நவம்பர் 16, புதன், சுவீடன் நாட்டு புனித மார்கிரேட் திருநாள். இந்நாளின் முதல் நிகழ்வாக, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில், கர்தினால் லாஸாரோ யூ ஹியுங் சிக் அவர்களுடன் காத்திருந்த, கொரியாவின் புனித ஆண்ட்ரியா கிம் டேகன் அவர்கள் பற்றிய "பிறப்பு" என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும், நடிகர்கள் 31 பேரைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் ஆசிர்வதித்தார். அதற்குப்பின்பு, புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானின் புனித பேதுரு வளாகம் சென்றார். இந்நிகழ்வில் முதலில் திருப்பாடல் 30லிருந்து நான்கு வசனங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர், திருத்தந்தை, தெளிந்துதேர்தல் குறித்து மறைக்கல்வியுரையை இத்தாலியத்தில் தொடங்கினார்.
ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன். ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன். நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?.... ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன் (தி.பா.30,7-9.12).
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, தெளிந்துதேர்தல் குறித்த நம் மறைக்கல்வியை மீண்டும் தொடங்குகிறோம். உணர்ச்சிகள் எழுகின்ற தருணத்தில் உடனடியாகத் தீர்மானங்கள் எடுத்திருப்பது குறித்து பின்னால் வருந்தாமல் இருப்பதற்காக, அந்நேரத்தில் நம் மனதிற்குள்ளே நடப்பது என்னவென்பதை அறிவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல், நம் ஆன்மிக நிலையிலும் “வறட்சியை” அல்லது மனதில் அமைதியின்மையை மற்றும், திருப்தியற்ற நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறோம். உண்மையில், அத்தகைய வறட்சி நேரங்கள், நம் வளர்ச்சிக்கான நேரங்களாக இருக்க முடியும். அவை, நம் மன அமைதிக்கு ஒரு சவாலாகவும், ஆன்மிக வாழ்வில் வளர்வதற்கு உந்துவிசையாகவும் உள்ளன. ஹிப்போ நகர் அகுஸ்தீன், எடித் ஸ்டைன், ஜோசப் பெனடிக்ட் கொத்தலெங்கோ, சார்லெ து ஃபூக்கூ போன்ற பெரிய புனிதர்களுக்கு, மனதிற்குள் ஏற்படும் குழப்பம், மற்றும், அமைதியின்மை, ஓர் ஆழமான மனமாற்றத்திற்கு முன்னோடியாக இருந்துள்ளது. ஆன்மிக வறட்சியினால் ஏற்படும் அனுபவம், புதிய ஒளியில் பொருள்களைக் காண்பதற்கு நம் கண்களைத் திறக்கின்றது, பலநேரங்களில் மிகச்சாதாரணமானதாக நாம் எடுத்துக்கொள்ளும் ஆசிர்களைப் பாராட்டச் செய்கின்றது மற்றும், ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பதில் மனஅமைதியை உணரச்செய்கின்றது. இவ்வாறு இயேசுவோடு உள்ள நம் உறவை நாம் ஆழப்படுத்துகிறோம். இது, மனஆறுதலை மட்டுமல்ல, கிறிஸ்தவச் சீடத்துவத்தில் முதிர்ச்சியடைவதற்குப் புதிய சவால்களையும் ஏற்கச்செய்கிறது. ஆன்மிக வறட்சி அல்லது மனச்சோர்வை எதிர்கொள்ளும் நேரங்களில், இறைவேண்டலில் ஆழப்படவும், கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கவும், அவரது வாக்குறுதிகளில் உறுதியான நம்பிக்கை வைக்கவும் விடுக்கப்படும் ஓர் அழைப்பாக, இந்த அனுபவத்தை ஏற்போம்.
இறைவேண்டலில் ஆண்டவரோடு உரையாடல்
பல நேரங்களில் நம் இறைவேண்டல்கள், ஆண்டவரில் உண்மையான ஆர்வமின்றி, நமக்குத் தேவையானவற்றை மட்டுமே மன்றாடுவதாக இருக்கின்றன. ஆனால், ஆண்டவர் எத்தகையவர் என்பதை அவரிடமே கேட்பது நமக்குப் புதிராகத் தோன்றலாம். ஆயினும், இது, நம்மோடு தம் வாழ்வை முழுமையாகப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்ற ஆண்டவரோடு உண்மையான உறவில் நுழைவதற்கு ஓர் அழகான வழியாகும். ஆன்மிக வாழ்வு என்பது, நம் வசதிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு செய்முறை அல்ல, நம் மனதின் நல்வாழ்வுக்காக நாம் வகுத்துக்கொள்ளும் திட்டமும் அல்ல, மாறாக, நம் திட்டங்களுக்குள் அடங்காத உயிருள்ள கடவுளோடு கொண்டிருக்கும் உறவாகும். எனவே துன்பங்களை எதிர்கொள்ளும்போதுகூட சோர்ந்துவிடாமல், அள்ள அள்ளக் குறையாத கடவுளின் அருளோடு, சோதனை நேரங்களை மனஉறுதியோடு எதிர்கொள்ளவேண்டும்.
காலநிலை சற்றுக் குளிராக இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல நாடுகளின் திருப்பயணிகளை, இவ்வாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நவம்பர் 13, ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்தோர், அதில் பாதிக்கப்பட்டோர், உக்ரைனில் போரால் துயருறும் மக்கள் போன்ற அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபித்தார். பின்னர், ஆண்டவராம் கிறிஸ்துவின் மகிழ்வு மற்றும் அமைதி அனைவர் மீதும் பொழியப்பட செபித்து, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார்.