Namvazhvu
ஞாயிறு தோழன் திருவருகைக்காலம் 2 ஆம் ஞாயிறு எசா 11:1-10, உரோ 15:4-9, மத் 3:1-12
Friday, 02 Dec 2022 12:59 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் திருவருகைக்  காலத்தின் 2 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ‘மனம் மாறுங்கள். ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎன்று, திருமுழுக்கு யோவான் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாங்கள் ஆபிரகாமின் வழிவந்தவர்கள், ஆபிரகாம் எங்கள் தந்தை. எனவே, நாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், எத்தகைய செயல்களை செய்தாலும், இறையாட்சியில் எங்களுக்கு மட்டுமே இடம் உண்டு, நிலைவாழ்வும் எங்களுக்கு மட்டுமே உண்டு என்ற எண்ணத்தோடு வாழ்ந்த யூதர்களைப் பார்த்து, திருமுழுக்கு யோவான் எச்சரிக்கிறார். நாங்கள் மனம் மாறிவிட்டோம் என்று சொற்களில் சொல்வதை நிறுத்திவிட்டு, அதை உங்கள் செயல்களில் காட்டுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன், எனக்கு பின் வருபவர் உங்களுக்கு தூய ஆவியினால் திருமுழுக்கு தருவார் என்று சொல்லுகிறார். அப்படியென்றால், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் மனமாற்றம் அடைந்து, ஆண்டவர் தருகிற நிலையில்லா வாழ்வை பெற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை இங்கே திருமுழுக்கு யோவான் நமக்கு உணர்த்துகிறார். நாம் மனம் மாறினால், ஆண்டவருடைய களஞ்சியத்தில் கோதுமை மணிகளாக இருப்போம், மனம் மாறாவிட்டால் பதர்களாக தீயில் சுட்டெரிக்கப்படுவோம், என்பதை மனதில் நிறுத்தியவர்களாய் இறையருளை வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

மானிட மகனின் வருகையின் போது, அவருக்கு அஞ்சி நடந்தோர் அவரின் வருகையில் மகிழ்ச்சி காண்பர். தீயோரோ அடிபட்டு அழிந்து போவர். இவ்வாறு, மண்ணுலகில் அமைதி உண்டாகும் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவின் வழியைப் பின்பற்றி ஒரே மனதோடு இருக்க வேண்டும். நாம் உள்ளவாறே ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் போது, தந்தை கடவுளைப் பெருமைப்படுத்துகிறோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. தொடக்கமும், முதலுமானவரே! உம்  திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், திருமுழுக்கு யோவானைப்போல, அநீதிகளை தட்டிக் கேட்கவும், பிறர் மனம் மாற உதவிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அதிசயங்கள் செய்பவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அநீதிகளை, அநியாயங்களை நாட்டில் பெருகச் செய்யாமல், அமைதியான ஆட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களை வழிநடத்துபவரே! எம் பங்கையும், பங்குதந்தையையும், பங்கு மக்களையும் நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு ஒரே மனதோடு வாழ்ந்திடவும், பிறருக்கு முன்மாதிரியாக இருந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வரங்களை பொழிபவரே! எங்கள் குடும்பங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர் மன்னித்து, அன்பு செய்து, விட்டு கொடுத்து, மன மாற்றமடைந்து, உம் இறையரசில் பங்கு பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நலன்களை அருள்பவரே! முதியோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும், மருத்துவமனைகளிலும், சிறைச்சாலைகளிலும் மற்றும் தனிமையில் வாடுவோருக்கும் உமது தூய ஆவியின் வல்லமையை தந்து, வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.