அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடலாம் என்றும், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் கூறுவதுபோல், நம்பிக்கையுள்ள மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் தயாராக இருக்கின்றோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
நவம்பர் 19, சனிக்கிழமை வத்திக்கானில் அசிரா கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை மூன்றாம் அவ (Awa) அவர்களை சந்தித்த திருத்தந்தை, உலகின் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஒரே நாளில் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடலாம் என்று பரிந்துரைத்த முதுபெரும் தந்தையின் முயற்சிக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.
முதல் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயண பேரவையின் நீசேயா ஆண்டை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு அனைத்து கத்தோலிக்கர்களும் ஒரே நாளில் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடலாம் எனவும், இதன் வழியாக நாம் அனைவரும் ஒரே கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துரைக்கின்றோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நாம் நமது பொதுவான வேர்களுக்குத் திரும்புவது மட்டுமல்லாமல், இன்றைய உலகை, உரையாடல் மற்றும் சான்றுள்ள வாழ்வுடன் அணுகி, கிறிஸ்துவின் அன்பின் மறைபொருளையும் அவர் மீதான அன்பையும் அறிவிக்க முடியும் என்று கூறிய திருத்தந்தை, சிரியாக் மற்றும் இலத்தீன் மரபுவழிப் பாரம்பரியத்தில் நம்பிக்கை, மற்றும் பணியின் ஒளிமயமான வரலாறு, சிறந்த புனிதர்களின் முன்மாதிரியான வாழ்க்கை, வளமான இறையியல், மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது எனவும் எடுத்துரைத்துள்ளார்.
நிகழ்காலங்களில், மத்திய கிழக்கு நாடுகள் வன்முறை, உறுதியற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மையினால் துன்பங்களை அனுபவித்து வருகின்றன என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தில் நாம் எளிமையாக, உலகளாவிய விதத்தில் அணுகக்கூடியவர்களாக, இயேசுவைப் போல மாற தொடக்க நிலை அடிப்படை வேர்களுக்குச் செல்லவேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
கடினமான சூழல்களிலும் தலத்திரு அவை அருள்பணியாளர்கள், கிறிஸ்துவின் நற்செய்திக்கு சான்றுபகர முயல்கின்றனர் எனவும், ஒற்றுமையாக செயல்படுகின்றனர் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்