Namvazhvu
திருத்தந்தை 45 பேரை புனிதர் நிலைக்கு உயர்த்திய திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்
Thursday, 05 Jan 2023 09:42 am
Namvazhvu

Namvazhvu

மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் பண்புகளும் மிகச்சிறப்பான செயல்களும் தற்போது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எட்டாண்டுகால திருத்தந்தை தலைமைத்துவப் பணி பற்றியும், அவர் புனிதர் நிலைக்கு தகுதிப்படுத்தியவர்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.

டிசம்பர் 31 சனிக்கிழமை காலை இவ்வுலகை விட்டு மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் தனது திருத்தந்தைப் பதிவிக்காலத்தின் போது 870 பேரை அருளாளர் நிலைக்கும், 45 பேரை புனிதர் நிலைக்கும் தகுதிப்படுத்தியப்  பெருமைக்குரியவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் மிகவும் சிறப்பாக திருஅவையை வழிநடத்தியவர் என்றும், குறுகிய கால ஆண்டு என்றாலும் அவர் புனிதர்களாக தகுதிப்படுத்திய 45 பேரும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களால் நம்பிக்கை மற்றும் புனிதத்துவத்தின் மாதிரியாக போற்றப்படுகின்றவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், ஜாக் பெர்தியூ, பெட்ரோ கலுங்சோடு, ஜியோவானி பாட்டிஸ்டா பியாமார்டா, மரிய கார்மென் சால்ஸ் ஒய் பரங்குரேஸ், மரியன்னே கோப், கேடரினா தகக்விதா, அன்னா ஷாஃபர் என்னும் எழுவரே மறைந்த திருத்தந்தை பெனடிக்ட் அவர்களால் இறுதியாக புனிதராக்கப்பட்டவர்கள்.

புனித அல்போன்சா

இந்தியாவின் கேரளாவில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறந்த புனித அல்போன்சா 2008ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் நிலைக்கு தகுதிபடுத்தப்பட்டவர். புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்ணான புனித அல்போன்சா இறைவனுடைய அன்பிற்கு சாட்சியாக இறுதிவரை மகிழ்ச்சியாகவும், கள்ளம் கபடமற்ற  புன்னகையை உதடுகளில் எப்பொழுதும் கொண்டிருந்தவர் என்று புனிதர் பட்ட நிகழ்வின் போது வத்திக்கானில் திருத்தந்தையால் புகழப்பட்டவர்.