தொடக்கப்பாடல் : “இறைமனித சங்கமம் நிகழும் இடமிது” இறை அலைகள் பக்.65 (அ) வேறுபாடல்
தொடக்க இறைவேண்டல்
அன்புடன் ஏற்று எம்மை அரவணைத்துக் காக்கும் விண்ணகத் தந்தையே! உம்மைப் புகழ்ந்து போற்றி, மகிழ்ந்து வணங்குகின்றோம். கடவுள் வடிவை விட்டு கனிவுள்ள மனித வடிவெடுத்து, எம்மை மீட்க வந்த மானிட மகன் இயேசுவே, உம்மை புகழ்ந்து போற்றி, மகிழ்ந்து வணங்குகின்றோம். இனிய இணைப்பாளரும், எளிய துணையாளருமான தூய ஆவியாரே உம்மைப் புகழ்ந்து போற்றி, மகிழ்ந்து வணங்குகின்றோம். இன்று உமது இனிய அழைப்பினை ஏற்று இதோ எங்கள் (அன்பியத்தின் பெயர்) அன்பியம் உறவின் சங்கமமாய் ஒன்றுகூடி திரு. --- அவர்களின் இல்லத்தில் கூட்டத்தைத் தொடங்குகிறோம். இதற்கு உமது ஆசிகளை அளித்து, எம்மை உமது கொடைகளால் நிரப்பும். இக்கூட்டத்தில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் அனைத்துச் செயல்பாடுகளையும், வெற்றியின் பாதையில் நடத்தியருளும். உம் அன்பு மைந்தர் இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள எங்களுக்கு வலுவூட்டியருளும். அவரை ஏற்றுக்கொள்ளும் எம் அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் அவரது சாயலைத்தாங்கி, அகிலத்தைக் காக்கும் கருவிகளாகத் திகழச் செய்யும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக ஆமென்!
நற்செய்தி வாசகம்: மத்தேயு 11: 2-11
சிந்தனை
* ஒருவர் இருப்பதுபோலவே அவர் தம்மைப் பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்.
* எந்தச் சூழ்நிலையிலாவது தனிநபரோ, குடும்பமோ, குழுவினரோ உங்களை ஏற்க மறுத்துள்ளனரா அல்லது முகத்திற்கு முன் ஏற்பதாகக்கூறி, பின்னர் இழித்துரைத்துள்ளனரா?
* நீங்கள் எவரையாவது சரியான காரணமின்றி பிறரை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டியிருக்கிறீர்களா?
* “அவர் (இயேசு) தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவா 1:11).
* தயக்கமின்றி இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் தான் புனிதர்கள்.
* ஏற்றுக்கொண்டவர் மறுதலிக்கும்போது, இருவர் பக்கமும் வலிகள் ஏற்படுகின்றன (எ.கா பேதுரு-இயேசு).
* முழுத்துணிவுடன் இயேசுவை ஏற்றுக் கொண்டு, அவரை வெளிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் பலரை மறைசாட்சிகளாக்கியிருக்கின்றன.
* போராளியாய்! அமைதியின் மன்னராய்! மீட்பராய்! இணைப்பாளராய்! விண்ணிலிருந்து நம்மைத் தேடிவரும் விடியலாய் பிறக்க இருக்கின்ற இயேசுவை ஏற்றுக்கொள்வோம்.
* ஏற்றுக்கொள்ளுதல் : 1. மத் 10:32, 2. மாற் 10:15, 3. லூக் 10:10, 4. லூக் 7:23
* வல்லமையோடு நன்மையைச் செய்ய வந்துள்ள இயேசுவிடம் நாம் காணும் வியத்தகு செயல்களை விரும்பி, வரவேற்போம்.
நற்செய்திப் பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாஷிங்டன் ஒரு பெரு நகரம். அங்கு பல ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணம் நடைபெற்றது. அதற்கு அமெரிக்காவில் உள்ள மிகப்பெரும் பணக்காரர் ராக்பெல்லர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் அத்திருமணத்திற்குச் சென்றார். மண்டப முகப்பில் நின்றுக்கொண்டிருந்த பணியாளர் (Security Service) அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஏனெனில், ராக்பெல்லர் சாதாரண உடையில் சென்றார். திரும்பி வீட்டுக்கு வந்த அவர், விலை உயர்ந்த கோர்ட் மற்றும் ஷூ அணிந்துக்கொண்டு, மீண்டும் திருமணத்திற்குச் சென்றார். அவருக்கு மிக உயர்ந்தபட்ச வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டார். அரிய அறுசுவை உணவுகள் அவருக்குப் படைக்கப்பட்டன. ஆனால், ராக்பெல்லரோ தமது கோட்டைக் கழற்றி விரித்து, அதில் தமக்கு பகிர்ந்த உணவுகளை எடுத்து வைத்துவிட்டு, உணவகத்தை விட்டு வெளியேறினார். எல்லாரும் பதட்டத்துடன் அவரிடம் வந்து, “ஐயா நீங்கள் ஏன் உணவருந்தவில்லை” என்றனர். இங்கு மரியாதை எனக்கு இல்லை. என் உடைக்குத்தான். எனவே, எனக்களித்த உணவை என் ஆடைகள் சாப்பிடட்டுமே என்று கூறி வந்துவிட்டார். ஆம், பணம், பட்டம், பதவி எல்லாவற்றுடன் விபத்துகளையும் விலைகொடுத்து ஏற்றுக்கொள்ளும் உலகம் இது... நன்மையை, உண்மையை ஏற்கத்தயங்குவது ஏன்?
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகளுக்கான கருத்துகள்
* திரு அவைப் பணியாளர்கள், கடவுளால் தம் சாயலிலும், உருவிலும் படைக்கப்பட்ட அனைவரையும் சமமாக மதித்து ஏற்றிட...
* அன்பிய உறுப்பிணர்கள் - பணியாளர்கள் வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று...
* எந்த ஒரு சக்தியும் மனித மாண்பைக் குலைக்க யாரும் இடமளிக்கக் கூடாதென்று...
பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்
1. குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளும் விதத்தில், இருவாரங்களுக்காகிலும் வணக்கத்தைப் பரிமாறிக்கொள்தல்
2. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளர் இருப்பிடங்களைச் சந்தித்து, கிறிஸ்து பிறப்பின் இனிப்பு, ஆடைகள் மற்றும் உதவிகளை வழங்குதல்.
நிறைவு வேண்டல்
ஏற்று வாழ்வதே உமக்கு ஏற்ற வாழ்வு என்பதை உணர்ந்து, எங்கள் அன்பிய உறுப்பினர்கள் அனைவரும், தம் குடும்ப மற்றும் நிறுவன மக்களை ஏற்று வாழ்ந்து, இனிய சமுதாயம் படைக்க முன்வரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவரே ஆமென்!
(அன்பிய பாடல்)