Namvazhvu
ஞாயிறு தோழன் திருவருகைக்காலம் 4 ஆம் ஞாயிறு எசா 7:10-14, உரோ 1:1-7, மத் 1:18-24
Wednesday, 14 Dec 2022 11:29 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் திருவருகைக்காலத்தின் 4 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். அன்பே வடிவான கடவுள் நம் மத்தியில் தமது அன்பைப் பொழிய இருக்கிறார் என்பதை இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இந்த தீய விபச்சாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். ‘உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்காதேஎன்று மறைநூலில் எழுதியுள்ளது என ஆண்டவர் இயேசு கூறுகிறார். கடவுளிடம் அடையாளம் கேட்பது அவரது தெய்வீகத் தன்மையை சோதிப்பதாகும்.

எனவே, இது ஒரு தேவ நிந்தனைச் செயல், பாவச் செயல் என நமது மரபுகள் நமக்கு கற்பிக்கின்றன. ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் கடவுளே, அரசன் ஆகாசிடம், தன்னிடம் அடையாளம் கேட்கும்படி சொல்லுகிறார். அடையாளம் கேட்பது தேவ நிந்தனைச்செயல். பிறகு ஏன் கடவுளே இப்படி கேட்க சொல்லுகிறார் என்ற கேள்வி கண்டிப்பாக நம்முள் எழும். நீர் உண்மையாகவே கடவுளா, இல்லையா என்பதற்கான அடையாளத்தை அல்ல; மாறாக, ஆண்டவரே நீர் இப்போது எங்களோடு இருக்கிறீரா, இல்லையா என்பதற்கான அடையாளத்தை தான் இறைவன் இங்கே கேட்க சொல்லுகிறார். ஏனெனில், மன்னன் ஆகாசு ஆண்டவரின் பார்வையில் அருவருக்கத்தக்க செயல்களை செய்தான். உண்மையான யாவே இறைவனை விட்டுவிட்டு வேற்று தெய்வங்களை வணங்கினான். போர்களில் கடவுளின் உடனிருப்பை நம்பாமல் மனித பலத்தை நம்பினான். இத்தகைய சூழ்நிலையில்தான், ஆண்டவர் அடையாளம் கேட்கச் சொல்லுகிறார். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும்கடவுள் நம்மோடு இருக்கிறார்என்று கூறுகிறது. ஆக, கடவுளின் தெய்வீகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்காமல், அவரது உடனிருப்பை நம்மோடு உறுதிப்படுத்திக்கொள்ள இத்திருப்பலியில் இறையருளை கெஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

வேற்று தெய்வங்களை வழிபட்டு வந்த மன்னன் ஆகாசிடம், யாவே இறைவன் ஓர் அடையாளத்தைக் கேட்குமாறு கூறுகிறார்.மேலும், நான் உங்களோடு இருப்பேன் என்கிற அடையாளத்தை இறைவன் தருவார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நற்செய்தியை அளிப்பதாக, இறைவாக்கினர்களுக்கு ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆண்டவர் வாக்களித்த அந்த நற்செய்தி நம் ஆண்டவராகிய இயேசுவே. ஆகவே, அவருக்கு உரியவராக வாழ்வோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எம்மை வழி நடத்துபவரே! உம் திரு அவையின் திருப்பணியாளர்கள், உமது திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக, நீர் உலகிற்கு வழங்கிய அன்பை, தமது நற்செய்தி பணிகளால் அனைத்து மக்களுக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தையும் ஆள்பவரே! நாட்டு மக்களை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த தலைவர்கள் உம்மைப் போலவே அன்பிற்காக அனைத்தையும் தியாகம் செய்யக்கூடியவர்களாக, அன்பைப் போற்றி வளர்ப்பவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள்அன்பு தந்தையே! எம் பங்கு தந்தையையும், பங்கு மக்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும்.எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை களைந்து, நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாய் உமது திரு அவையின் பணிகளை செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கமுள்ள தந்தையே! உம் திருமகன் வழியாக நீர் இவ்வுலகின் மீது பொழிந்துள்ள அன்பை மொழி, இன பாகுபாடுகளைத் தாண்டி, நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம்மை அரவணைப்பவரே! உமது திருமகன் வழியாக நீர் எங்களோடு இருப்பீர் என்று எங்களுக்கு வாக்களித்தது போல, நாங்களும் அன்பிற்காக ஏங்கும் மக்களோடு இருந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.