Namvazhvu
அன்னை மரியாவின் சிறப்பு கன்னி மரியா - கடவுளின் தாய் புத்தாண்டின் விடிவெள்ளி !
Wednesday, 21 Dec 2022 10:44 am
Namvazhvu

Namvazhvu

புத்தாண்டு புலரும் நேரத்தை மக்களில் பலர் வெளிப்படையாக பல்வேறு விதத்தில், பல்வேறு இடங்களிலும், நாடுகளிலும் தங்களுடைய பண்பாட்டிற்கேற்ப கொண்டாடி மகிழ்கின்றனர். நம் நாட்டிலும் இன்று கிராமங்களிலும், நகரங்களிலும் எளிமையான முறையில் வீடுகளிலும், விமரிசையாக பலர் இணைந்து தெருக்களிலும், விடுதிகளிலும், பங்களாக்களிலும் கொண்டாடி புத்தாண்டை வரவேற்கின்றார்கள். அதே வேளையில் நம் நாட்டில் கிறிஸ்தவர்கள், சிறப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆலயங்களில்  ஒன்றுகூடி, புத்தாண்டு புலரும் நேரத்தில் கடவுளின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்க செபத்திலும், திருப்பலியிலும் பங்குப்பெற்று மகிழ்கின்றார்கள். ஆண்டின் இறுதி நேரத்தில் இறைவன் தம் வாழ்வில் செய்த நன்மைகளுக்கு நன்றிக்கூறி, கடவுளின் அன்பை, பராமரிப்பை உணரவேண்டி திருப்பலியில் பங்குப்பெற இணைகின்றார்கள். இறையருளை நாடிவரும் நமக்கு இந்த நல்ல நாளில் கன்னி மரியா, கடவுளின் தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடி, புத்தாண்டில் மரியாவின் தாய்மைப் பிரசன்னத்தில் வாழ்ந்து, அவரின் வழித் துணையோடு நம்முடைய நம்பிக்கைப் பயணத்தை ஆண்டு முழுவதும் நமக்கு துணையாக இருக்க வேண்டுமென கொண்டாடுகின்றோம். தாயின் மடியில் குழந்தை நிம்மதியுடன் இருப்பதுபோல திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் அன்னை மரியாவின் மடியில் பாதுகாப்போடு இருந்திட இவ்விழா நமக்கு வாய்ப்பைத் தருகின்றது. எனவே, நம் அன்னை மரியாவின் சிறப்பினை சிந்தித்துப் பகிர்ந்து கொள்வோம்.

புத்தாண்டில் இறை ஆசீர்வாதம்

புத்தாண்டின் முதல் நாளில், முதல் மணித்துளியில் ஆலயத்தில் கூடியிருக்கும் நமக்கு கடவுளின் வார்த்தை, நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் மேல் ஒளிரச் செய்து, உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண் 6:24-26) என்று அறிக்கையிட்டு இறையருளை கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவோடு வாழும் தம் பிள்ளைகளுக்கு கடவுள் தம் ஆசீர்வாதத்தையும், அருள் வரங்களையும் பொழிகின்றார். மேலும் "உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்" (எண் 24:9) என்றும், அந்நாளில் அவர் வீட்டார்க்கும், அவருக்குரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார். (1 குறி 13:4). ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொள்வோர் ஆசிபெறுவர் (திபா 40:4) என்று புத்தாண்டில் இறைவன் தம் அருளால் நம்மையும், குடும்பங்களையும், திரு அவை முழுவதையும் ஆசீரால் நிரப்புகின்றார். இந்த புத்தாண்டு திருப்பலிக் கொண்டாட்டமும் நமக்கு வழி வகுக்கின்றது.

புத்தாண்டில், பாலன் இயேசு பிறந்த எட்டாம் நாள் அவருக்கு "இயேசு" என்று பெயர் சூட்டிய நாளையும் நினைவுக் கூறுகின்றது. இப்பெயர் இறைவன் கொடுத்தப் பெயர். “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு என பெயரிடுவீர்" (மத் 1:21) என்று புனித யோசேப்பை கடவுள் கனவில் தோன்றி அழைக்கின்றார். இதன் வழியில் அவருக்கும் கடவுளின் திட்டம் வெளிப்படுத்தப்படுகின்றது. ‘இயேசு’ என்ற பெயருக்கு பல ஆற்றல்கள் உண்டு. அது நலம் தரும் செபம், மீட்பளிக்கும் பெயர். அப்பெயர் அவரின் ஆளுமையையும், கடவுளின் மகன் என்ற அடையாளத்தையும் வெளிப்படுத்துகின்றது. இயேசுவின் பெயர் சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடும் நமக்கு நம்முடைய திருமுழுக்கு நாளை நினைவுக் கூர்ந்து, நம் பெயரின் அர்த்தத்தையும், ஆளுமையையும், நம்முடைய அடையாளத்தையும் கண்டுணர அழைக்கின்றது. மேலும் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கேற்ப வாழ பல வழிமுறைகளை இந்நாளில் நமக்கு கற்றுத் தருகின்றது.

புத்தாண்டின் விடிவெள்ளி மரியா

புத்தாண்டில் இறை ஆசீரைப் பெற்று, இயேசுவின் நாமத்தைத் தொடர்ந்து உச்சரித்திட நமக்கு துணையாக இருப்பவர் நம் அன்னை மரியா. இவரின் மன்றாட்டு மாலையில் மரியாவை "விடியற்கால நட்சத்திரம்" என்று போற்றிப் புகழ்கின்றோம். சூரியன் உதிக்கப் போகின்றது என்பதனை முன்னறிவிப்பது விடியற்கால நட்சத்திரம். அதுபோல உலகிற்கு ஒளிதரும் மாபெரும் சூரியானான இயேசுவை மரியா இவ்வுலகிற்குக் கொண்டுவருகின்றார். இந்த மகத்தான உண்மையை வெளிப்படுத்திட புத்தாண்டின் முதல் நாளில் மரியா கடவுளின் தாய் என்ற விழாவை திரு அவைக் கொண்டாடி, அவரின் தாயன்பு, பராமரிப்பு மற்றும் நமக்காகப் பரிந்துப் பேசும் தாயாக இவ்வாண்டு முழுவதும் இருக்க வேண்டுமென வேண்டுகின்றோம். இயேசுவைப் பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கிய அன்னை மரியா நம்மையும், தம் குழந்தைகளாக பாவித்துப் பாதுகாக்க வேண்டி இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம்.

அன்னை மரியா, இறைவனின் தாய்

அன்னை மரியாவை நம் திருவழிபாட்டில் கொண்டாடி மகிழ்வதன் தனிச் சிறப்பு அவரின் தாய்மை தான். விவிலியத்தில் மரியா கடவுளின் தாய் என்று வெளிப்படையாக கூறவில்லையென்றாலும், பல இடங்களில் மரியா கடவுளின் மகனான இயேசுவின் தாய், ஆண்டவரின் தாய் என்று எடுத்து இயம்புகின்றது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்“ (மாற் 1:1) என்று முதலாவதாக எழுதப்பட்ட நற்செய்தி சொல்கின்றது. மேலும் மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவரும் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டு, உரத்தக்குரலில் மரியாவைப் பார்த்து, “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக் 1:43) என்று வாயார மரியாவை ஆண்டவரின் தாய் என்று அறிக்கையிட்டுப் புகழ்கின்றார். அதேபோல் மரியா ஆண்டவரின் தாய் என்பதை வானதூதரின் வாழ்த்துரையில் கேட்ட மரியா “நான; ஆண்டவரின் அடிமை, உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1:38) என்று பதில் கூறி ஆண்டவரின் அழைப்பையேற்று, அர்ப்பணித்து தம்மை முழுவதுமாகக் கையளித்தார். மரியாவும் இயேசுவைப்போல கடவுளின் திருவுளத்திற்காக முன்குறித்து வைக்கப்பட்டதால் கடவுள் காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனை பெண்ணிடம் (மரியா) பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் (கலா 4:4-5). மரியா தேர்ந்தெடுக்கப்பட்டு, இறைவனின் திட்டத்தில் பணி செய்ய, இறையருளுடன் வாழ்ந்து, இறைவனின் தாயானார் என்றும் நமக்கு உறுதிப்படுத்துகின்றது.

இயேசுவின் வாழ்வில் மரியாவின் தாய் அன்பும், தியாகமும் நிறைந்துள்ளது. தான் பெற்ற மகனை பிறருக்காக கையளித்து, மகனிடம் கானாவூர் திருமணத்தில் பரிந்துப் பேசுவது, மகனை இறைப்பணிப் புரிந்திட வழிகாட்டியது, சிலுவையில் கையளித்து அவர் அருகில் நின்றது போன்ற செயல்கள் அனைத்தும் மரியாவின் தாய் அன்பிற்கு இலக்கணமாக அமைந்துள்ளது. மேலும் மனிதகுல மீட்பிற்காக தன் மகனையும், அவரோடு இணைந்து தம்மையும் முழுமையாக அர்ப்பணித்தல், தாய் என்ற முறையில் தம் மகன் இயேசுவிற்காக தன் தேவைகள், ஆசைகள் அனைத்தையும் தியாகம் செய்து, தம் மகன் வாழவேண்டும், வளர வேண்டுமென்று காத்திருந்தார். அத்தோடு தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் உலகத்தின் மீட்பே தமது குறிக்கோள் என்று தம் மகனோடு இணைந்திட்ட தாய் மரியாவை இந்த புத்தாண்டு நாள் நமக்கு முன்னிருத்தி, நமக்காக, நம்முடைய தேவைக்காக, நம்மோடு நின்று இறைவனிடம் வேண்டி, நமக்கு இறையருளைப் பெற்றுத் தருகின்றார்.

மரியா- கடவுளின் தாய் - பெருவிழா

திரு அவையின் தொடக்க முதல் இயேசுவின் பிறப்பு விழாவாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அவ்விழாவோடு அவரின் தாயான மரியாவையும் நினைவுக் கூறிக் கொண்டாடப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பு விழாவும் மரியாவின் தாய்மையுடன் உள்ள நெருங்கிய உறவும் இவ்விழாவில் சுட்டிக்காட்டி போதித்து வந்துள்ளார்கள். கி.பி. 431 ஆம் ஆண்டு எபேசு நகரில் நடந்த பொதுசங்கத்தில் மரியா ‘கடவுளின் தாய்’ என்று பிரகடனம் செய்தபின் மரியாவின் மாண்பும் மகத்துவமும் முன்னிறுத்தப்பட்டு, அன்றிலிருந்து மரியாவுக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் தனி மரியாதையும், பக்தி வணக்கங்களும், திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்நாட்களில் மரியாவுக்கு உரோமை நகரில் அழகுமிகு பேராலயம் ஒன்று கட்டி பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை அன்னை மரியாவுக்கு பல கோவில்கள் எழுப்பி, அவரின் தாய்மையை திரு அவை தொடர்ந்து வாழ்த்தியும், வணக்கம் செலுத்தியும் அவரின் தாய்மை பிரசன்னத்தையும், ஒவ்வொரு நாளும் உணர்ந்து தம் இறையாட்சிப் பணியைத் தொடர்கின்றது. எனவே, இந்த புத்தாண்டிலும், நாம் அந்த அன்னையின் அருள்காவலில் இருந்து, இறை ஆசீரோடு மகிழ்ச்சியாக வாழ்வோம், வளர்வோம். நாமும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.