2013 ஆம் ஆண்டில் திரு அவையின் தலைமைப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததற்குப் பின்னர், மாட்டர் எக்லேசியாயி (Mater Ecclesiae) துறவு இல்லத்தில் தங்கியிருந்தார். முதிர்வயதின் காரணமாக, கடந்த சில நாள்களாகவே இத்திருத்தந்தையின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. டிசம்பர் 28 ஆம் தேதி புதன் மாலையில் Mater Ecclesiae துறவு இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலிக்குப் பின்னர், முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு நோயில்பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டது.
டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளி மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்காகவும், அவரது உடல்நலனுக்காகவும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு இறைவேண்டல் செய்யப்பட்டது. இத்திருப்பலியை உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் ஆஞ்சலோ தெ தொனாத்திஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றினார். பிற்பகலில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்தம் அறையில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் திருத்தந்தையும் ஆர்வமுடன் பங்கெடுத்தார்.
டிசம்பர் 31, சனிக்கிழமை காலை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு வத்திக்கானின் Mater Ecclesiae துறவு இல்லத்தில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இறைபதம் சேர்ந்தார். இறைத்தந்தையிடம் சென்றார்.
காலை பத்து மணிக்கெல்லாம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வில்லத்திற்குச் சென்று அத்திருத்தந்தையின் உடல் முன்பாக அமர்ந்து செபித்தார்.
முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக, சனவரி 2, திங்கள் காலை முதல், சனவரி 4, புதன் வரை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.
அன்பும், பாசமும், பண்பும், அறிவும், ஆன்மிகமும் நிறைந்த, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு இம்மண்ணக வாழ்விலிருந்து இறுதி பிரியாவிடை அளிக்கும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 05 ஆம் தேதி வியாழன் உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நிறைவேற்றினார்.
திருத்தந்தையின் அடக்கச் சடங்கு அவரது விருப்பப்படி மிகவும் எளிமையாக நடைபெற்றது. அவர்தம் பிறந்தகமான ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளிலிருந்து மட்டுமே பிரதிநிதிகள் அஞ்சலி அரசு முறை அஞ்சலி செலுத்த அழைக்கப்பட்டனர்.
இறுதிவரை திருத்தந்தை பிரான்சிஸின் தோழமை
தனக்கு முன்பு கத்தோலிக்கத் திரு அவையில் தலைமைத்துவப் பணியாற்றிய, மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை சனவரி 01, ஞாயிறன்று மூவேளை செப உரையிலும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருந்த இந்த ஊழியருக்கு ஒன்றுசேர்ந்து நாம் நன்றிசொல்வோம் என்று கூறினார்.
இப்புதிய ஆண்டை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்துள்ள இவ்வேளையில், நம் முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்காக அவ்வன்னையின் பரிந்துரையைக் கேட்போம், நற்செய்திக்கும் திருஅவைக்கும் பிரமாணிக்கமாய் இருந்த இந்த பணியாளரைக் கொடையாகத் தந்த கடவுளுக்கு, ஒரே இதயம் மற்றும் ஒரே ஆன்மாவோடு நன்றிசொல்வோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஞாயிறு காலையில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் மரியா, இறைவனின் அன்னை பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரையிலும், இறைபதம் சேர்ந்த முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களை நினைவுகூர்ந்தார்.
நல்லுறவின் திருத்தந்தை
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், அனைவரோடும் உரையாடல் மேற்கொள்வதில் திறன் படைத்தவர் மற்றும், அதற்குச் சாட்சியாக விளங்குபவர் என்று பாராட்டப்படுகிறார்.
ஓர் இறையியலாளர் மற்றும், ஒரு திருத்தந்தை, தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ நம்பிக்கையின் காரணகாரியம் குறித்துச் சிந்தித்தார் மற்றும், போதித்தார் என்றால் அவர் ஜோசப் இராட்சிங்கர் அதாவது திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மட்டுமே எனவும், அத்திருத்தந்தை தனது ஆன்மிக உயிலின் இறுதி வரிகளிலும் இது பற்றியே பேசியிருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.