Namvazhvu
ஞாயிறு தோழன் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா எசா 60:1-6, எபே 3:2-3, 5-6, மத் 2:1-12
Wednesday, 04 Jan 2023 12:26 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டவரின் திருகாட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இவ்விழாவினை எதற்காக நாம் திருக்காட்சி பெருவிழா என்றழைக்கிறோம். ஒட்டுமொத்த மனித இனத்தையும் மீட்கவந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காண விண்ணவர், இடையர், ஞானிகள் என அனைவரும் வருகை தந்ததாலா? நமது இஸ்ரயேல் இறைவாக்கினர்கள் முன்னறிவித்தது போல, நம்மை  மீட்பதற்காக நமது தாவீது அரசர் குலத்திலிருந்து மனுதேவன் தோன்றுவார். நம்மை மட்டுமே அவர் மீட்பார், நமக்கு மட்டுமே அவரை காணுகின்ற பேறு கிடைக்கும் என்று யூத மக்கள் எண்ணிக்கொண்டிருந்த தருணத்திலே, புறவினத்து மக்களாக கருதப்பட்ட ஞானிகளுக்கும் ஆண்டவரை காண்கின்ற பேறு கிடைத்ததே இப்பெருவிழாவின் மையப்பொருள்.

தங்களுக்கு  மட்டுமே தரப்பட்ட அடையாளமாக யூதர்கள் கருதிய வழிகாட்டும் விண்மீன் புறவினத்து மக்களாக கருதப்பட்ட ஞானிகளுக்கும் வழிகாட்டியதையே திருக்காட்சிப் பெருவிழா என்று நாம் அழைக்கிறோம். இவ்வாறு, கிறிஸ்து என்னும் மெசியா யூத மக்களுக்கு மட்டுமானவர் அல்ல; மாறாக, ஒட்டுமொத்த இனத்திற்குமே அவர் சொந்தமானவர். யூத மக்களை மட்டுமே மீட்கவந்தவர் அல்ல; மாறாக, ஒட்டுமொத்த மனித குலத்தையே மீட்க வந்தவர் என்பதையே இத்திருக்காட்சி பெருவிழாவானது வெளிப்படுத்துகிறது. நமக்காக பிறந்திருக்கும் இயேசு பாலனை நாமும் கண்டு அவரது ஆட்சியில் பங்குபெற்றிட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கு, இறைவன் எச்சரிக்கைகளையும், வாக்குறுதிகளையும் இறைவாக்கினர் எசாயா வழியாக உரைப்பதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்களின் பல தலைமுறைகள் மெசியாவைப் பற்றிய மறைபொருளை காண்பதற்காக காத்திருந்தார்கள். இருப்பினும், நம் காலத்தில் இருப்பவருக்கே அம்மறை பொருள் வழங்கப்பட்டுள்ளது என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் விண்ணகத் தந்தையே! உமது திருமகனின் திருகாட்சிப் பெருவிழாவை கொண்டாடும் உமது திரு அவையானது, உம் திருமகன் கொண்டு வந்த நற்செய்தியை, உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் பரம்பொருளே! நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களது குடும்பம், உறவினர்கள், இனம், மதம் என்று பார்த்து ஆட்சி செய்யாமல், எல்லா மக்களுக்கும் உரிய நல்லாட்சியை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வானகத் தந்தையே! நாங்கள் வாழும் இடங்களிலும், பங்குகளிலும் வேற்றுமைகளை பாராட்டாமல், அனைவரும் எங்களது சகோதர சகோதரிகள் என்ற உணர்வோடு அன்பு செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம தந்தையே! உம் திருமகனின் திருகாட்சிப் பெருவிழாவை கொண்டாடும் இந்நாளில், எங்கள் இல்லங்களும் உள்ளங்களும், உமது திருமகனின் அன்பையும், இரக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்களோடு இருப்பவரே! இப்பெருவிழா நாட்களில், தங்கள் குடும்பங்களோடு இருந்து, உமது ஆசீர்வாதத்தை பெறமுடியாத பல்வேறு மக்களுக்கு, உமது திருமகனின் திருக்காட்சியை காணும் பேற்றினை நீர் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.