திருப்பலி முன்னுரை
இன்று நாம் திருவருகைக் காலத்தின் 3 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். சிறையில் இருக்கும் திருமுழுக்கு யோவான், தனது சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, வரவிருப்பவர் நீர் தாமா அல்லது வேறு ஒருவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா? என்று கேட்கிறார். திருமுழுக்கு யோவானின் கேள்விக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரவிருப்பவரும், வந்திருப்பவரும் நானே என பதில் கூறாமல் அவரது வருகையால் அங்கு நடக்கும் அற்புதங்களைப் பற்றி கூறுகிறார். அவரது வருகையால் மக்களடையும் நன்மைகளைப் பற்றி சொல்லுகிறார். அவரது வருகையால் மக்கள் பெற்ற மகிழ்ச்சியைப் பற்றி சொல்லியனுப்புகிறார். பார்வையற்றோர், ஊனமுற்றோர், தொழுநோயாளர் மற்றும் ஏழைகளுக்கு நிகழும் அற்புதங்கள் பற்றி ஆண்டவர் இயேசு கூறும் இவ்வார்த்தைகளை, இன்றைய முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கினரும், கடவுளின் வருகையின் போது நிகழும் அதிசயங்களாக கூறுகிறார். மேலும், பாபிலோனுக்கு அடிமைகளாக சென்ற இஸ்ரயேல் மக்கள், திரும்பி தங்கள் நாட்டுக்கு வந்தபோது, எசாயா இறைவாக்கினர் இவ்வார்த்தைகளை அழுத்தமாக மீண்டும் கூறுகிறார்.
ஆண்டவர் வாக்களித்தவாறு அடிமைகளாக இருந்த உங்களை விடுவித்திருக்கிறார். ஆகவே, மகிழ்ச்சி கொள்ளுங்கள், அக்களியுங்கள் என்று கூறுகிறார். இதே வார்த்தைகளை ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் தனது பணிகளை தொடங்கும்போது கூறுகிறார். ஆண்டவர் வாக்களித்தவாறு தனது மகனை நமக்காக அனுப்புகிறார். எனவே, மகிழுங்கள், பூரிப்படையுங்கள் என்ற சிந்தனையை இந்நாளின் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆண்டவரின் வருகையில் அக்களித்தவர்களாய் பக்தியோடு இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
தாம் வாக்களித்தவாறு ஆண்டவர் கண்டிப்பாக வருவார். ஆகவே, திடன் கொள்ளுங்கள், குறையோடு இருக்கும் அனைத்தும் நிறைவு காணும். உங்கள் துன்பம் பறந்தோடும். எனவே, அனைவரும் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடையுங்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
பயிரிடுபவர் அதன் விளைச்சலை பெறும்வரை பொறுமையோடு காத்திருப்பதுபோல, நாம் அனைவரும் ஆண்டவரின் வருகைக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். உறுதியாயிருங்கள்; ஏனெனில், ஆண்டவர் வருகிறார் எனக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. வாழ்வளிப்பவரே! உமது திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள் செல்வந்தர்கள், ஏழைகள் என்று வேறுபாடு பார்த்து பழகாமல், அனைவருக்கும் தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் நற்செய்தி அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் பரம்பொருளே! நாட்டை ஆளும் தலைவர்கள், தங்கள் மக்களை துன்பத்திலும், துயரத்திலும், வன்முறையிலும் வாட்டி வதைக்காமல், அமைதியும், மகிழ்வும் நிறைந்த ஆட்சியை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் வானகத் தந்தையே! உமது திருமகனின் வருகையில், நாங்கள் அச்சம் கொள்ளாமல், துயரம் கொள்ளாமல், அக்களிப்பும், பூரிப்பும் அடையும் நல்ல மந்தைகளாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஞானத்தை அருள்பவரே! தேர்வுகளுக்காக தங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்களுக்குத் தேவையான ஞானத்தை தந்து, நீர் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. குணமளிப்பவரே! உடல் குறைபாடுகளோடு இருப்பவர்கள் உமது சாயல்கள், எங்களது சகோதர சகோதரிகள் என்று நினைத்து, அவர்களை மதித்து, முழுமையாக அன்பு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.