Namvazhvu
உலக பெண் துறவு சபை (UISG) கல்வியில் பெருந்தொற்று உருவாக்கிய பாதிப்பு குறைக்கப்பட...
Thursday, 15 Dec 2022 12:21 pm
Namvazhvu

Namvazhvu

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோவிட்-19 பெருந்தொற்று உலகைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து வளரும் நாடுகளில் 11 கோடியே 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், குறிப்பாக, 10 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தங்களின் படிப்பை நிறுத்தியுள்ளனர் என்று, UISG எனப்படும் உலக பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஆறு நாடுகளில் சிறுமிகள் உரிமைகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு குறித்த அறிக்கையை டிசம்பர் 12 ஆம் தேதி, திங்களன்று பீதேஸ் செய்தியிடம் அறிவித்த UISG அமைப்பு, பெருந்தொற்றின் கட்டுப்பாட்டு விதிமுறைகள், மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் இலட்சக்கணக்கான சிறுமிகள், கட்டாயமாகப் படிப்பை நிறுத்தவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளன என்றும், அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் கூறியுள்ளது.

இச்சிறுமிகள் இளம்வயதிலேயே திருமணம் மற்றும் ஏனைய வன்முறைகளுக்கு உள்ளாகக்கூடிய சூழலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது எனவும், இப்பெருந்தொற்று காலத்திலும் சில பெண் துறுவு சபைகள் பெண்கள், இளையோர் மற்றும், சிறாரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தின எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

கென்யா, தென் சூடான், இந்தியா, நேபாளம், ஈக்குவதோர், பெரு ஆகிய நாடுகளில் எடுத்த ஆய்வின் முடிவில், சிறுமிகள் போன்ற, சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்துள்ளோர் மீது அதிக அக்கறை செலுத்தப்படவேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் களையப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.