Namvazhvu
பேராயர் ஃபொர்துனாதுஸ் நவ்சுக் சர்வதேச புலம்பெயர்ந்தோர்க்கான அமைப்பின் 71-வது ஆண்டு
Wednesday, 07 Dec 2022 07:40 am
Namvazhvu

Namvazhvu

புலம்பெயர்ந்தோர் வணிகப் பொருட்களாகவும், சதுரங்கப் பலகை சிப்பாய்களாகவும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை வலியுறுத்தியும்புலம்பெயர்தல் என்பது வாழ்க்கையின் மிகக் கடினமான முடிவுகளில் ஒன்று எனவும் பேராயர் ஃபொர்துனாதுஸ் நவ்சுக் கூறியுள்ளார்.

டிசம்பர் 01 ஆம் தேதி வியாழன் ஜெனீவானில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பின் 71வது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற 113 வது அமர்வில் பங்கேற்றுப் பேசியபோது பன்னாட்டு மற்றும் ஐக்கிய நாடுகளமைப்பிற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் ஃபொர்துனாதுஸ் நவ்சுக் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களுக்காக புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை வீணடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள பேராயர் நவ்சுக், 2021 ஆம் ஆண்டு IOMஇன் 70வது ஆண்டு விழாவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தியில், புலம்பெயர்ந்தோர் பேரம்பேசி விற்கப்படும் துண்டுப் பொருள்களாகவும், சதுரங்கப் பலகை விளையாட்டில் இருக்கும் வீரர்கள் போலவும் பயன்படுத்தப்படுவது வேதனை தரக்கூடியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வோர் ஆண்டும் புலம்பெயர்ந்தோர் சந்திப்பு, ஒதுக்கீடு, ஒருங்கிணைப்பு போன்றவற்றை நிர்வகிக்க மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், நமது சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அவர்கள் வேறுபட்டவர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்றும் பேராயர் நவ்சுக் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பற்றிய விவாதங்களில் பயன்படுத்தப்படும் சுமைகளைப் பகிர்தல், மறுபகிர்வு, மறுஒதுக்கீடு போன்றவற்றை திருப்பீடம் ஆதரிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள பேராயர் நவ்சுக், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் சொந்த நாடுகளில் பாதுகாப்புடனும் மாண்புடனும்  வாழ அனுமதிக்கும் நிலைமைகளை உருவாக்க அனைத்துக சமூகம் உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இல்லையெனில், எண்ணற்ற வன்முறைச் செயல்கள், முறையற்ற பயன்பாடுகள், உயிர் இழப்புகள் மற்றும் குழப்பங்கள் அதிகமாகும் என்றும் பேராயர் நவ்சுக் கூறியுள்ளார்.

குடியேற்றத்தை நம்பிக்கையுடன் அணுகவும், அமைதியைக் கட்டியெழுப்பவும் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தவேண்டும் எனவும், ஒருங்கிணைப்பு, பரந்த அறிவு, திறந்த மனம், மரியாதை ஆகியவற்றின் உணர்வில், சந்திப்பு மற்றும் ஒன்றிப்பின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பேராயர் நவ்சுக் கூறியுள்ளார்.