திருப்பலி முன்னுரை
இன்று நாம் திருவழிபாட்டின் புதிய காலத்தை துவங்குகிறோம். இதுவரை பொதுக்காலத்தை கொண்டாடிய நாம், இன்றிலிருந்து திருவருகைக் காலத்தை கொண்டாட போகிறோம். திருவருகைக் காலத்தின் இம்முதல் ஞாயிறு நம்பிக்கை ஞாயிறு என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால், பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் முன்னறிவித்த மானிடமகன் நிச்சயமாக வருவார் என்ற நம்பிக்கையை இஞ்ஞாயிறு வாசகங்கள் நமக்கு தருகின்றன. இன்று நாம் விழிப்போடும், ஆயத்தமாகவும் இருந்து, மானிட மகனை எதிர்கொண்டு, நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். மானிடமகன் வருகிறபோது, நோவா காலத்தில் என்ன நிகழ்ந்ததோ, அது அப்படியே நிகழும் என்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்செய்தியில் நமக்கு எடுத்துரைக்கிறார். நோவா காலத்தில் வாழ்ந்தது போலவே, மக்கள் பாவத்தில் வாழ்வார்கள். வெள்ளப்பெருக்கு வந்து பாவிகளை அழித்தது போலவும், ஆண்டவருக்கு உகந்த வாழ்வை வாழ்ந்த நோவா காப்பாற்றப்பட்டது போலவும் நிகழும் என்று கூறுகிறார். ஒரே குடும்பத்தில் இருப்பவர்களில் நல்லவர்கள் நிலை வாழ்விற்காக எடுத்துக்கொள்ளப்படுவார்கள், தீயவர்கள் தீர்ப்புக்காக விடப்படுவார்கள் என்று விளக்குகிறார். எனவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைகலங்களை அணிந்து கொள்ள இறைவனின் அருளை மன்றாடுவோம். மானிடமகனின் வருகையைப் பற்றி பழையஏற்பாட்டு இறைவாக்கினர்கள் கூறியவை நிச்சயமாய் நிகழும் என்பதில் நம்பிக்கை வைத்தவர்களாகவும், ஆண்டவர் இயேசு சொன்னதுபோலவே மானிட மகன் தனது இரண்டாம் வருகையில், நல்லோருக்கு நிலை வாழ்வும், தீயோருக்கு தண்டனைத் தீர்ப்பும் தருவார் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், நல் வாழ்வு வாழ்ந்திட திருவருகைக்காலத்தின் இம்முதல் ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள இம்மலையானது இறுதி நாட்களில் மற்ற எல்லாம் மலைகளை விட உயர்ந்ததாய் இருக்கும். மக்கள் அனைவரும் ஆண்டவரின் தீர்ப்பைபெற இம்மலையை நோக்கி வருவார்கள் என்று இறைவாக்கினர் எசாயா தனது காட்சியை இம்முதல் வாசகத்தில் கூறுவதைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இதுவே இறுதி காலம் என அறிந்து கொள்ளுங்கள், விழித்தெழுங்கள், ஆண்டவர் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். இருளின் செயல்களைக் களைந்து விட்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் வானகத் தந்தையே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள், நோவா நல்வாழ்வு வாழ்ந்து, பாவத்தில் வாழ்ந்த மக்களுக்கு நல்லுரை அளித்தது போல, இவர்களும் எடுத்துக்காட்டான வாழ்வின் மூலம் உம் மந்தைகளை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் பரம்பொருளே! நாட்டை ஆளும் தலைவர்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள் போன்றவற்றை ஊக்குவித்து மக்களை பாவத்தில் விழச் செய்யாமல், நல்ல திட்டங்களை வகுத்து, நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் விண்ணக தந்தையே! திரு வருகைக் காலத்தை துவங்கியிருக்கும் நாங்கள், உமது மானிட மகனின் வருகைக்காக எங்களை தயார்படுத்தி, நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்க நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்களை வழிநடத்துபவரே! உமது இறைபணியை சீரும் சிறப்புமாக ஆற்றிட தன்னார்வமுள்ள பல இளைஞர், இளம் பெண்கள் முன்வந்து, நீர் தரும் அழைப்பை ஏற்று உமக்கு பணிசெய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் பரம தந்தையே! மறைபணிக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் இந்நாளில் எம் நாட்டிலும், உலகின் பல இடங்களிலும், மறைப்பணிசெய்து கொண்டிருக்கும் அனைவரையும் நீர் ஆசீர்வதித்து, அவர்களை நீர் வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.