Namvazhvu
வியன்னா கர்தினால் ஷோன்போர்ன் திரு அவையில் மறைக்கல்வியின் தந்தை
Friday, 06 Jan 2023 07:29 am
Namvazhvu

Namvazhvu

மறைந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் ஷோன்போர்ன் அவர்கள், இந்த நம் காலத்தில் கத்தோலிக்க கோட்பாடுகளின் இரத்தின சுருக்கமாக அமைந்துள்ள 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏட்டில் இத்திருத்தந்தையின் பங்கு குறித்து எடுத்துரைத்துகத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியின் தந்தை  பதினாறாம் பெனடிக்ட் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் விட்டுச்சென்றுள்ள மிகப்பெரும் மரபுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ள வியன்னா கர்தினால் ஷோன்போர்ன் அவர்கள், இத்திருத்தந்தையோடு தனக்கிருந்த தனிப்பட்ட உறவு உட்பட, இவர் குறித்த பல பசுமையான நினைவுகளை வெளிக்கொணர என்னால் முடிகிறது என்பதில் மகிழ்கிறேன் மற்றும், அத்திருத்தந்தைக்கு நன்றிசொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திரிதெந்து பொதுச்சங்கம் போன்று, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் அந்த சங்கத்தின் மறைக்கல்வியை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கவில்லை என்பது பரவலாகத் தெரிந்திருப்பதுதான் என்றும், ஒருவகையில் அப்பொதுச் சங்கத்தின் கொள்கைத் திரட்டுகளே, திரு அவையின் மிகப்பெரும் மறைக்கல்வியாக கருதப்பட்டன என்றும் கூறியுள்ள கர்தினால் ஷோன்போர்ன் அவர்கள், அப்பொதுச்சங்கம் முடிந்து இருபது ஆண்டுகள் சென்று பலர், காரியங்களை மாறுபட்ட வழியில் பார்த்தனர் என்று தெரிவித்துள்ளார். 1985 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்திலும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் அடிப்படையில் மறைக்கல்வியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து வழங்குமாறு திருத்தந்தையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, 1983 ஆம் ஆண்டில் மறைக்கல்வியின் நெருக்கடி என்ற தலைப்பில், பிரான்சின் லியோன் மற்றும், பாரிசில் நடைபெற்ற கருத்தரங்கில் கர்தினால் இராட்சிங்கர் மிக முக்கியமான பங்கு வகித்தார் என்று, கர்தினால் ஷோன்போர்ன்  அவர்கள் கூறியுள்ளார்.

1986 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் விண்ணப்பத்தைக் கருத்தில்கொண்டு மறைக்கல்வி ஏடு தயாரிக்கும் பொறுப்பை கர்தினால் இராட்சிங்கரிடம் கொடுத்தார் என்றும், கர்தினால் இராட்சிங்கரின் தலைமையில் 12 கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் கொண்ட அவை உருவாக்கப்பட்டது என்றும் வியன்னா கர்தினால் கூறியுள்ளார்கர்தினால் இராட்சிங்கர் அதாவது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் தொடர்ச்சியான ஊக்கம், மற்றும், ஆன்மீகத் தந்தைமை ஆகியவற்றோடு, கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு இறுதி வடிவம் பெற்று, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் வெளியிடப்பட்டது என்றும், இம்மறைக்கல்வி ஏடு, இறையியலாளரான திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் திரு அவைக்கு விட்டுச்சென்ற மிகப்பெரும் மரபுரிமைக்குச் சான்றாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை என்றும் கர்தினால் ஷோன்போர்ன் அவர்கள் கூறியுள்ளார்