Namvazhvu
இவர்களால் முடிந்தது என்றால்...! 4. யாருக்குத்தான் இல்லை இது?
Wednesday, 14 Dec 2022 09:10 am
Namvazhvu

Namvazhvu

இவ்வுலக மக்களாகிய நாம் இரு பெருந்தவறுகளை அடிக்கடி செய்கின்றோம். எதை வேண்டுமானாலும் சாதிப்போம் என்று சவால் விடுவோரும் இத்தவறுகளை செய்கின்றார்கள். கோடி கோடியாக குவித்து வைத்திருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல; தன்னால் திரும்ப கொண்டு வரமுடியாத கடந்த கால கவலையில் பலர் வாழ்கின்றார்கள் என்றால், மீதி பேர் தாம் பார்த்தே இராத நிகழ்கால கவலையில் சஞ்சரிக்கின்றார்கள்.

இவை இரண்டும் நம் கையிலும் இல்லை, நம் பையிலும் இல்லை. இல்லாத ஒன்றுக்காக நாம் கவலைப்படுகின்றோம். ‘யாருக்குத்தான் கவலை இல்லை’ என்று, பொதுவுடைமைச் சொத்தாகவும் இதை ஆக்குகின்றோம். ஐந்து வயது குழந்தையும் கவலைப்படுகின்றது. 100 வயது தாத்தாவும் கவலைப்படுகின்றார். ஆளுக்கேற்ற எள்ளுருண்டை என்பதைப் போல, அவரவர் கவலை அவரவருக்கு.

பள்ளிக்கு போகவேண்டுமே என்ற கவலை,

முதல் குழந்தைப் பருவத்தினருக்கு என்றால்;

படுக்கையில் கிடக்ககூடாதே என்ற கவலை,

இரண்டாம் குழந்தைப் பருவத்தினருக்கும் உண்டு.

பொறுப்பாக கற்பிக்கும் கவலை,

கற்பிப்போருக்கு உண்டு என்றால்;

எதிர்காலம் பற்றிய கவலை,

கல்வி கற்போருக்கும் உண்டு.

ஈட்டிய செல்வத்தை காப்பாற்றும் கவலை,

செல்வந்தர்களுக்கு உண்டு என்றால்;

பிடிபடாமல் திரும்பும் கவலை,

திருட வருவோருக்கும் உண்டு.

நல்லாட்சி செய்ய முடியுமா என்ற கவலை,

ஆட்சியாளருக்கு உண்டு என்றால்;

எப்படி வழிநடத்தப்படுவோம் என்ற கவலை,

நாட்டு மக்களுக்கும் உண்டு.

மனித மனம் வினோதமான இயல்புடையது. எதை அதிகமாக நினைப்போமோ அது மனதில் அலைமோதிக் கொண்டேயிருக்கும். இதனால் தான் தெரிந்த யாரையாவது பார்க்கும்போது, மடைதிறந்த வெள்ளம் போல, நம் கவலைகளை கொட்டுகின்றோம். அப்படிகொட்டும்போது, முழுவதையும் கேட்கும் பொறுமை இல்லாததால் கேட்போரில் பலர் தங்களது கவலைகளை அடுக்கத் தொடங்கிவிடுவர். இதனால் பேசுபவர்களும், நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. கேட்பவர்களும் நிகழ்காலத்தை இழந்து விடுவார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பாதீர்கள். அவர்களுக்கு உங்களை விட அதிகமான கவலை இருக்கும். எங்கே முடியுமோ, யாரிடம் சொன்னால் தீர்வு கிடைக்குமோ, யார் நேர்மறையாக சிந்திப்பார்களோ, யாரிடம் பகிர்ந்தால் உங்கள் மனப்பாரம் இறங்குமோ, அப்படிப்பட்டவர்களிடம் மட்டும் உங்கள் உண்மையான கவலைகளைப் பகிருங்கள். இவை பரிந்துரை மட்டுமே!

‘கவலைகள் பறவைகள் போன்றவை. தலைக்குமேல் ஆயிரம் பறக்கலாம். ஆனால், ஒன்றை கூட உங்கள் தலையில் கூடுகட்ட விடாதீர்கள் என்பர். ஏனெனில், தொடர்ந்த கவலைகள் மனரீதியாக வேறு பல சிக்கல்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றார்கள் மனநல ஆலோசனை வல்லுநர்கள்.

வெளியே சொல்லமுடியாமல் தனக்குள் புதைந்து கிடக்கும் கவலைகளைப் போக்கலாம் என எண்ணிய ஒருவர், ஒரு மனநல மருத்துவரை அணுகி, ஆலோசனை கேட்டாராம். அவர் சொன்னவை அனைத்தையும் உன்னிப்பாக கேட்ட ஆலோசகர், இந்த ஊரில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அங்கே நீங்கள் செல்லுங்கள். அங்கே நடிக்கும் சிரிப்பு நடிகர் ஒருவர் உங்களை வாய்விட்டு சிரிக்க வைப்பார். உங்கள் கவலைகள் அனைத்தும் பறந்து போய்விடும்’ என்றாராம். ஆலோசனை கேட்க வந்தவருக்கு சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று தெரியவில்லை. ஏனெனில், அந்தச் சிரிப்பு நடிகரே அவர்தான்.

எல்லாருக்குள்ளும் கவலை உண்டு. சிலர் வெளியே காட்டிக்கொள்வதில்லை. கடந்த கால கவலையில் வாழ்வோரை விட, வருங்கால கவலையில் வாழ்வோரே அதிகம். இதனால் நிகழ்கால மகிழ்ச்சியை இழக்கின்றார்கள். விளைவு, மனம் மீண்டும் இறந்தகாலம், எதிர்காலம் என பயணம் செய்கின்றது. கடவுளிடம் விண்ணப்பம் செய்பவர்களின் பட்டியலில் அதிகமாக இடம்பெறுவது இத்தகையோரின் தேவையற்ற கவலைகளே!

இதைக் கேட்டு கேட்டு மக்கள் மீது பரிதாபம் கொண்ட கடவுள், மக்களின் இச்செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினாராம்.

அசரீரி மூலமாக கடவுள் மக்களோடு பேசினார்: ‘அவரவர் கவலைகளை மூட்டையாகக் கட்டி எடுத்து வாருங்கள். யாருடைய மூட்டை சிறியதாக இருக்கின்றதோ அதை நீங்கள் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்றாராம். மற்றுள்ள காரியங்களில் காலம் தாழ்த்துபவர்கள் கூட, கடவுள் குறிப்பிட்ட இடத்துக்கு உரிய நேரத்துக்கு முன்பே தங்களது கவலை மூட்டையோடு வந்தார்களாம். அந்த இடத்துக்கு வந்தவர்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த மூட்டையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்களாம். ஏனெனில், மற்றவர்களின் மூட்டைகளை விட, தங்களது மூட்டை அவரவர் கண்களுக்கு சிறியதாகத் தெரிந்ததாம். தாங்கள் சுமந்து வந்த மூட்டைகளை மகிழ்ச்சியோடு திரும்ப எடுத்துச் சென்றார்களாம்.

இது புனையப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இது உணர்த்தும் உண்மை மிக மிக நுட்பமானது. ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு காலத்தில், கவலையும், துன்பமும் ஒவ்வொருவருக்கும் உண்டு. இவை கடவுள் நமக்கு தருபவை அல்ல; மனித வாழ்க்கை பல்வேறு கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற கணக்கு குறியீடுகளுக்கு உட்பட்டது.

குறையுள்ள, விவேகமற்ற மனிதர்களான நாம், செய்யும் செயல்கள் மூலமாக இந்தக் குறியீடுகளை இடம் மாற்றுகிறோம். செயல்கள் மாறும்போது, விளைவுகளும் இடம் மாறும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். இதனால் கவலைப்படுவது பலரின் வாழ்வின் அங்கமாக மாறிவிடுகிறது.

வாழ்வில் வரும் துன்பங்களை நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்வர். கவலை இருந்தாலும், நடக்கும் நிகழ்வுகளில் இருக்கும் நலமானவற்றை மட்டும் தனதாக்கிக் கொண்டு, நிகழ்காலத்தில் வாழ்வர். ஆனால், இப்படிப்பட்டவர்கள் மிகமிக சிலரே. இவர்கள் தான் “கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்” என்ற, இறை இயேசுவின் போதனையை வாழ்வாக்குபவர்கள். நிகழ்காலத்தில் வாழவும், நேர்மறை எண்ணங்களோடு வாழவும் இவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.

கவலை, தண்டவாளத்தில் செல்லும் தொடர்வண்டியின் பெட்டிகள் போன்றது. பல பெட்டிகளை இணைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கும் வரம்பு உண்டு. இந்திய ரயில்வே விதிப்படி பயணிகள் ரயிலில் அதிகப்படியாக 24 பெட்டிகளும், சரக்கு வண்டியில் 58 பெட்டிகளும் இணைக்கலாம். அவற்றின் நீள வடிவமைப்பு (Loop line length) 650 மீட்டர் மட்டுமே! அதற்கும் அதிகமான பெட்டிகளை இணைத்து ரயில்வே நிர்வாகம் சோதனை செய்து பார்ப்பதில்லை. நமக்கும் கவலைப்பட எல்லையுண்டு. கடந்த கவலை, நிகழ்கால, எதிர்கால கவலைகள் என நாம் அவற்றை அடுக்கலாம். ஆனால், நமது உடலும், மனமும் அனைத்தையும் தாங்காது. இயல்பாக நம்மை பயணம் செய்யவும் விடாது.

கணக்கற்ற கவலைகளை இழுத்துச்செல்ல

                                நாம் வண்டியல்ல!

பாரமான கவலைகளை சுமந்து செல்ல,

                                நாம் நத்தையல்ல!

அளவற்ற கவலைகளை மடியில் பாதுகாக்க

                                நாம் கங்காருஅல்ல!

நிலையற்ற கவலைகளை எண்ணிக்கொண்டிருக்க,

                                 நாம் வேலையற்றவர்களல்ல!

(தொடரும்)