Namvazhvu
வட இத்தாலியின் பீட்மாண்ட் மாநிலம் அமைதிக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்து வருகிறோம்
Tuesday, 22 Nov 2022 07:39 am
Namvazhvu

Namvazhvu

நவம்பர் 20, ஞாயிறன்று வட இத்தாலியின் பீட்மாண்ட் மாநிலத்திலுள்ள ஆஸ்தி நகரில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றியபின்பு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் இடம்பெறும் போர்கள் முடிவுறவேண்டும் என்று செபிப்போம் என்று கூறினார்.

தன் நெருங்கிய உறவினர் ஒருவரின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, நவம்பர் 19 சனிக்கிழமையன்று ஆஸ்தி நகருக்குச் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர மக்களின் இனிய வரவேற்பைப் பெற்றுஞாயிறு காலையில் அந்நகர மக்களுக்கு பெருவிழா திருப்பலியையும் நிறைவேற்றினார்.

அமைதிக்காக இறைவேண்டல்

"அமைதிக்குப் பஞ்சம்" ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்துவரும் நாம், உலகின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் போர்களை, குறிப்பாக உக்ரைன் போரை நினைத்துப் பார்ப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பாலஸ்தீனாவின் காசாவிலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் இரு நாள்களுக்குமுன்பு இடம்பெற்ற தீ விபத்தில், பத்து சிறார் உட்பட குறைந்தது 21 பேர் இறந்துள்ளதையும் மிகுந்த கவலையோடு குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் பலியானவர்கள் இறைவனில் நிறையமைதியடையவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம் எனவும், வன்முறையால் பல ஆண்டுகளாகத் துன்புற்றுவரும் அம்மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ஆற்றுவோம், மற்றும், அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்

இளையோரால் உலகை மாற்ற முடியும்

கிறிஸ்து அரசர் பெருவிழா நாளில், தங்களின் திருஅவைகளில் உலக இளையோர் நாளைச் சிறப்பித்த இளையோருக்கு தன் அன்பைத் தெரிவிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மரியா எழுந்தார், மற்றும், விரைந்து சென்றார்என்ற இவ்வாண்டு இவ்விளையோர் நாளின் கருப்பொருளே, லிஸ்பனில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளின் தலைப்பும் ஆகும் என்று கூறினார்

அன்னை மரியா, இளம்பெண்ணாக இருந்தபோது இவ்வாறு விரைந்து சென்றார் என்றும்புறப்படுதல், விரைந்து செல்தல் ஆகிய இரு சொல்லாடல்களும் இளமையாய் இருப்பதன் இரகசியம் என மரியா நமக்குச் சொல்கிறார் என்றும், நம்மைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு, நம் வாழ்வை வீணாக்காமலும், வசதியான அல்லது போலியான வாழ்வைத்தேடி ஓடாமலும் இருக்குமாறும் இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், நம் தனிப்பட்ட அச்சங்களைப் பின்னுக்குத் தள்ளி, உயரிய இலக்கை அடையும் நோக்குடன் தொடர்ந்து முன்னோக்கிப் பயணிக்கவும், தேவையில் இருப்போருக்கு உதவவும் வேண்டும் என திருத்தந்தை கூறினார்.

அமைதியின் கனவை நனவாக்கவேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், உலகை மாற்றவல்ல இளையோர் இன்று நமக்குத் தேவைப்படுகின்றனர் என்றுரைத்து தன் மூவேளை செப உரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுசெய்தார்.