Namvazhvu
புனித தேவசகாயம் வாழ்வு திருத்தம் தந்த திருப்பங்கள்
Wednesday, 04 Jan 2023 07:02 am
Namvazhvu

Namvazhvu

மா மனிதர்கள் எல்லாரும் வாழ்வின் திருப்புமுனைகளைச் சந்தித்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்புகள் அவர்களின் வாழ்வில் முக்கியமானவைகள். இந்தக் கட்டுரையில் நம் புனிதரின் வாழ்வில் அவர் சந்தித்த முக்கிய திருப்பங்களைப் பார்க்கிறோம். அந்தத் திருப்பங்கள் வழியாக அவரது வாழ்வையும், வாழ்வில் அவர் கொண்ட நிலைப்பாடுகளையும் மற்றும் அவர் தமக்கென்று வகுத்த இலட்சியப் பார்வையையும் நாம் தெளிவுறப் புரிந்து கொள்ள முடியும்.

ஆசான்களிடம் கல்வி : பிறமக்களைச் சந்தித்து நட்பு கொள்தல்

தம் குழந்தைப் பருவம் முதலே தம் சமயம், தம் இனம், தம் இடம் ஆகியவற்றை மட்டுமே சந்தித்திருந்த சிறுவன் நீலம் (நீலகண்டன்) திருவிதாங்கூர் ஆசான்களிடம் தற்காப்புக் கலைகள் கற்க அனுப்பப்படுகிறான். அந்த ஆசான்களில் பலர் கிறித்தவர்கள், கத்தோலிக்கர்கள். மேலும் அவர்களும் சிறுவன் நீலம் தன் உடன் பயிலும் மாணவனாகக் கொண்டிருந்த நண்பன் தொம்மன் திரு முத்துவும் தாழ்ந்த சாதி என்று கருதப்பட்ட மக்களாவர். சிறுவன் நீலகண்டனை அங்கு அனுப்பி பயிற்சி பெற வைத்த அவர் தந்தை வாசுதேவன் நம்பூதிரியை மெச்சவேண்டும். தந்தையின் பரந்த மனம் மைந்தனுக்கும் இருந்தது. எனவே ஆசான்கள் மற்றும் தம் உடன் பயிற்சியாளரின் கிறித்தவ நம்பிக்கையைக் காண்கிறான் சிறுவன். பாசத்தோடு பழகிய அவர்களிடம் ஏற்பட்ட நட்பால் சாதி அமைப்பின் நடப்புமுறைகளை அப்பொழுதே கேள்விக்கு உட்படுத்தியிருப்பான் சிறுவன் நீலம்.

அரண்மனை அலுவல் : நற்குணங்களில் உறுதி

தன் இனத்தவரின் வழக்கத்தின்படி, இளைஞன் நீலகண்டன் முதலாவது சேர்ந்தது திருவிதாங்கூர் படையில் தான். அங்கே அவர் தம் போர்த்திறமையாலும் உண்மை, நேர்மை, எல்லாரிடமும் பழகும் நட்புறவு, பொதுநலம் பேணும் தன்மை ஆகியவற்றாலும் பெரியவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். அந்த நற்குணங்கள் அவருக்கு அரண்மனையில் பணியினைப் பெற்றுத்தந்தன. அரண்மனைப்பணி நீலகண்டனுக்கு மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்தது.

டிலனாய் நட்பு : நல்ல நட்பு கடவுளின் கொடை

குளச்சல்  போரில் டிலனாயும்  அவருடன் வேறு 23 பேரும் மார்த்தாண்டவர்மாவிடம் சரணடைந்தனர். அவர்களில், குறிப்பாக, டச்சுப்படை அதிகாரியாய் இருந்த டிலனாயை மன்னரிடம் கூட்டிச் சென்றார் நீலகண்டன். டிலனாய் நல்லவர்; திறமை மிக்கவர் என்றும், அவரைக் கொண்டு திருவிதாங்கூர் படையை நவீனப்படுத்தலாம் என்றும் மன்னருக்கு ஆலோசனைத் தந்தவர் நீலகண்டன். இது அவர்களின் நட்புக்குத் தொடக்கமாக இருந்தது. டிலனாய் உதயகிரிக்கோட்டையைக் கற்கோட்டையாக மாற்றும் பொறுப்பில் இருந்தார். பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வேலையில் இருந்த நீலகண்டனோடு ஆழ்ந்த நட்பு உருவானது. அது அனுபவப்பகிர்வாக, வாழ்வின் பகிர்வாக வளர்ந்து வந்தது.

துன்பங்களில் தெளிவு : இறை வார்த்தையின் வெளிச்சம்

திருமணமாகி மகிழ்ச்சியில் திளைத்திருந்த நீலகண்டன், தம் வாழ்வில் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார். தம் நண்பரின் துயரங்களை டிலனாய் கேட்டறிந்தார். தம் தெய்வங்கள் தம்மைச் சபித்துவிட்டன என்று நினைத்திருந்த நீலகண்டனுக்கு, டிலனாய் விவிலிய மாந்தர் யோபுவின் வரலாற்றை எடுத்துக்கூறி ஆறுதல்படுத்தினார். நீலகண்டனும் விவிலியம் தந்த விளக்கத்தினால் தெளிவு பெற்றார். இயேசுவைப் பற்றி மேலும் அறிந்து கொண்டார். இயேசுவின் சீடனாகத் தம்மையே மாற்றினார். திருமுழுக்குப் பெறத் துணிவு கொண்டார்.

மறைக்கல்வி அனுபவம் : சாதியம் என்பது கிறித்தவம் அல்ல

நீலகண்டன் 9 மாதங்களாக மறைக்கல்வி கற்றார். அந்த மாதங்களில் அவர் அடிக்கடி வடக்கன்குளம் சென்று அங்கு தமக்கு ஞானப் பெற்றோராகக் குறிக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாசம் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது வடக்கன்குளத்திலிருந்த கிறித்தவர்கள் சாதியின் பெயரால் பிரிந்திருந்ததைக் கண்டார். தமக்குள்ஒரு போராட்டத்தைச் சந்தித்தார். தான் அத்தகைய சாதிக் கிறித்தவராக இருக்கப் போவதில்லை என்று சபதம் ஏற்றுக் கிறித்தவரானார்.

திருமுழுக்குத் தந்த முழுமாற்றம் : லாசரைப் போல் இயேசுவின் நண்பன்

நீலகண்டன் வடக்கன்குளத்தில் 14.05.1745 அன்று திருமுழுக்குப் பெற்றார். அது அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இயேசு லாசரின் சாவுக்குக் கண்ணீர் வடித்தார். அது அவருக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த அன்பை எடுத்துக்காட்டியது. அதே லாசரின் பெயரையே தமிழில் "தேவசகாயம்" என்று பெற்றிருந்தார். எனவே தாம் இயேசுவின் நண்பர் என்று உணர்ந்து, மிகுந்த மகிழ்ச்சியைத் தமக்குள் உணர்ந்தார்.” “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்று தாம் மகிழ்ச்சியாக வாழ்வதை அவர் யாவரிடமும் பகிர்ந்து கொண்டார். கேட்டவர் பலரின் மனமும் அவரது சாட்சியத்தால் தொடப்பட்டது.

அச்சுறுத்தல் சந்திப்புகள் : நம்பிக்கையில் உறுதி; வாழ்வில் சமத்துவம்

தர்மம் கேட்டு வந்த ஓர் அந்தணர், நீலகண்டன் தேவசகாயம் என்று மாறிவிட்டதால் தான் அணிந்திருந்த பூணூலை எடுத்துச் சாபமிட்டார். அரசவையில், ஆளுநராக இருந்த இராமையன் தளவாய் மற்றும் அவரது செயலர் சிங்காரம் அண்ணாவி ஆகியோர் புனிதரிடம்  நிகழ்ந்த மாற்றத்தை அறிந்து, அவரைச் சந்தித்து கண்டிக்கக் காத்திருந்தார்கள். அவர்சண்டாளர்கள்என்று கூறப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம் ஒன்றாகப் பழகி வருவதால் மிகுந்த கோபத்தில் இருந்தனர். இவர்களோடு புது கிறித்தவராகிய தேவசகாயத்தின் சந்திப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தேவசகாயத்தின் பதவிப் பறிக்கப்பட்டது; சொத்துரிமை மறுக்கப்பட்டது; எதற்கும் பணிந்து விடவில்லை நம் மறைசாட்சி. அவரது கைது உறுதியானது; உள்நாட்டுக் கிறித்தவர்கள் மீது வன்கொடுமை ஆணையிடப்பட்டது.

சில சலனங்கள் தந்த தெளிவுகள்: சாகவும் துணிந்த நம்பிக்கை

நம் புனிதர் தேவசகாயம் பெருவிளையில் இருந்தபோது, ஆராச்சார் என்ற சிறைத் தலைவர் நம் மறைசாட்சியின் ஆசீரால் பிள்ளை வரம் பெற்றார். அதுமட்டும் அல்லாமல், போதுமான அளவு உணவு இல்லாமையால் மறைசாட்சி பட்டினி இருந்தார். இதை அறிந்த கடலோர மக்கள் தாராளமாக உணவு கொண்டு வந்தார்கள். சிறைக் கூடமே விருந்து கூடமானது. ஆராச்சார் மனம் உருகினார். புனித தேவசகாயத்திடம் பேசி, தப்பி ஓடிவிடச் சொன்னார். அவர் தப்பி ஓடத் தாம் உதவி செய்வதாகவும் சொன்னார். மறைசாட்சி இது பற்றி சிந்தித்து, டிலனாயிடம் பேசினார். ஒரு கோழை போல் தாம் தப்பி ஓடுவதில்லை; மாறாக இறுதி வரை நிலைத்து நின்றுச் சாவினைச் சந்தித்து இயேசுவுக்குச் சாட்சியாகத் துணிவு கொண்டார்.

இறுதித் தற்கையளிப்பு: இயேசுவுக்கே அர்ப்பணம்

அந்தப் புனித நாள் 14.01.1752 இரவில் காவலர்கள் தேவசகாயத்தைத் தட்டி எழுப்புகிறார்கள். “வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்என்று சொல்கிறார்கள். இல்லை நீங்கள் நடிக்க வேண்டாம். என்னை நீங்கள் எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்என்று சொல்லித் துணிந்து எழுந்து வந்த புனிதர் எப்படி நடக்கவே முடியாமல் ஆனார்? சிலுவைச்சாவுக்கு முன் இயேசுவும் மனித பலவீனத்தால் துன்புறவில்லையா? “சாவு வருமளவுக்கு ஆழ்துயரம்கொண்டிருந்தாரே! (மத் 26:38). அதுமட்டும் அல்ல: “மனம் ஆர்வமுடையது தான்; ஆனால் உடல் வலுவற்றது (மத் 26:41) என்ற இயேசுவின் அனுபவமே அது அவரது மனம் உறுதியாய் இருந்தது.” உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்என்று அவர் கடவுளிடம் சரணடைந்தார்.

அந்த சரண் தான் அவரது உடல் பலவீனத்திற்குக் காரணம். இயேசுவும் அப்படிப் பலவீனமானதால் தானே சீரேனாகிய சீமோனின் உதவி தேவைப்பட்டது. நமது மறைசாட்சியைச் சுமந்து சென்றவர்களுக்கும் அந்தப் பேறு கிடைத்தது. இதே சரணாகதியில் தான், இயேசுவின் ஒலிவத் தோட்ட செபம் போல் நம் புனிதரும் முட்டூன்றி இறுதி செபம் செய்தார். "இயேசுவே இரட்சியும்என்று தம் ஆவியைக் கையளித்தார்