. பிறகு எங்கள் வாராந்திர ஆன்மீகப் பயிற்சிகளின் பலன்கள் மற்றும் தனிப்பட்ட தியாகங்களை உலகினரின் மனமாற்றத்திற்காக ஒப்பு கொடுக்க முடிவு செய்தோம். இதன் பயனாக 1982 ஆம் ஆண்டு ஒரு செபக் குழு உருவானது. 1985 இல் கோட்டயம் துணைச் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், நாங்கள் மனம் தளரவில்லை. இந்த செபக் குழுவிற்கு இயேசுவின் சகோதரத்துவம் என்று பெயரிட்டோம். 1995 இல் இதற்கு இந்திய சிறைப்பணிக் குழு (PMI) என்று மறுபெயரிடப்பட்டது. கைதிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை அணுகவும், அவர்களின் விடுதலைக்கு உதவவும், சட்டம் மற்றும் நிதி உதவி மூலம் அவர்களை மீட்டு, சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு அளிக்கவும் இந்திய சிறைப்பணிக் குழு உழைத்து வருகிறது” என்று கூறினார்.