Namvazhvu
திருத்தந்தை: ஆறுதல், ஆன்மிக வாழ்வுக்கு மிகச் சிறந்த கொடை
Thursday, 24 Nov 2022 08:54 am
Namvazhvu

Namvazhvu

2022, நவம்பர் 23 ஆம் தேதி, புதன் காலை 9.15 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் குறித்த தனது ஒன்பதாவது மறைக்கல்விப் பகுதியை இத்தாலியத்தில் தொடங்கினார். இந்நிகழ்வில் திருப்பாடல் 62லிருந்து (தி.பா.62,2-3,6) மூன்று வசனங்கள் முதலில் வாசிக்கப்பட்டன.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். தெளிந்துதேர்தலில் ஆன்மிக வறட்சி குறித்த பல்வேறு கூறுகளைத் தியானித்துவந்த நாம், அதற்கு மற்றுமொரு முக்கியமான கூறாகியஆன்மிக ஆறுதல்பற்றி இன்று சிந்திப்போம். இது மேலோட்டமாக ஏற்கப்படவேண்டியது அல்ல, ஏனெனில் இது தன்னிலே புரிந்துகொள்ளாமைக்கு இட்டுச்செல்லக்கூடும். ஆன்மிக ஆறுதல் என்றால் என்ன? இது எல்லாவற்றிலும் கடவுளின் இருத்தலைப் பார்ப்பதால் கிடைக்கின்ற உள்ளார்ந்த மகிழ்வை ஆழமாக அனுபவிப்பதாகும். இது, நம் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கை வலுப்படுத்துகிறது, நன்மை செய்யவும்கூட சக்தியை அளிக்கிறது. தூய ஆவியாரின் கொடையாகிய இந்த ஆன்மிக ஆறுதல், சோதனை மற்றும் துன்பநேரங்களிலும்கூட, எல்லாவற்றிலும் கடவுளின் ஆறுதலளிக்கும் இருத்தலையும், பராமரிப்பையும் உணரச் செய்கிறது. ஏனென்றால், அதில் கிடைக்கின்ற மனஅமைதி, எவ்விதச் சோதனையையும்விட வலிமையானது என்பதை ஒருவர் எப்போதும் அனுபவிக்கின்றார். எனவே ஆன்மிக ஆறுதல், ஆன்மிக வாழ்வுக்கும், பொதுவாக, வாழ்வு அனைத்துக்குமே மிகச் சிறந்த கொடையாகும். ஆன்மிக ஆறுதல், நம் உள்ளத்தின் ஆழத்தில் நடைபெறுகின்ற இயக்கமாகும். இது, உள்ளாழத்தைத் தொடுகின்றது. புனித இலெயோலா இஞ்ஞாசியார், இதயம், திருவருளால் நிறைந்துள்ள ஓர் இயக்கத்தை, ஒரு கடற்பஞ்சில் விழும் நீர்த்துளிக்கு ஒப்பிடுகிறார். அமைதியாகவும், நம் சுதந்திரத்தை முழுவதும் மதிப்பதிலும் நடைபெறுகின்ற இந்த இயக்கத்தில், ஆண்டவர், அவரது குன்றாத அன்பில் நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் உறுதியான பற்றுறுதியில் நம்மை உறுதிப்படுத்துகிறார். இஞ்ஞாசியார், எடித் ஸ்டைன், லிசியத் தெரஸ் போன்ற மாபெரும் புனிதர்களின் வாழ்வில், ஆன்மிக ஆறுதலின் அனுபவம், உள்மன அமைதி மற்றும் உறுதிப்பாட்டை மட்டுமல்ல, கடவுளின் பணியில் வியத்தகு காரியங்களை நிறைவேற்றவும் வலிமையை நல்குகின்றது. உண்மையான ஆன்மிக ஆறுதலின் அடையாளம், அது கொணரும் மனஅமைதி, பலனுள்ள மற்றும் நிலைத்த அமைதியாகும். போலியான, மேலோட்டமான மற்றும் சுயவிருப்பம் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் ஆறுதல், உண்மையான ஆன்மிக ஆறுதல் அல்ல என்பதை, தெளிந்துதேர்வு செய்வதன் வழியாக கண்டுணரப்படவேண்டும். புனித பெர்னார்டினின் ஞானமுள்ள ஆலோசனைக்கேற்ப, நம் ஆன்மிகப் பயணத்தில் ஆறுதல்களின் கடவுளை அல்ல, மாறாக, கடவுளின் ஆறுதலைத் தேடுவதில் எப்போதும் கருத்தாய் இருப்போமாக. கடவுளே மிக அழகான கொடை என்பதை இழந்து, அவரோடு நமக்குள்ள உறவை, சிறுபிள்ளைத்தனமானதாக, நாம் பயன்படுத்துகின்ற மற்றும் நுகர்கின்ற ஒரு பொருளாகக் குறைக்கின்ற ஆபத்தை நாம் பலநேரங்களில் எதிர்கொள்கின்றோம்.

இவ்வாறு உண்மையான ஆன்மிக ஆறுதலைத் தெளிந்து தேர்வுசெய்தலின் அவசியத்தை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.