Namvazhvu
மாற்றுத்திறனாளிகள் உலக நாள் நாம் அனைவரும் வலுவற்ற மனித சமுதாயத்தின் ஒரு பகுதியே
Wednesday, 07 Dec 2022 07:47 am
Namvazhvu

Namvazhvu

வலுவற்றநிலை குறித்த திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனை, மகிழ்ச்சி என்பது தனியாக உண்ணமுடியாத உணவாகும் என்ற புதியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று, மாற்றுத்திறனாளிகள் உலக நாளுக்கென்று வெளியிட்ட செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். டிசம்பர் 03 ஆம் தேதி, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட இவ்வுலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வலுவற்றநிலை, கிறிஸ்துவின் மாட்சிமிக்க நற்செய்தியின் ஒளியை எவ்விதத்திலும் மறைப்பதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இறைவார்த்தையின் முழுமையான குணமளிக்கும் சக்தியைக் கூறி தன் செய்தியைத் தொடங்கியுள்ள திருத்தந்தை, எத்தகைய பதவி அல்லது பட்டத்தைக் கொண்டிருந்தாலும், நாம் எல்லாருமே நற்செய்தியை முழுமையாகப் பெற்றிருக்கிறோம் எனவும், அதனால் நற்செய்தி அறிவிப்புப் பணியை மகிழ்ச்சியோடு ஆற்றவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எல்லாருமே ஆண்டவரின் மீட்பளிக்கும் அன்புக்கு வெளிப்படையாகச் சான்றுபகர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை தனது நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்ற ஆண்டவர், தமது உடனிருப்பு, வார்த்தை, சக்தி, வாழ்வுக்குப் பொருள் ஆகியவற்றை அளிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

கடவுளன்பில் நம்பிக்கை மற்றும் அதன் அனுபவம், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கு மட்டும் உரித்தானவை அல்ல, மாறாக தங்கள்மீது நம்பிக்கை வைப்பதைவிடுத்து தம்மிடம் தங்களையே கையளிப்பவர்கள் மற்றும், உடன்வாழ்கின்ற சகோதரர் சகோதரிகளுக்கு இரக்கம் காட்டுபவர்களுக்கு, ஆண்டவர் தமது இரக்கம் சிறப்பான முறையில் வெளிப்படச் செய்கிறார் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் நமக்குக் கிடைக்கின்ற புதிய ஞான உணர்வு, கடவுள் நம் பலவீனத்தில் அன்போடு நமக்கு உதவுகிறார் என்பதை ஏற்கச் செய்கின்றது என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, திருஅவையில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில், நாம் எல்லாருமே ஒன்று என்ற உணர்வை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதியன்று சிறப்பிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் உலக நாளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1992 ஆம் ஆண்டில் உருவாக்கியது.