Namvazhvu
​​​​​​​நவம்பர் 21 அமைதிக்கான விளையாட்டுப் போட்டிக்காக நன்றி:திருத்தந்தை
Friday, 18 Nov 2022 06:51 am
Namvazhvu

Namvazhvu

நவம்பர் 21, வருகிற திங்கள் மாலையில் உரோம் மாநகரின் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கும் அமைதிக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் அனைத்து வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், மற்றும் அதனை ஏற்பாடு செய்பவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இவர்களோடு வந்திருந்த, இவ்விளையாட்டுப் போட்டியின் வெற்றிச்சின்னத்தை வடிவமைத்தவரும், தனது நண்பருமான அட்ரியன் பல்லரோல்ஸ் அவர்களையும் நவம்பர் 14,  திங்களன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில் சந்தித்து தன் வாழ்த்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

அமைதி என்பது...

போரினால் குறிக்கப்பட்டுள்ள ஓர் உலகில் இவ்வீரர்கள், அமைதியின் விதைகளை வளர்த்துவருவதற்கு நன்றி கூறியத் திருத்தந்தை, அமைதியின் விதைகள் சிறியவையாக இருக்கலாம், ஆனால் அவை உலகை மாற்றுகின்ற வல்லமை படைத்தவை என்று கூறியுள்ளார்.

அமைதி என்பது, உங்கள் கைகளில் இருக்கும் கற்களை எறிவது அல்ல, மாறாக, உடனிருத்தல், நட்புறவு, எப்போதும் மற்றவரை அரவணைக்க விரியும் கரங்கள் ஆகிய இவ்வீரர்களைப் போன்றவர்களின் அடையாளங்களின் கனிகள் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

போர் மற்றும் அழிவுகளுக்காக எப்போதும் காத்திருக்கின்ற ஓர் உலகில் நாம் அமைதியை விரும்புகிறோம் என்பதால், அமைதிக்காக விளையாடும் உங்களுக்கு நன்றிகூற விழைகிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Scholas Occurrentes என்ற பாப்பிறை நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசிர் மற்றும், ஆதரவோடு நடத்துகின்ற அமைதிக்கான மூன்றாவது கால்பந்து விளையாட்டுப் போட்டியில், உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகின்றனர்.

"நாங்கள் அமைதிக்காக விளையாடுகிறோம்" என்ற விருதுவாக்கோடு நடத்தப்படும் இக்கால்பந்து விளையாட்டுப் போட்டி, வருகிற திங்கள் மாலையில் மூன்றாம் முறையாக நடைபெறவிருக்கின்றது. இதற்குமுன்பு, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாந்தேதியும், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியும் நடைபெற்றுள்ளன. இவற்றில் பல புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர்.

இவ்வாண்டில் நடைபெறும் இவ்வமைதிக்கான கால்பந்து போட்டி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் இறைபதம்சேர்ந்த மரதோனா அவர்கள், இதற்கு முந்தைய அமைதிக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர் மற்றும், அவ்விளையாட்டுக் குழுவை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜெண்டினாவின்  புவனோஸ் அய்ரசில் பேராயராகப் பணியாற்றியபோது, வெள்ளிப் பொருள்களின் கைவினைஞராகிய அட்ரியன் அவர்களின் திருமணத்தை ஆசிர்வதித்ததோடு அவர்களின் பிள்ளைகளுக்கும் திருமுழுக்கு அளித்துள்ளார்.