கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சுமார் 7500 கோடி செலவில் துறைமுகத்தை கட்ட முயற்சி செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்த போது கடல் அருகே இருந்த 500 வீடுகள் கடலுக்குள் மூழ்கி போயின. எனவே இடத்தின் தன்மையை குறித்து தெளிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டம் 2022, நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு சில நபர்களால் வன்முறையாக வெடித்தது. காவல்துறையினர் அடையாளம் தெரியாத 3000 போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இருப்பினும் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று இம்மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்து ஐக்ய வேதி (இந்து ஐக்கிய முன்னணி) என்கிற இந்துத்துவவாதிகளின் அமைப்பானது, நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காவல்துறையின் கட்டுப்பாடுகளையும் மீறி, அதானி குழுமத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்று பதட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது குறித்து போராட்ட நிர்வாகிகளில் ஒருவரான அருட்பணியாளர் மைக்கேல் தாமஸ், “எங்களுடைய இந்த அறப்போராட்டத்திற்கு வன்முறை சாயத்தை பூசுவதற்கு பலர் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த துறைமுகத்தால் ஏறக்குறைய 2 லட்சம் மக்களின் வாழ்வாதாரமானது பாதிக்கப்படும். எனவே அதைக் கருத்தில் கொண்டு மக்களை இங்கே நிம்மதியாக வாழவிடுங்கள் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்”, என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், “இந்த இந்துத்துவவாதிகளோடு மாநில அரசும் கைகோர்த்துள்ளது. முன்பு உதவியாக இருந்த இஸ்லாமியர்களும் இப்பொழுது இவர்களோடு இணைந்துவிட்டார்கள். எனவே ஒட்டுமொத்த மாநிலமும் எங்களை வன்முறையாளர்களாக பார்க்கின்றனரே அன்றி எங்கள் வாழ்வாதாரத்தை பார்க்க மறுக்கின்றனர். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம். அப்படி இல்லை என்றால் இங்கேயே இருந்து இந்த துறைமுகத்தினால் ஏற்படும் நோய்களாலும் அழிவுகளாலும் இறந்து போவோம்” என்று கூறினார்.