Namvazhvu
பேராயர் பீட்டர் மச்சாடோ கிறிஸ்மஸ் விழாவிற்கு பாதுகாப்பு கோரும் கிறிஸ்தவர்கள்
Thursday, 15 Dec 2022 05:24 am
Namvazhvu

Namvazhvu

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா மாநிலத்தில் சில கிறிஸ்தவ சபைகள்  கிறிஸ்துவ விழா நேரத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம், காவல்துறையிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில பாரத கிறிஸ்தா மகாசபபையானது (அனைத்திந்திய கிறிஸ்துவ ஐக்கிய மன்றம்) காவல்துறை பொது இயக்குனருக்கும், காவல்துறை மேல் ஆய்வாளருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் கிறிஸ்மஸ் விழாவினை எத்தகைய இடையூறுமின்றி அமைதியான வகையில் கொண்டாடுவதற்கு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கி உதவி புரிய வேண்டுமென்றும், அதிலும் குறிப்பாக மதமாற்ற தடுப்பு சட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை, கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதற்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த இயக்கத்தின் நிர்வாகியான பிரஜால் சுவாமி, கிறிஸ்மஸ் விழாவின்போது மட்டுமல்ல, எல்லா கிறிஸ்தவ விழாக்களுக்கும் இனி வருகிற காலங்களில் காவல்துறை தங்களின் பாதுகாப்பை எங்களுக்கு வழங்க வேண்டுமென்று தி இந்து செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதுகுறித்து பெங்களூர் உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், மதமாற்ற தடுப்பு சட்டத்திற்கு பிறகு சிறுபான்மை மக்களிடையே ஒரு அமைதியற்ற சூழ்நிலை உருவாகி இருப்பது உண்மைதான். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மிக அதிகமாக அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கர்நாடகா காவல்துறையினர் மீதும், கர்நாடக மக்கள் மீதும் நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை ஒருபோதும் நம்மை ஆபத்திற்கு கொண்டு செல்லாது என நான் உணர்கிறேன்”  என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கர்நாடக கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செய்தி தொடர்பாளர் அருட்பணியாளர் ஃபாஸ்டின் லூக்காஸ் லோபோ, “அண்மை காலங்களில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ச்சியாக தொடுக்கப்பட்டு வரும் வன்முறைகளால், கிறிஸ்துவ ஐக்கிய மன்றமானது ஒரு முன்னெச்சரிக்கையாக இத்கைய பாதுகாப்பினை கோரியுள்ளது. ஏனெனில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாளிலிருந்து, மக்கள் வீடு வீடாக சென்று, கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடி, செபித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம். இத்தகைய நேரத்திலே எத்தகைய அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க இது போன்ற பாதுகாப்பை கோரியுள்ளனர்என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.